கோவை: கோவையில் நடைபெற்று வந்த, 'விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு' என்ற, 'ஏ3' மாநாடு, ஆரோக்கியமான விவாதத்துடன் நிறைவடைந்தது.'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பு சார்பில், 'விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு' என்ற தலைப்பிலான 'ஏ3' எனும், அவேக், அரைஸ், அசெர்ட் மாநாடு கோவை, அவிநாசி ரோடு, 'கொடிசியா-இ' ஹாலில், இரண்டு நாட்கள் நடந்தது.தர்மம், சனாதன தர்மம், ஆன்மிகம் சார்ந்த தலைப்புகளில் நேற்று முன்தினமும், இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் குறித்த தலைப்புகளில் நேற்றும், கருத்தரங்கம் நடந்தது. காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இரண்டு நாட்களில், 25க்கும் மேற்பட்டோர் ஆன்மிக சொற்பொழிவு, கருத்துகளை பரிமாறினர். 'செங்கோல்' ஆட்சி!
'வங்கதேசம் இன்று' என்ற தலைப்பில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பேசியதாவது:எத்தனையோ படையெடுப்புகளை தாண்டி, நமது பாரதம் நிலைத்து நிற்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைக்கும்போது, நாடு வெட்டி பிளக்கப்பட்டது. வீரம் மிக்க சீக்கியர், இந்துக்கள் வசித்த பஞ்சாபில் பாதி மற்றும் லாகூர் நம்மிடமில்லை.வங்கத்தில் பாதி நம்மிடம் இல்லை. தமிழகம் போல, வங்க மொழி இலக்கிய செழுமை வாய்ந்தது. 1905ல் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, மத ரீதியாக தனி நாடு கோரி கலவரங்கள் வெடித்தன. ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; துரத்தப்பட்டனர்.வங்க தேசம், பாகிஸ்தானுடன் இணைந்தபோது, ஹிந்துக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். வங்கதேச கலாசாரத்தை பாக்., ராணுவம் அழித்தது. இந்திய ராணுவம் சென்று, வென்று தனி வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்தது. அங்கு, 1972க்கு பிறகு, 26 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் இன்று, 6 சதவீதமாக குறைந்துள்ளனர்.இன்று மாணவர் போராட்டம் என்ற பெயரில் ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றனர். கோவில்கள், பகவத் கீதை எரிக்கப்பட்டது. துறவி கைது செய்யப்பட்டுள்ளார். நாளை இது இந்தியாவில் நடக்காமல் இருக்க, விழித்திட வேண்டும். வளமான தமிழகம் உருவாக வரும், 2026ல் செங்கோல் ஆட்சி வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தர்மத்திற்கு எதிரானது
'தேசம் முதலா அல்லது மதம் முதலா' எனும் தலைப்பில், தேசியவாதி ஜெரோம் ஆன்டோ பேசியதாவது: மதமாற்றம் இப்போது எளிதாக நடக்கிறது. ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டால், அவர் இந்தியாவுக்கு எதிராக மாற்றப்படுகிறார் என அர்த்தம். உங்களது சனாதன நம்பிக்கையை மாற்றுகின்றனர். அவர்களின் கோட்பாடுகள் நமது தர்மத்துக்கு எதிராக உள்ளன. இதனால், சமூக மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது நீங்கள் விழிக்கவில்லை எனில், உங்கள் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் அனுபவிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
'விழிப்புடன் இருக்க வேண்டும்'
'ஹிந்து மதம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில், அர்ஷ வித்யா சமாஜம் நிறுவனர் ஆச்சார்யா மனோஜ் பேசியதாவது: எதிர்மறை எண்ணங்களை நம் மதம், ஆன்மிகம், சமூகம் மீது திணிப்பது, போதை வாயிலாகவும், இளம் தலைமுறையினரை மூளைச்சலவை செய்தல் என, ஆறு விதங்களில் மத மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. புதுவித எதிரிகளை சந்தித்து வருகிறோம்.நம்மை மதம் மாற்றம் செய்வதற்கான, மறைமுக நடவடிக்கைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள், மதமாற்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.இதிலிருந்து விழித்துக்கொள்ள, ராமாயணம், மகாபாரதம், அர்த்த சாஸ்திரம் உள்ளிட்டவை வாயிலாக சனாதன தர்மத்தின் அடிப்படை சாராம்சத்தை, நம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.