பெங்களூரு : 'முடா' வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் முதல்வர் சித்தராமையா குடும்பத்தினருக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க கூடும் என்பதால், அவரது குடும்பத்தினர் நடுக்கத்தில் உள்ளனர்.முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, அவரது அண்ணன் மல்லிகார்ஜுனசாமி, மைசூரு புறநகரில் இருந்த நிலத்தை சீராக கொடுத்திருந்தார். இந்த நிலத்தை லே அவுட் அமைக்க, 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. இந்த நிலத்துக்கு மாற்றாக, மைசூரின் பிரபலமான பகுதியில், கோடிக்கணக்கில் மதிப்புள்ள 14 மனைகளை வழங்கியது. விசாரணை
சித்தராமையா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனைகள் பெற்ற குற்றச்சாட்டை எதிர் கொண்டுள்ளார். இது குறித்து சமூக ஆர்வலர் ஆபிரஹாம் அளித்த புகாரின்படி, மைசூரு லோக் ஆயுக்தாவில் வழக்கு பதிவாகி, விசாரணை நடக்கிறது.மற்றொரு பக்கம் அமலாக்கத்துறையும், முடா மனை முறைகேடு குறித்து விசாரணையில் இறங்கியுள்ளது. லோக் ஆயுக்தா அதிகாரிகள், ஏற்கனவே முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, இவரது அண்ணன் மல்லிகார்ஜுனசாமி உட்பட, பலரிடம் விசாரணை நடத்தியது. பதவியில் இருக்கும் போதே, லோக் ஆயுக்தா விசாரணையை எதிர்கொண்ட முதல் முதல்வர் சித்தராமையாதான்.இதற்கிடையில் அமலாக்கத் துறையும், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் காங்கிரஸ் எம்.பி., குமார் நாயக் உட்பட பலரிடம் விசாரணை நடத்தியது. முடா முன்னாள் கமிஷனர் நடேஷுக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அளித்துள்ளது.சமீபத்தில் நடேஷ் உட்பட பலரின் வீடுகளில் சோதனை நடத்தி, நான்கு பெரிய பைகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றினர். இதை ஆய்வு செய்ததில், இவர்கள் போலியான ஆவணங்கள் உருவாக்கி, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகளை விற்பனை செய்திருப்பது தெரிந்தது. இது குறித்து விளக்கம் பெறும் நோக்கில், சம்மன் அளித்துள்ளனர். குறி வைப்பு
முடாவில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளையும், அமலாக்கத்துறை குறி வைத்துள்ளது. ஒருவர் பின் ஒருவராக சம்மன் அனுப்பி, கேள்விகளால் குடைந்தெடுக்கிறது. இவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 29ம் தேதி, மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கங்கராஜுவிடம், முக்கியமான ஆவணங்களை பெற்று கொண்டனர். முடா முறைகேடு விவகாரம் சூடு பிடித்ததும், உடல் ஆரோக்கியத்தை காரணம் காட்டி, முடா தலைவர் பதவியை ராஜினாமா செய்த, முதல்வருக்கு நெருக்கமான மரிகவுடாவிடம், அமலாக்கத் துறையினர் துருவி, துருவி விசாரித்தனர்.வழக்கு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, இவரது அண்ணன் மல்லிகார்ஜுன சாமிக்கு, எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.இதற்கிடையில், மைசூரு லோக் ஆயுக்தா அதிகாரிகள், முடா சம்பந்தப்பட்ட அனைவரிடமும், மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். தற்போது ஆவணங்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.