கோவை: ''இது, 'லா நினா' பருவநிலை ஆண்டை நோக்கி நகரும் காலகட்டம் என்பதால், வரவிருக்கும் வடகிழக்குப் பருவத்தில் தமிழகத்தில் இயல்பான அளவு மழை பொழியும்,'' என, கோவை, வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.சில ஆண்டுகளாகவே, பருவமழை பருவம் தவறி பெய்கிறது. இயல்பான மழை பெய்வதில்லை அல்லது இயல்பை விட அதிகமாக பெய்கிறது. இதனால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. ஏன் இந்த நிலை; இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் உள்ளிட்ட கேள்விகளுடன், கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியை அணுகிய போது அவர் கூறியதாவது:வறண்ட வானிலை, உயர் வெப்ப நிலை நிலவுவது வழக்கமான ஒன்று தான். பொதுவாகவே 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாகவே பதிவாகியுள்ளது. தற்போது, சூரியக் கதிர்கள் நம் தலைக்கு நேராக இருப்பதால், கூடுதல் வெப்பத்தை உணர்கிறோம். செப்.,ல் வெப்பநிலை சற்று உயர்ந்தால், வடகிழக்குப் பருவமழை இயல்பாக இருக்கும்.தென்மேற்குப் பருவமழை, தமிழகம் முழுக்க பரவலாக சராசரியை விட 4 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இன்னும் இம்மாத கடைசி வரை, இப்பருவமழைக்கான காலம் உள்ளது. 10 முதல் 20 மி.மீ., வரை மழை பெய்யலாம். காவிரி டெல்டா பகுதியில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாகப் பெய்திருக்கிறது. ஆனால், மே இறுதியில் கோடை மழைப்பொழிவு நன்றாக இருந்தது. தர்மபுரி, சேலம் போன்ற வடமேற்கு மண்டலம் மற்றும், கோவை, ஈரோட்டை உள்ளடக்கிய மேற்கு மண்டலங்களில் 30 சதவீதம் வரை மழைப்பொழிவு குறைவாக இருந்தது. இங்கும், மே மாதத்தில் நல்ல மழை இருந்தது.வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகி , ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இருக்கும் ஈரப்பதத்தை காற்றழுத்தத் தாழ்வுநிலை அள்ளிச் சென்றதால், நம் பகுதியில் வெப்பம் அதிகரித்து விட்டது.'எல் நினோ' பருவநிலை ஆண்டு முடிந்து, சமநிலையில் இருந்து 'லா நினா'வை நோக்கி நகர்கிறோம். எனவே, வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
'சராசரி மழைப்பொழிவு இருக்கும்'
வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா என்ற கேள்விக்கு, ''வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்., 15 - 20ல் துவங்கி, டிச., 15 வரை பெய்யும். மாறுபடும் பருவநிலைகளால், பருவமற்ற மழைப்பொழிவு அடிக்கடி நிகழ்கிறது. எனவே, இப்போதைக்கு, சராசரியாக வடகிழக்கு பருவமழை பொழியும் என கணிக்கிறோம்.வங்காள விரிகுடாவில் எந்த அளவு தாழ்வழுத்த நிலை உருவாகிறதோ, அதைப்பொறுத்தே வடகிழக்கு பருவமழையின் அளவு அமையும். குறைந்தது நான்கு தாழ்வழுத்தங்கள் உருவானால் தான், தமிழகத்துக்கு தேவையான நல்ல மழை கிடைக்கும். நீண்ட காலத்துக்கு முன்பே, தாழ்வழுத்த நிலையை யூகிக்க முடியாது. எனினும், சராசரி மழைப்பொழிவு இருக்கும்,'' என்றார் துணைவேந்தர் கீதாலட்சுமி.