உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அகழாய்வு: வட்டப்பானையில் வண்ணக்கோலங்கள்

அகழாய்வு: வட்டப்பானையில் வண்ணக்கோலங்கள்

கொங்கல் நகரம்

பழைய சோழ - சேர நாடுகளுக்கு இடையில் கரூர், நெகமம், முசிறி உள்ளிட்ட நகரங்களை இணைத்த கொங்குப்பெருவழிப் பகுதியில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் உள்ளது, கொங்கல் நகரம் என்ற கிராமம்.இந்த கிராமத்தில் செய்த கள ஆய்வில், இரும்பு காலம் மற்றும் சங்க கால தடயங்கள் கிடைத்தன. இதையடுத்து, வாழ்விடப் பகுதிகள் மற்றும் புதைப்பிடப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 2024-25 பருவத்தில், அகழாய்வு இயக்குநர் காவ்யா தலைமையில் முதல் கட்ட அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.

வாழ்விடம்

வாழ்விடப் பகுதியில், 11 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. அவற்றில் இருந்து, 927 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில், சூதுபவளம், செவ்வந்திக்கல், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணிகள் என பெண்களுக்கான ஆபரணங்கள் முக்கிய தொல்பொருட்களாக கிடைத்துள்ளன. மேலும், பானை வனையும், கல் இரும்பு மற்றும் செம்பால் ஆன பொருட்கள் வட்டச்சில்லுகள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை 200க்கும் மேற்பட்ட கீறல் குறியீடு உள்ள பானை ஓடுகள் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளனஇவை, எழுத்து உருவான காலத்திற்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு சான்றாக உள்ளன. இங்கு கிடைத்த கரிமப் பொருட்கள், தாவர மற்றும் விலங்கு எச்சங்கள் சேகரிக்கப்பட்டு காலக்கணிப்பு மற்றும் அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

புதைப்பிடம்

இங்குள்ள புதைப்பிடங்களில் கல் பதுக்கை முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சதுர வடிவில் நான்கு பலகை கற்கள் நிறுத்தப்பட்டு, அதன்மீது, ஒரு பலகை கல்லால் மூடப்பட்டுள்ளது. அவற்றின், கிழக்குப்பக்க பலகைக்கல்லில் வட்டவில் துளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு இருக்கலாம் என, அனுமானிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஐந்து கல் பதுக்கைகள் இங்கு கிடைத்து உள்ளன. சில பதுக்கைகளில் மட்டும் மனித எலும்புகள் இருந்தன. பதுக்கைகளுக்குள் சடங்கு கலையங்களோடு, பெண்கள் பயன்படுத்தும் சங்கு வளையல்கள் மற்றும் மை தீட்டும் அஞ்சனக்கோல்கள் அதிகம் கிடைத்துள்ளன. இவை தவிர, சிவப்பு அல்லது செம்பழுப்பு நிறம் பூசப்பட்ட பானை ஓடுகள் மற்றும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகளும் கிடைத்து உள்ளன.

ரஸட் கோட்டட் வேர்

இங்கு, அதிகளவில் ரஸட் கோட்டட் வேர் எனும் செம்பழுப்பு அல்லது வெண்சிவப்பு நிற பூச்சால் அலங்காரம் செய்யப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றை, பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஆந்திரா பகுதிகளில் முதலில் கண்டறிந்ததால், இவற்றுக்கு 'ஆந்திரா வேர்' என பெயரிட்டனர். என்றாலும், கர்நாடகா, மஹாராஷ்டிரா பகுதிகளிலும் இவை கிடைக்கின்றன. கொங்கல்நகரத்தில், செவ்வண்ணப் பூச்சில் வெள்ளை வண்ணம் தீட்டும் இந்த வகை பானை ஓடுகள், இரண்டாம் மண்ணடுக்கில் அதாவது, 150 - 220 செ.மீ., ஆழத்தில் அதிகமாக கிடைத்துள்ளன. மேலும், கருப்பு - சிவப்பு பானை ஓடுகளிலும் இந்த வண்ணத்தீட்டல் உள்ளது. இதுகுறித்த பகுப்பாய்வில், பல மண்பாண்டங்கள் உடைந்தும் சிதைந்தும் உள்ளதால், முழுமையாக ஆராய முடியவில்லை. அதேசமயம், செங்குத்துக் கோடுகள், கிடைமட்டக் கோடுகள், குறுக்கு கீறல்கள், ஜிக்-ஜாக் கோடுகள், அலை போன்ற கோடுகள், புள்ளியிட்ட கோடுகள், சாய்ந்த கோடுகள் உள்ளிட்ட 27 வடிவங்கள் பெரும்பான்மையாக கிடைத்துள்ளன. இவற்றின், தொடக்க, உச்ச நிலைகளின் காலங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ன. மேலும், இவற்றுடன் கிடைத்துள்ள தக்களிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் சக்கரங்கள் உள்ளிட்ட பொருட்களும் ஒப்பீட்டாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.இங்கு, பரவலாக கண்டறியப்பட்ட ஈமக்காட்டு பகுதிகளில் ஐந்து கற்பதுக்கைகள், ஒரு நெடுங்கல், ஒரு கற்குவியல் ஆகியவற்றை, இந்த அகழாய்வின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளோம். மேலும், இரும்பு காலத்தைச் சேர்ந்த வாழ்விடப்பகுதியும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைத்துள்ள 1,380 தொல்பொருட்களும், இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியலைக் கூறும் சான்றுகளாக உள்ளன. மேலும், தொடர் பகுப்பாய்வின் வாயிலாக ரசட் கோட்டட் எனும் வண்ணப்பூச்சு பானைகள் குறித்தும் அவற்றில் உள்ள அடையாளங்கள் குறித்தும் ஆய்வு செய்ய களமாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை