அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா ஆகியோர் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தன. அதனால், வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடந்த ஏப்ரல் 11ம் தேதி, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p6x3y58w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனுமதி இல்லை கடந்த லேக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் இருந்த பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க, பழனிசாமி மறுத்து விட்டார். அப்பா -- மகன் மோதலால், பா.ம.க.,வும் கூட்டணிக்கு வரவில்லை. இதனால், ஐந்து மாதங்களாகியும் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் வேறு எந்த புதிய கட்சியும் சேரவில்லை. கடந்த ஜூலை 26ல், தமிழகம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க அனுமதி கேட்டு, பன்னீர்செல்வம் கடிதம் எழுதியும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம், கடந்த ஜூலை 31ம் தேதி தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து, தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக, தினகரன் நேற்று முன்தினம் அறிவித்தார். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் சேர்க்க, பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர்களை கூட்டணியில் சேர்க்கலாம் என்ற அமித் ஷாவின் யோசனையையும், பழனிசாமி ஏற்கவில்லை. இதனால், வரும் தேர்தலில் தனித்து விடப்படுவோம் என்ற அச்சம், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு ஏற்பட்டு உள்ளது. சிக்கல் வரும் எனவே, மூவரும் கைகோர்த்து, பழனிசாமிக்கு எதிராக செயல்பட முடிவு செய்துள்ளதாகவும், அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க, விஜயின் த.வெ.க.,வுடன் சேரவும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பழனிசாமி மீதான அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி போன்ற மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், அவர்கள் முயற்சித்து வருவதாக அ.ம.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்த்தாலும், கூட்டணியில் சேர்த்தாலும், தன் தலைமைக்கு சிக்கல் வரும்; கட்சித் தலைமை பொறுப்பு தன்னை விட்டு நழுவி விடும் என, பழனிசாமி நினைக்கிறார். கடந்த 2021ல், தினகரன், சசிகலா இல்லாமல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, 75 இடங்களை வென்றது. வரும் தேர்தலில் பன்னீர்செல்வமும் இல்லாமல், 100 இடங்களை தாண்டி விடலாம் என, பழனிசாமி நம்புகிறார். அதனால்தான் மூவரையும் கூட்டணியில் கூட சேர்க்க மறுக்கிறார். கட்சியை மீறி தனியாக யாரும் சாதிக்க முடியாது என்பதில் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதனால்தான் அதிருப்தியை வெளிப்படுத்திய செங்கோட்டையனையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
செங்கோட்டையன் தொகுதி பறிக்க பழனிசாமி திட்டம்?
அ.தி.மு.க., சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில், செங்கோட்டையன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989 சட்டசபை தேர்தலில், 'ஜா' அணி, 'ஜெ.,' அணி போட்டியிட்டபோது, ஜெயலலிதாவிடம் பேசி, பழனிசாமி போட்டியிட 'சீட்' வாங்கித் தந்தவர் செங்கோட்டையன். 'அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும்' என, செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார்; இதை பழனிசாமி ஏற்கவில்லை. தன்னை மீறி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்ததையும் விரும்பவில்லை. இதனால், வரும் சட்டசபை தேர்தலில், செங்கோட்டையனின் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில், தன் சம்பந்தியின் உறவுக்காரர் ஒருவரை போட்டியிட வைக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ள தகவல் செங்கோட்டையனுக்கு தெரியவந்தது. அதேபோல, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகனை போட்டியிட வைக்கவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், செங்கோட்டையனை பேச அனுமதிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், அனைவரும் ஒன்றுபட வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளார்.
சமரசத்திற்கு அமித் ஷா முயற்சி
அ.தி.மு.க., ஒன்றுபட்டால் தான் வெற்றி சாத்தியம் என்பதில், அமித் ஷா உறுதியாக இருப்பதாகவும், பீஹார் சட்டசபை தேர்தல் பணிகள் முடிந்த பின், பன்னீர்செல்வம், தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அவர் மேற்கொள்ள இருப்பதாகவும், பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -