உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரை மாநகராட்சி மேயர் மாற்றத்தில் தடுமாற்றம்: உள்குத்து அரசியலால் தி.மு.க., தலைமை குழப்பம்

மதுரை மாநகராட்சி மேயர் மாற்றத்தில் தடுமாற்றம்: உள்குத்து அரசியலால் தி.மு.க., தலைமை குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு வழக்கில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைதானதையடுத்து, 'மேயர் மாற்றப்படுவார்' என தி.மு.க.,வினர் எதிர்பார்த்தனர். ஆனால், அடுத்த மேயராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் தி.மு.க., தலைமை உள்ளது. மேயரின் பதவியை பறித்தால், மா.கம்யூ.,வைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜனிடம் மாநகராட்சியின் பொறுப்பு செல்லும். அதனாலேயே தி.மு.க., தலைமை தயங்குவதாக கூறப்படுகிறது. மதுரை தி.மு.க.,வில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்டச் செயலர்கள் தளபதி, மணிமாறன் என நான்கு பிரிவாக செயல்படுகின்றனர். மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் சிக்கியவர்களில் நான்கு பேரின் ஆதரவாளர்களும் உள்ளனர். முறைகேடு வெளிச்சத்துக்கு வரத் துவங்கியபோது, மூர்த்தி ஆதரவாளரான, மண்டல தலைவர் வாசுகியின் பெயர் அடிபடவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் நேரு நடத்திய விசாரணையிலும், வாசுகியிடம் ராஜினாமா கடிதம் பெறவில்லை. ஆனால், அன்று இரவு முதல்வர் அலுவலகம் வெளியிட்ட ராஜினாமா கடித அறிவிப்பில், வாசுகியின் பெயர் உட்பட ஐந்து மண்டல தலைவர்கள் மற்றும் இரண்டு நிலைக்குழு தலைவர்கள் பெயர்கள் இருந்தன. முற்றுப்புள்ளி இதன் பின்னணியில் அமைச்சர் மூர்த்திக்கு எதிரான சிலரின், 'உள்குத்து அரசியல்' இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மேயர் இந்திராணி மாற்றப்பட்டால், வாசுகியை மேயராக்க வேண்டும் என்ற அமைச்சர் மூர்த்தியின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதுபோல, அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர்களே மேயர், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், நிலைக்குழு தலைவர் என பல பதவிகளை பெற்றுள்ளனர். தற்போது சொத்து வரி முறைகேட்டில், மேயரின் கணவர் துவங்கி, மண்டல தலைவரின் கணவர் மிசா பாண்டியன், நிலைக்குழு தலைவரின் கணவர் கண்ணன் என பலர் சிக்கியதால், அமைச்சர் தியாகராஜன் கடும் அதிருப்தியில் உள்ளார். தற்போது மேயரை மாற்றினால், தன் ஆதரவாளர் ஒருவரை பரிந்துரைக்கும் முடிவில் தியாகராஜன் இல்லை. மதுரை மாநகர் தி.மு.க.,வில் பகுதிகள் பிரிப்பு, மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கே கட்சிப் பதவிகளையும் வழங்கியது போன்ற காரணங்களால், மாநகர செயலர் தளபதி மீதும் தி.மு.க., தலைமை அதிருப்தியில் உள்ளது. இது குறித்து, மதுரை தி.மு.க.,வினர் கூறியதாவது: மதுரை மேயர் மாற்றப்பட்டால், அவருக்கு பதில், தங்கள் ஆதரவாளர் யாரையாவது பரிந்துரை செய்வதற்கு, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் என யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆர்வம் இல்லை அதே நேரத்தில், மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதுபோல், மேயர் இந்திராணியையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டு, பதவியை பறிக்க தி.மு.க., தலைமை தயங்குகிறது. ஏனென்றால், புதிய மேயரை தேர்வு செய்யும் வரை, துணை மேயர் வசம் மாநகராட்சியின் பொறுப்பு செல்லும். தற் போது, துணை மேயராக மா.கம்யூனிஸ்டைச் சேர்ந்த நாகராஜன் உள்ளார். ஏற்கனவே, மதுரையில் தி.மு.க., -- மா.கம்யூ., இடையே மோதல் நீடிப்பதால், உள்ளூர்தி.மு.க.,வினர் எதிர்ப்பை கட்சித் தலைமை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே, மேயரை மாற்றுவதில் தி.மு.க., தலைமை ஆர்வமில்லாமல் உள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை