உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புழுக்கள் கூட 4 அடி நகரும் தி.மு.க.,வின் குழுக்களில் இல்லை நகர்வு; ஆசிரியர்கள் குமுறல்

புழுக்கள் கூட 4 அடி நகரும் தி.மு.க.,வின் குழுக்களில் இல்லை நகர்வு; ஆசிரியர்கள் குமுறல்

மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், பழைய, பங்களிப்பு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய மாநில அரசு குழு அமைத்துள்ளது. இது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கத்தை திசை திருப்பும் எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இதன் எதிரொலியாக ஆசிரியர்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் 'புழுக்கள் கூட நான்கு அடி நகரும்; தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்படும் குழுக்கள் நகராது' என ஆதங்கத்தை வெளிப்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் முக்கிய வாக்குறுதியாக ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை நம்பி அத்தேர்தலில் ஒட்டுமொத்த ஆதரவையும் அளித்து தி.மு.க., வெற்றிக்கு அரசு ஊழியர்கள் முக்கிய பங்காற்றினர். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான பெரும்பாலான வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 2026ல் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. அதை சமாளிக்கும் வகையில் தான் தற்போது தமிழக அரசு, இக்குழுவை அமைத்து 9 மாதங்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. பொதுவாக ஒரு பிரச்னையை ஆராய இதுபோன்ற குழுவை அரசு அமைத்தால் அது பெயரளவில் தான் செயல்படும். முழுமை பெற்று தீர்வு ஏற்படாது என்ற விமர்சனம் உள்ளது.இதனால் இப்போது ஏற்படுத்தப்பட்ட இக்குழு மீது எரிச்சலுற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. இதன் எதிரொலியாக ஆசிரியர்கள் குழுக்களில், 'புழுக்கள் கூட நான்கு அடி துாரம் நகரும்; ஆனால் தி.மு.க., அமைக்கும் குழுக்கள் நகராது. நம்மை ஏமாற்றி திசை திருப்பும் நாடகம் இது... 'என்ற விமர்சனம் பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் 'வைரலாகி' வருகிறது.

நம்பிக்கையில்லை

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு விஷயத்திற்காக அரசு குழு அமைத்தாலே அந்த விஷயம் கிடப்பில் போடப்படும் என்பது தான் அர்த்தம். இதுவரை பொருளாதார வல்லுநர் குழு, கொரோனா கண்காணிப்புக் குழு, சமூகநீதி கண்காணிப்புக் குழு, நீட் தேர்வு ஆய்வுக் குழு, ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் குழு, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழு, இணையவழி சூதாட்ட ஆய்வுக் குழு, நகைக்கடன் தள்ளுபடி ஆய்வு குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டன.நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதா? சமீபத்தில் 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நடந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழு இதுவரை மூன்று முறை கூடியது. பிப்., 4ல் நான்காவது முறையாக கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் ரத்து செய்யப்பட்டது. மறுதேதி குறிப்பிடவில்லை. இப்படி தான் ஒவ்வொரு குழுவும் செயல்படுகிறது. இதனால் குழுக்கள் மீது நம்பிக்கையில்லை என்றனர்.இது ஏமாற்று வேலை; குழுவை கலையுங்கள்தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சி முடிய ஓராண்டு இருக்கும் சூழலில் காலம் கடந்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2016ல் அ.தி.மு.க., ஆட்சியில் பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சாந்தா ஷீலா நாயர் தலைமையிலும், அதன் பின் ஸ்ரீதர் தலைமையிலும் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.2021 ல் தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைகள் செய்யப்பட்டதாகவும், அந்த வல்லுநர் குழு அறிக்கை தமிழக அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் 2022--2023, 2023--2024, 2024--2025 நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட நிதி நிலை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஜன.,11ல் அமைச்சர் தங்கம் தென்னரசு 'மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை குழு அமைத்து தமிழகத்தில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்' என தெரிவித்தார். அப்போதே 'தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டம் திணிக்கப்படுவதாக' எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். தற்போது மேலும் ஒரு புதிய விஷயத்தை முன்வைத்து ஒரு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்று வேலை. இதனால் யாருக்கும் பயன் இருக்காது. இக்குழுவை உடனே கலைக்க வேண்டும். தேர்தல் வருவதற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Mahendran R
பிப் 27, 2025 23:17

எழுதிய கருத்து என்னவாயிற்று?


Mahendran R
பிப் 27, 2025 23:15

அரசு இயந்திரம் சரியாக இயங்க வேண்டும் என்றால் அரசு ஊழியர்கள் வேண்டும். எம். பி, எம் எல்.ஏ, மந்திரிகளுக்கு எல்லாம் பென்ஷன் வழங்கும்போது, அவர்களுடைய பணத்தை எடுத்து வேறு ஏதோஏதுக்கும் வீண் விரயம் செய்து விட்டு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது யார், நீங்க சொன்னதை நம்பியவர்கள். அவர்களுடைய வயிற்றெரிச்சலை கொட்டிக்காதீர்கள்.


sankar
பிப் 09, 2025 07:29

தலைப்பு மிகவும் சிறப்பு


Mayilvaganan S
பிப் 07, 2025 15:40

மொத்தமாக வாக்களித்து வாழ்க்கை தொலைத்து இப்போ புலம்பி என்ன ஆகப்போகிறது..


Ganapathi Amir
பிப் 06, 2025 17:29

மெத்த படித்த கட்டுக்கோப்பான சங்கங்கள் மூலம் ஆலோசித்து முடிவெடுக்கக்கூடிய அரசு ஊழியர்களையே ஏமாற்றும் இந்த அரசு ... படிக்காத.. வெறுங் கூச்சல் போடும் கூட்டமான பெருங் கூட்டத்தை எப்படி எல்லாம் ஏமாற்றும் ...? கொஞ்சம் சிந்திச்சு பாருங்க.. தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை... அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண்ணாவது போயிடனும்னு நினைக்கற கூட்டம் இருக்கும் வரை அரசு எதையும் தைரியமாக செய்யும்...


robinson robinson
பிப் 06, 2025 15:08

வரும் சட்டமன்ற தேர்தலில் தி மு க விற்கு அரசு ஊழியர்களால் நிச்சயமா க எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கமுடியும்


Bhaskaran
பிப் 06, 2025 13:41

அரசின் வருவாயில் பெரும்பங்கு ஊதியமாக வரும் ஓய்வூதியம் ஆகவும் போய்விட்டால் நலத்திட்டங்களின்கதி இவர்கள் ஓட்டே போடவேண்டாம்.அரசு இவர்களின் கோரிக்கைக்கு ஒருநாளும் செவிசாய்க்காது .தனியார் நிறுவனங்களில் 20000 சம்பளம் கூட வாங்காமல் பணிபுரியும் தொழிலாளர் நிலைமை யோசிங்க இவங்களுக்கு தினமும் வருமானம்


தேவராஜன்
பிப் 06, 2025 10:43

இது திராவிஷ மாடல். கவனிக்க வேண்டிய இடத்தில் கவனித்தால்.....


Yes your honor
பிப் 06, 2025 10:09

அரசு ஊழியர்கள் அரசிற்கு தங்கள் பங்களிப்பாக தக்க நேரத்தில் என்ன செய்தார்கள், எந்த ஒரு வேலை நடக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டும், அப்பொழுதும் நாட்கணக்கில் இழுத்தடிப்பார்கள். ஸீட்டில் உட்காருவதற்கு இவர்களுக்கு பிடிக்காது, டீ சாப்பிட சென்றுவிடுவார்கள், பிறகு லஞ்சு சாப்பிட சென்றுவிடுவார்கள், பிறகு மறுபடியும் டீ ஸ்நாக்ஸ் சாப்பிட சென்றுவிடுவார்கள். இவர்களின் இந்த கடுமையான உழைப்பிற்கு கொடுக்கும் சம்பளமே அதிகம். இதில் ஒய்வு பெற்றபிறகு இவருக்கு, இவர் போய்சேர்ந்த பிறகு இவரது மனைவிக்கு, அவருக்கு அப்புறம் குடும்பத்தில் திருமணமாகாத பெண் இருந்தால் அவருக்கு என்று இவர்கள் வேலைசெய்த கொடுமைக்கு ஆண்டாண்டாக படியளக்க வேண்டும். பிறகு, 30,000 கோடி எப்படி ஆட்டையைப் போடுவதாம்.


ராமகிருஷ்ணன்
பிப் 06, 2025 09:24

திமுக இதுவரை அமைத்த குழுக்கள் என்னவாயிற்று. யோசித்து பாருங்க. அதாவது இந்த குழு பழைய ஓய்வூதியத் திட்டத்தை குழி தோண்டி பொதைக்க அமைக்கப்பட்ட குழு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை