| ADDED : ஜன 26, 2025 05:27 AM
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமத்தில் கோடிக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.வழி நெடுக இலவச உணவு, பக்தி கீதங்கள் இசைத்தல், இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் நடன நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் என, பல விஷயங்களை ஏற்பாடு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பக்தர்கள் பாராட்டி வருகின்றனர். மற்றொரு பக்கம், வண்டியில் தின்பண்டங்கள், டீ விற்பவர்களுக்கு கொண்டாட்டம்; ஏனெனில், இவர்களுக்கு ஒரு நாளைக்கு, 20,000 ரூபாய்க்கு மேல் வருமானம் குவிந்து வருகிறது.இதையெல்லாம் விட இன்னொரு விஷயம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. போலீஸ் என்றாலே முரட்டு ஆட்கள் என்கிற பிம்பம் உள்ளது; அதிலும் உ.பி., போலீஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், கும்பமேளாவிற்கு வருவோர், நட்பாக உள்ள போலீசாரை பாராட்டுகின்றனர்.ரயில் நிலையத்திலிருந்து சங்கமம் வரை பக்தர்களுடன் இனிமையாக பேசி வழிகாட்டுகின்றனர் போலீசார்.வயதானவர்களின் கைகளைப் பிடித்து, பாதுகாப்பாக செல்ல வழிகாட்டுகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் ரயில் வாயிலாக வருவதால், பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் போலீஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது.ரயில் நிலையமும் எந்த நேரமும் சுத்தமாக உள்ளது. கும்பமேளாவில் போலீசார் எப்படி பக்தர்களுடன் நட்பாக பழக வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது குறித்து, ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.