புதுடில்லி: பிரதமரின் அலுவலகம், டில்லியில் சவுத் பிளாக்கில் உள்ளது; இது, ஜனாதிபதி மாளிகைக்கு இடதுபுறம் உள்ளது. வலது புறம் நார்த் ப்ளாக். இங்கு நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகங்கள் உள்ளன.மோடி பிரதமராவதற்கு முன், பிரதமர் அலுவலகத்திற்குள் செல்வது, அவ்வளவு கடினமான காரியம் அல்ல; பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு பின், அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சர்களையோ பார்த்து விடலாம். ஆனால், மோடி பிரதமரான பின், எல்லாமே மாறிவிட்டது; எவருமே சுலபமாக உள்ளே நுழைந்து விட முடியாது.'பிரதமர் அலுவலகத்திற்கு வருபவர் யார்; எதற்காக வருகிறார்; யாரைப் பார்க்க வேண்டும்' என, அனைத்து விபரங்களும் தர வேண்டும். அத்துடன், வருபவரின் ஜாதகத்தையே பாதுகாப்பு அதிகாரிகள் ஆராய்ந்து விடுகின்றனர். முன்பெல்லாம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், சுலபமாக பிரதமர் அலுவலக கட்டடத்திற்குள் செல்லலாம்; இப்போது நினைத்து கூடப் பார்க்க முடியாது.ஆனால், 'எங்களுக்கு ஒரு பிரச்னை' என, பிரதமர் அலுவலகத்திற்கு, 'இ - மெயில்' வந்தால், உடனேயே அது கவனிக்கப்பட்டு, அதற்கான தீர்வும் காணப்படுகிறது; இதற்கென ஒரு பெரிய, 'டீம்' பிரதமர் அலுவலகத்தில் உள்ளது.மீண்டும் மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள, தேவேந்திர பட்னவிஸ், பிரதமர் மோடியை பின்பற்றி, மும்பையில் தலைமைச் செயலகத்தில் பலவித கட்டுப்பாடு களை கொண்டு வந்துள்ளார். 'தேவையில்லாமல் யாரும் இங்கு வரக்கூடாது' என்பது, அவரது குறிக்கோள். இதற்காக கண்ணாடி கதவுகள், பலவித தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; நிருபர்களும், தங்கள் இஷ்டப்படி தலைமைச் செயலகத்தில் நடமாட முடியாது.'அமைச்சர்கள் கட்சிக்காரர்களையோ, மக்களையோ சந்திக்க வேண்டும் என்றால், கட்சி அலுவலகத்தை பயன்படுத்துங்கள்' என, முதல்வர் கட்டளை இட்டுள்ளாராம். மேலும், 'வாரத்திற்கு ஒருமுறை, அமைச்சர்கள் மக்கள் தர்பார் நடத்தி, மக்களின் குறைகளைக் கேட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது, கட்சி அலுவலகத்தில் நடைபெற வேண்டும்' என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர்கள் நுழைவதை தடுக்கவே இந்த ஏற்பாடாம்.