வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தம்பி... பொய் பேசலாம்... அதுக்குன்னு ஏக்கர் கணக்குல பேச கூடாது..!!!!
சென்னை: பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் ராபர்ட் வூ, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், 'தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது' என, அமைச்சர் ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பாக்ஸ்கான் தரப்பில், 'புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு உண்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த, பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய தலைவர் ராபர்ட் வூ, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார். அதன்பின், 'பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடுகளையும், 14,000 வேலை வாய்ப்பையும் உறுதி செய்கிறது' என, அமைச்சர் ராஜா தெரிவித்தார். இதற்கு பாக்ஸ்கான் தரப்பில் கேட்ட போது, 'பாக்ஸ்கானின் புதிதாக நியமிக்கப்பட்ட, இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ, முதல்வரை சந்தித்தபோது, புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக, சில மாதங்களுக்கு முன் உறுதி அளித்தது. பல மாநிலங்களும் தங்களை தொடர்பு கொண்டு முதலீடு செய்ய வலியுறுத்துவதால், இந்த விபரத்தை, வெளியில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், பாக்ஸ்கான் முதலீடு குறித்து ரகசியம் காக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி, முதல்வரை சந்தித்த நிலையில், பாக்ஸ்கானில், 15,000 கோடி ரூபாய் முதலீடு குறித்து அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாக்ஸ்கான் தரப்பில், 'முதல்வர் சந்திப்பின் போது, புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம், தமிழகத்தில், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்வது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். பா.ம.க., நிறுவனர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாயில், புதிய முதலீடுகளை செய்ய, தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் உறுதி அளித்திருப்பதாக, தமிழக அரசு பெருமை பேசியது. ஆனால், அப்படி எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதி அளிக்கவில்லை என, பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில், தி.மு.க.,அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு, இது தான் எடுத்துக்காட்டு. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' என்று சொல்வர். ஆனால், தி.மு.க., அரசின் புளுகு அரை நாளில் அமபலமாகி இருக்கிறது. பாக்ஸ்கான் மட்டுமல்ல. தி.மு.க., அரசின் அறிவிப்புகளில், 90 சதவீதம் பொய் மூட்டைகள் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், 'எதற்காக இப்படிப்பட்ட தவறான பதிவை, தொழில் துறை அமைச்சரும், முதல்வரும் செய்தனர் என்று புரியவில்லை. மக்களை திசை திருப்பி இல்லாத ஒன்றை இருப்பதாகவும், நடக்காத ஒன்றை நடந்ததாகவும் முதல்வர், அமைச்சர் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது. இதேபோன்று தான் மற்ற முதலீடுகள் குறித்தும் அரசு கூறி வருகிறதா' என, தெரிவித்துள்ளார். முதலீடு உண்மையானது! அமைச்சர் ராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழக இளைஞர்களுக்கு எப்போதெல்லாம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு, நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், அந்த வேலைவாய்ப்பில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்றைய உலக அரசியல் சூழலில், ஒரு முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டு வருவது எவ்வளவு கடினம். அதிலுள்ள, 'ஜியோபொலிடிகல்' பிரச்னைகள் என்னென்ன என்பதை எல்லாம் அறிந்து கொள்ளாமல், சிறுபிள்ளைத்தனமான அறிக்கை வெளியிடுவதை, இனி அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். 'பாக்ஸ்கான்' நிறுவனம் தமிழகத்தில், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, 14,000 பேருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, எந்தவித தவறும் இல்லாத, 100க்கு 100 உண்மையான செய்தி. உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல் யார் எதற்காக, எதை சொல்கின்றனர் என்பதை புரிந்து கொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது. ராஜா, தொழில் துறை அமைச்சர் ***
தம்பி... பொய் பேசலாம்... அதுக்குன்னு ஏக்கர் கணக்குல பேச கூடாது..!!!!