உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொழில் வளமில்லா மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வருகிறதா? ஆரம்பத்திலேயே எதிர்ப்பும் கிளம்பியாச்சு

தொழில் வளமில்லா மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வருகிறதா? ஆரம்பத்திலேயே எதிர்ப்பும் கிளம்பியாச்சு

மேலுார் : மதுரை மாவட்டம் மேலுார் தாலுகாவில் 'டங்ஸ்டன் கனிம சுரங்க' திட்டம் செயல்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகார பூர்வமான தகவல் வராத நிலையில் ஆரம்பத்திலேயே அதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.மேலுார் தாலுகாவில் ஏராளமான குவாரிகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கிரானைட் குவாரி முறைகேடுகளால் விவசாய நிலங்கள் உட்பட சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதோடு, விதிமீறலும் அதிகரித்ததால் அரசு அந்த குவாரிகளின் அனுமதியை ரத்து செய்து விட்டது.இந்நிலையில் புதிதாக வர உள்ளதாக கூறப்படும் ஒரு தொழிற்சாலை குறித்து எவ்வித புரிதலும் ஏற்படும் முன்பே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மேலுார் தாலுகாவில் நாயக்கர்பட்டி பகுதியில் அமைய உள்ள இந்த டங்ஸ்டன் கனிமவள திட்டத்தால், தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, கூலாளிபட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வெள்ளாளபட்டி, செட்டியார்பட்டி என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படையும் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.இந்த திட்டத்திற்கான ஏலம் மத்திய அரசால் நவ.7 ல் பட்டியலிடப்பட்டு விட்டதாகவும், பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிட்., அதன் ஏலத்தை பெற்றிருப்பதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து நவ. 18 ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், ''இந்த கனிமவள சுரங்கம் அமையும் பகுதியில்தான் சமணர் படுகை, பல்லுயிர் பாரம்பரிய தலம், குடவரை கோயில், அழகர்மலை பாதுகாப்பு வனப்பகுதி ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் பாதிக்கும். நீர்நிலை பாதித்து விவசாயமும் அழியும்' என்றனர். தங்கள் கோரிக்கை குறித்து கலெக்டர் சங்கீதாவிடம் மனுவும் கொடுத்தனர்.அதற்கு பதிலளித்த கலெக்டர், ''இந்த திட்டம் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் திட்டம் வருமுன்பாக அப்பகுதி கிராம சபை கூட்டங்களில் தடையின்மை தீர்மானங்கள் நிறைவேற்றி, கருத்து கேட்டுதான் இடம்பெறும். அதனால் அச்சப்படத் தேவையில்லை'' என்று தெரிவித்துவிட்டார்.

ஏலம் விடப்பட்டதா

திட்டம் குறித்து விசாரித்ததில், அப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் டங்ஸ்டன் கனிமம் தொடர்பான ஆய்வு நடந்துள்ளது. அப்போதே இதுபற்றி தெரியாத கிராமத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அன்றைய நிலையிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட எந்தத் துறையினருக்கும் இதுபற்றிய தகவல் தெரியவில்லை. அதன்பின் இதுபற்றி எந்த தகவலும் இல்லாததால் கிராமத்தினரிடம் எதிர்ப்பு கிளம்பவில்லை.இந்நிலையில் சமீபத்தில் டில்லியில் இத்திட்டம் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டதாகவும், அதனை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் பெற்றதாகவும் இணைய வழியில் தகவல் பெற்றதாகக் கூறி பலரும் எதிர்ப்பு தெரிவிக்க கிளம்பிவிட்டனர்.மதுரை எம்.பி., சு.வெங்கடேசனும் எக்ஸ் வலைத்தளத்தில், இத்திட்டத்திற்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், '2015.8 ஏக்கர் பரப்பிலான பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கக் கூடாது. மத்திய அரசு இந்த ஏல நடவடிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, இத்திட்டத்திற்கு சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.கனிமவள கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தேர்வு செய்த பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் அரிட்டாபட்டியும் ஒன்று. தமிழ்நாட்டில் முதல் பாரம்பரிய பல்லுயிர் தலமாக இக்கிராமத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் சமணர் படுகை, குடவரை கோயில், தமிழ் பிராமிய கல்வெட்டுகள் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னங்கள் உள்ளன. கனிமவள சுரங்கம் வந்தால் இவை அழியும். அதுமட்டுமின்றி விவசாயமும் அழிந்து விடும் என்றார்.சமூக ஆர்வலர் ஜீவா கூறுகையில் இத்திட்டத்தால் அப்பகுதியின் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி அகதிகளாக மாறும் நிலை ஏற்படும். மேலுார் தாலுகாவில் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், நீர்நிலைகள், காற்று மாசுபடும் என்றார்.

தொழில் வர்த்தக சங்கம் கூறுவது என்ன

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ''அந்நிறுவனம் வருவது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. எது வந்தாலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். யார் வருகிறார்கள், எவ்வளவு இடத்தில் என்ன தொழில் செய்கின்றனர் என்ற விவரம் தெரிய வேண்டும். பொதுவாக யாரும் தொழில் துவங்குவதை நாங்கள் தடுப்பதில்லை. அதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை வரவேற்கிறோம். அதேசமயம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்'' என்றார்.

தொழில்வளம் இல்லாத மதுரை

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடல்வளம், மலைவளமில்லாத பூமி. வைகையை மட்டுமே நம்பியிருக்கும் விவசாய பூமி. காஷ்மீர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் தென்மாவட்டங்களுக்கான மையமாக உள்ளதால் மதுரை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாவட்டத்தில் மோட்டார் உதிரி பாகங்கள், நெசவு, ஆடை தயாரிப்பு உட்பட பல சிறு, குறு தொழில்கள்தான் அதிகம் உள்ளன. பெரிய தொழிற்சாலை என எதுவுமில்லாததால் வேலைவாய்ப்புக்கு சென்னை உட்பட வெளியூர், வேறு மாநிலங்கள், நாடுகளை நோக்கி இளைஞர்கள் செல்லும் நிலை உள்ளது.இங்கு ஒரு தொழிற்சாலை வருவதை அதன் சாதக, பாதகங்கள் அறியாமல் அது தரும் வேலைவாய்ப்புகள் பற்றி ஏதும் அறியாமல் ஆரம்பத்திலேயே எதிர்க்கலாமா என்று தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:இந்த டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் சுற்றுச்சூழல் மாசு, கனிமவள பாதிப்பு உள்ளதா, நீர்வளம், நிலவளம் பாதிக்குமா என்றெல்லாம் ஒரு புரிதலும் ஏற்படாத நிலையிலேயே எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் மதுரை மாவட்டத்திற்கான தொழில் வளம், வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். எனவே அரசு புதிய தொழிற்சாலை வருகிறது என்றால் அதற்கான கருத்து கேட்பு, அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இப்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தவறான புரிதலுடன் மதுரைக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.

கிராம மக்கள் எதிர்ப்பு

நேற்று அரிட்டாபட்டி மந்தையில் ஒன்று கூடிய கிராம மக்கள் கூறியதாவது:இக் கிராமத்தை தமிழக அரசு முதல் பறவைகள் பல்லுயிர் தளமாக அறிவித்துள்ளது. தவிர சமணர் படுகை, குடைவரை கோயில், கல்வெட்டுகள் என முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னங்கள் பாதிக்கப்படும். விவசாயம் அழியும். கிராமங்களை விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டு அகதிகளாக மாறும் நிலை ஏற்படும் என்பதால் சுரங்கம் அமைக்க விடமாட்டோம்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saai Sundharamurthy AVK
நவ 23, 2024 12:10

மதுரையில் எய்ம்ஸ் வந்ததே தவறு. விமான நிலையம் வந்ததே தவறு. அதனால் ஏகப்பட்ட விளை நிலங்கள் நாசமாகியுள்ளன. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வைகை நதி வருடம் முழுவதும் வறண்டு கிடக்கிறது. குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் எந்த பலனும் இல்லை. ஆகவே, மெட்ரோ திட்டம் கூட தேவையில்லாத ஒன்று. ஆகவே அங்கு எந்த தொழில்களும், தொழிற்சாலைகளும் வருவதை தவிர்க்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் சந்தோசமாக வாழ்வதை கெடுக்கக் கூடாது.


ashokkumar ashok
நவ 23, 2024 05:39

நி ஊதர ஊத பாத்தா கண்டிப்பாக இது வந்தே ஆகும் போல தெரியுது... பாவம் மக்கள் ...


தஞ்சை மன்னர்
நவ 22, 2024 11:35

எங்கோ யாருக்கோ தேவைப்படும் ஒரு பொருளுக்காக மண்ணின் மக்களை விரட்டிய பின்பு யாருக்கு அது தேவை


VENKATASUBRAMANIAN
நவ 22, 2024 08:00

சு வெங்கடேசன் வீணாய் போனவன். இவனுக்கு மதுரை மக்கள் ஓட்டு போட்டு அவமானத்தை தேடிக்கொண்டு உள்ளனர்.


அப்பாவி
நவ 22, 2024 07:03

மதுரையில்.பசுமலை, நாஜமலைன்னு ரெண்டு மூணு மலைங்க இவிங்க கண்ணை உறுத்துது. அதை வெட்டி, கீழே டன்க்ஸ்டன் இருக்கான்னு பாக்கப் போறாங்களோ என்னவோ?


SUBBU,MADURAI
நவ 22, 2024 07:41

மதுரையில் தொழில் வளங்களும் பெரிய தொழிற்சாலைகளும் இல்லையா யார் சொன்னது? வெளியூர்காரர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம். எங்க ஊர் மதுரைக்கு வந்து பாருங்கள் தெருவுக்கு தெரு எத்தனை எண்ணிக்கையில் இட்லி தொழிற்சாலைகள் நடு இரவிலும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருப்பதை பார்க்கலாம். அதற்கு இடையூறு ஏற்படுத்தி அந்த தொழிலை நசிவடைய வைக்கும் வகையில் எங்களுடைய மதுரைக்கு வேறு எந்த தொழிற்சாலை வந்தாலும் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஏழை தொழிலாளர்களுக்கும் நன்மை செய்யும் எந்த திட்டம் வந்தாலும் அதை வரவிடாமல் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் சேர்ந்து அந்த திட்டத்தை முழு மூச்சாக எதிர்ப்போம் என எச்சரிக்கிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை