வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மா.செ.,க்கள் போன்றோருக்கு, பல்வேறு அசைன்மென்ட்களை அக்கட்சியின் தலைமை கொடுத்துள்ளது. இதற்காக, தேர்தல் முடிந்ததும் சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அக்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., அடுத்தும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக, ஓராண்டுக்கும் மேலாக, ஆட்சிப் பணியோடு, கட்சிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களை கவரும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுகிறது. இருந்த போதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.,வுக்கு ஏராளமான பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. அதையெல்லாம், கட்சியின் மேல் மட்டத் தலைவர்களை அனுப்பி, சரி செய்து வருகிறது தி.மு.க., தலைமை. இந்நிலையில், தி.மு.க., தனிப்பட்ட முறையில் எடுத்த சர்வேக்களும், அரசு சார்பில் உளவுத்துறையினர் எடுத்த சர்வேயிலும், அக்கட்சிக்கு சில இடங்களில் சாதகமான சூழல் இல்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சமீபத்தில் கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி பேசிய முதல்வர் ஸ்டாலின், 'கட்சிக்குள் இருப்போரிடையே இருக்கும் கோஷ்டி பூசலே, தி.மு.க.,வுக்கு சரிவை ஏற்படுத்தும் என தெரிய வந்திருக்கிறது. அது தொடர்பான உறுதியான தகவல்கள் வந்தால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன். 'இருந்தாலும், கட்சியினர் உற்சாகத்தோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதற்காக, கட்சி நிர்வாகிகளாக இருப்போர் அனைவருக்கும், தேர்தலுக்குப் பின், பல்வேறு பரிசுகளை அளிக்கக் காத்திருக்கிறேன். 'ஒவ்வொரு மாவட்டத்திலும், யாரெல்லாம் கூடுதல் வெற்றி பெற்று தருகின்றனரோ, அவர்களுக்கு ஆட்சியில் முக்கியத்துவம் தருவதோடு, அந்த நிர்வாகிகளின் விசுவாசிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல்கள், கட்சியில் முக்கியப் பொறுப்புகள் உள்ளிட்டவற்றில், முக்கியத்துவம் அளிக்கப்படும்' என கூறியுள்ளார். இதையடுத்து, கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தேர்தலுக்கான பணியில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி வசூலில் ஏற்பட்ட முறைகேட்டைத் தொடர்ந்து, தற்போது மேயராக இருக்கும் இந்திராணியை மாற்ற தலைமை முடிவெடுத்துள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளரான இந்திராணியை மாற்றியதும், அப்பொறுப்பில் தன்னுடைய ஆள் ஒருவரை அமர்த்த, லோக்கல் அமைச்சரான மூர்த்திமுடிவெடுத்துள்ளார். அதற்காக, சமீபத்தில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்த மூர்த்தி, 'முதல்வர் அறிவுறுத்தல்படி, மதுரை மாவட்டத்தின் பத்து சட்டசபைத் தொகுதிகளிலும், தி.மு.க.,வுக்கு வெற்றியை ஈட்டித் தருகிறேன். என்னுடைய ஆதரவாளர் ஒருவருக்கு, அடுத்த மேயர் பொறுப்பு வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இருக்கும், அமைச்சர்களும், மா.செ.,க்களும், ஒவ்வொருவிதமான கோரிக்கை களுடன் தலைமையை அணுகி உள்ளனர். இவ்வாறு அந்தவட்டாரங்கள் கூறின - நமது நிருபர் -.