உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டிவி, யு டியூப் சேனல்களுக்கு கடிவாளம்? சட்டத்தில் திருத்தம் செய்ய ஆலோசனை

டிவி, யு டியூப் சேனல்களுக்கு கடிவாளம்? சட்டத்தில் திருத்தம் செய்ய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'வின் அதிகார வரம்பை மேலும் விரிவுபடுத்தி, அதன்கீழ், பேஸ்புக், யு டியூப் மற்றும் ஆன்லைன் மீடியா சேனல்களையும் கொண்டு வருவது குறித்த ஆலோசனைகள் துவங்கியுள்ளன. இதற்கான பரிந்துரைகளை, அரசிடம் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பார்லிமென்ட் நிலைக்குழு ஈடுபட்டுள்ளது.பார்லிமென்ட் நிலைக்குழுக்கள் கடந்த செப்., 26ல் மாற்றியமைக்கப்பட்டன. இதன்படி, தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை நிலைக்குழுவுக்கு புதிய தலைவராக பா.ஜ., மூத்த எம்.பி., நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டார்.இக்குழுவின் முதல் கூட்டம், டில்லியில் நாளை நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தின் முக்கிய அலுவலாக, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிமுறைகளை மாற்றி அமைத்து, இதன் அதிகார வரம்பை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் அதிகார வரம்பின்கீழ், பேஸ்புக், யு டியூப் மற்றும் ஆன்லைன் மீடியா சேனல்களையும் கொண்டு வருவது குறித்த ஆலோசனையும் நடைபெறவுள்ளது.பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு, அச்சு ஊடகங்களின் செயல்பாடுகளை மட்டுமே கண்காணிக்கும் அதிகாரத்தை தற்போது கொண்டுள்ளது. ரேடியோ, டிவி, இன்டர்நெட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் மீடியாக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லை.அச்சு ஊடகங்கள் என்றாலும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரங்களே தற்போது உள்ளன. எந்த ஒரு வழிமுறையையும் அல்லது விதிமுறைகளையும் பின்பற்றும்படி உத்தரவு போடும் அதிகாரம் இதற்கு இல்லை.பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா - 1978 என்ற சட்டம், இந்த அமைப்புக்கான அதிகாரங்களை இரண்டு வழிகளில் கட்டுப்படுத்துகிறது. இதன்படி, விதிமுறைகளை விதித்து அதை பின்பற்றும்படி உத்தரவிட, இந்த அமைப்புக்கு போதிய அதிகாரம் இல்லை.ஊடகத்துறையில், கடந்த 46 ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. எனவே, காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு அதிகாரத்தை வழங்கியும், அனைத்து வகையான ஊடகங்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி, 28 உறுப்பினர்கள் அடங்கிய இந்த பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்புக்கான தலைவர் பதவியில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட வேண்டும்.லோக்சபா சபாநாயகர், ராஜ்யசபா தலைவர், இந்த அமைப்பின் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் அடங்கிய குழு முடிவு செய்து, அதன்பிறகே தலைவர் பதவிக்கான நியமனம் நடக்க வேண்டும். இவ்வாறு, தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் தெளிவாக இருந்தும், நடைமுறையில் இவை பின்பற்றப்படுவது இல்லை.எனவே, இதுகுறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பரிந்துரைகளையும், அரசிடம் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பார்லிமென்ட் நிலைக்குழு ஈடுபட்டுள்ளது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை