புதுடில்லி: தேர்தல் தேதிகள் அறிவித்தபின், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்; இதனால், மாநில மற்றும் மத்திய அரசு எந்தவித சலுகைகளையும் மக்களுக்கு அறிவிக்க முடியாது. இதை எப்படி சமாளிப்பது? இதற்கு சரியான உதாரணம், மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை, தேர்தல் கமிஷன் இம்மாதம் 15ல் அறிவித்தது; இது அனைவரும் எதிர்பார்த்தது தான். இந்த அறிவிப்பு வரும் முன்னரே, அதாவது, இந்த அக்டோபர் மாதத்தில், 200 முக்கிய முடிவுகளை எடுத்து விட்டது, மஹாராஷ்டிரா அமைச்சரவை. மக்களின் வரிப்பணத்தில், அவர்களுக்கான சலுகைகளை இந்த முடிவுகள் வாயிலாக அறிவித்து விட்டார் ஷிண்டே.தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு, மஹாராஷ்டிர அரசு துக்கம் அறிவித்து இருந்தது. ஆனாலும், அப்போதும் தன் அமைச்சரவையைக் கூட்டினார் ஷிண்டே. இதில் ஏறக்குறைய, 70க்கும் மேற்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளனவாம்.மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இலவச அறிவிப்புகளை வாரி வீசியுள்ளார், ஷிண்டே. மஹாராஷ்டிராவிற்கு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக கடன் இருந்தும், அது குறித்து ஷிண்டே கவலைப்படவில்லை.இந்நிலையில், தேர்தலுக்கு முன் முதல்வர் அறிவித்துள்ள இலவசங்கள், உண்மையிலேயே அமல்படுத்தப்படுமா என, பா.ஜ., கூட்டணி கட்சியினரே சந்தேகப்படுகின்றனர்.