மேலும் செய்திகள்
தேனி நகராட்சி கமிஷனர் நியமனம்
14-Sep-2025
அரூர்; நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த நகராட்சி பெண் கமிஷனர், அடுத்தடுத்து பணியிட மாறுதலுக்கு ஆளாகும் நிலையில், அரூர் நகராட்சியில் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில், மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., - ஆக., 25ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தர்மபுரி நகராட்சி கமிஷனர் சேகர், அரூர் நகராட்சி பொறுப்பு கமிஷனராக பதவி வகித்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி கமிஷனராக இருந்த ஹேமலதா, 34, அரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், அக்., 6ல் அங்கு கமிஷனராக பொறுப்பேற்றார். பதவியேற்று இரு நாட்களே ஆன நிலையில், அக்., 8ல் சோளிங்கர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அரூருக்கு புதிதாக கமிஷனர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், தர்மபுரி நகராட்சி கமிஷனர் சேகர், மீண்டும் பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சி கமிஷனராக ஹேமலதா முதலில் நியமிக்கப்பட்டார். அங்கு ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஸ்ரீபெரும்புதுாருக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். சென்னை அருகே வசிக்கும் இந்த பெண் அதிகாரி, அரூர் நீண்ட துாரம் என்பதால், ஆரம்பத்தில் அங்கு செல்ல தயங்கினார். பின்னர், அரூரில் வீடு பிடித்து, பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்று குடிபெயர்ந்த நிலையில், இரண்டு நாட்களில், மீண்டும் சோளிங்கர் நகராட்சிக்கே இடமாற்றம் செய்யப்பட்டு உ ள்ளார். இதற்கு, நேர்மையான அதிகாரியான இவர் அரூரில் பணிபுரிவதில் விருப்பமின்றி, தர்மபுரி மாவட்டத்தின் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த அழுத்தம் காரணமாக, அவர் மீண்டும் சோளிங்கர் நகராட்சிக்கே மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேர்மையாக பணிபுரியும் ஒரே விஷயத்திற்காக, பெண் அதிகாரி பந்தாடப்படும் சம்பவம் அதிகாரிகள் மட்டத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, கமிஷனர் ஹேமலதாவிடம் கேட்டபோது, 'டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர். ஆனால், நான் அரூரில் தான் பணிபுரிவேன்,'' என்று மட்டும் தெரிவித்தார்.
14-Sep-2025