புதுடில்லி: வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மை குறித்து, நாடு முழுதும் விவாதம் எழுந்துள்ள நிலையில், 'வாக்காளர் பட்டியலில் இனிமேல் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், அது, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அடிப்படையில் தான் இருக்கும்' என, தேர்தல் கமிஷன் நேற்று கூறியுள்ளது.இதுகுறித்து, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:ஓட்டளிப்பதை வாக்காளர்களுக்கு இனிமையான தருணமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். அதிகபட்சம், 1,200 வாக்காளர்களுக்கு மேற்பட்டு எந்த ஓட்டுச்சாவடியும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். அதுபோல, அதிக மக்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள், காலனிகளிலும் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட ஆலோசனையின் படி, வாக்காளர் பட்டியலில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், அது சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அடிப்படையில் தான் இருக்கும்.இந்த விவகாரத்தில், அந்த துறை அதிகாரிகளுடன் இணைந்து, தேர்தல் கமிஷன் செயல்படும். மாற்றங்கள் செய்யப்படத் தேவையில்லை எனும் போது, இப்போதைய வாக்காளர் பட்டியலே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.தேர்தல் நடைமுறையை வலுவானதாக மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் போன்றோர் அடிக்கடி சந்தித்து பேசி, வரும் 31ம் தேதிக்குள் அடிப்படையான பிரச்னைகளை தீர்க்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.ஆதார் அடையாள அட்டை எண்ணுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பதற்கான நடைமுறைகளை ஆராய, ஆதார் ஆணையத்துடன் தேர்தல் கமிஷன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.