புதுடில்லி : திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தியபோது, ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிறுவனங்களின் நெய் திருப்பதிக்கு அனுப்பப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில், பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு, மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, 1,500 கிலோ நெய் மற்றும் மற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்புகள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோசடி
அதே சமயம், சர்ச்சைக்குள்ளானது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., இயக்குநர் தலைமையில் ஆந்திர மாநில போலீசின் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உயரதிகாரியும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், ஆந்திர போலீசின் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு, இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேரை சமீபத்தில் கைது செய்தது. தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், உத்தரகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள 'போலே பாபா டெய்ரி' மற்றும் 'வைஷ்ணவி டெய்ரி' நிறுவனங்களின் இயக்குநர்கள் பொமில் ஜெயின் மற்றும் விபின் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபூர்வா சாவ்டா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெய் வினியோகத்தில் நடந்துள்ள மோசடி தொடர்பாக, ஆந்திர போலீசின் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது: வைஷ்ணவி டெய்ரி மற்றும் போலே பாபா டெய்ரி ஆகியவை, திருப்பதி தேவஸ்தானத்தில், நெய் வினியோகிக்க முன்பு ஒப்பந்தம் செய்திருந்தன. அவர்கள் வினியோகித்த நெய்யின் தரம் மோசமாக இருந்ததால், தேவஸ்தான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, நெய் தயாரிப்பில் பல மோசடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இதைத் தவிர, பல போலி ஆவணங்கள் அளித்து அவர்கள் ஒப்பந்தம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனங்கள், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள், திண்டுக்கல்லில் உள்ள டெய்ரி நிர்வாக இயக்குநரை சந்தித்து உள்ளனர். தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் பங்கேற்கும்படி அவரிடம் கூறியுள்ளனர். நெய்யை தாங்கள் சப்ளை செய்வதாகவும், ஒவ்வொரு கிலோவுக்கும் கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளனர்.இதற்காக, மோசடியான, பொய் தகவல்களுடன் கூடிய திருத்தப்பட்ட போலி ஆவணங்களை தாக்கல் செய்து திண்டுக்கல் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. தன் உற்பத்தி திறன், நெய்யின் தரம் உட்பட பல மோசடி ஆவணங்களை அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. விசாரணை
வைஷ்ணவி டெய்ரி மற்றும் போலே பாபா டெய்ரி அனுப்பிய நெய்களில், தன் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி, திருப்பதிக்கு அனுப்பியுள்ளது. இதன் வாயிலாக தரமில்லாத நெய் வினியோகிக்கப்பட்டுள்ளது.தேவஸ்தானத்தால் கருப்புப்பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனங்கள், திண்டுக்கல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளன. நெய் தரம் மோசமாக இருந்ததுடன், போலி ஆவணங்களையும் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.