கோவை மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துக்களில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், தடுப்பணை கட்டாமலே கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், கலெக்டர் தலைமையில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடப்பது வழக்கம். ஈரோடு மாவட்டத்தில், பிரதமர் மோடியால் தத்தெடுக்கப்பட்ட, கூத்தம்பாளையம் கிராம பஞ்சாயத்தில், அவக்கரைப்பள்ளம் என்ற இடத்தில், தடுப்பணை கட்டித்தருமாறு மக்கள், அந்த முகாமில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அதற்கு, அப்பகுதியில் ஏற்கனவே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாக பதில் வந்துள்ளது. அங்குள்ள சமூக ஆர்வலர்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், அது குறித்து விபரங்கள் கேட்டபோது, அங்கு தடுப்பணை கட்டாமலே, பல லட்ச ரூபாய் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. இதேபோல, அங்குள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்துக்களிலும் தடுப்பணை கட்டாமலே, பணம் அடிக்கப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்தான், இந்தத் தடுப்பணைகள் கட்டப்பட்டதாக, கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தவறு செய்த கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் யார் மீதும், இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோவை மாவட்டத்திலும்...
கோவை மாவட்டத்திலும் இதேபோன்று, தடுப்பணை கட்டாமலே ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த திட்டத்துக்கான மாவட்ட குறை தீர்ப்பு அலுவலராக இருந்தவர், கோவை மாவட்டத்தில் இந்த புகார் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அதில் பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு கிணத்துக்கடவு மற்றும் காரமடை ஆகிய வட்டாரங்களில் உள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்துக்களிலும், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் தண்ணீரில் கரைந்து விட்டதாக, புகார் எழுந்துள்ளது.அதாவது தடுப்பணை கட்டாமலே, கட்டியதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து நிதி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வேலைக்கு வந்த கோடீஸ்வரர்கள்
இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே இத்திட்டத்தில், வேலைக்கு வராதவர்களின் பெயர்களில் வேலைக்கு வந்ததாகக் கணக்குக் காண்பித்து, பெருமளவில் ஊழல் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொழிற்சாலை அதிபர்கள், கோடீஸ்வரர்கள் பலரும் இந்த திட்டத்தில், அன்றாடக் கூலிக்கு வந்து சம்பளம் வாங்கியதாக, பொய்யான கணக்குக் காண்பிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, கலெக்டரிடம் அறிக்கை தரப்பட்டது.இப்போது அதே திட்டத்தில் செய்யாத பணியை செய்ததாகக் கூறி, கணக்குக் காண்பிக்கும் ஊழலும் அரங்கேறியுள்ளது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது வரையிலும் எந்த விசாரணையும் நடத்தவேயில்லை. நேர்மையான விசாரணை தேவை
பஞ்சாயத்துத் தலைவர்களின் பதவிக்காலம், மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பல்வேறு பஞ்சாயத்துக்களிலும் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக, பரவலாகப் புகார்கள் குவிகின்றன. இதுபோன்ற புகார்களின் மீது, நேர்மையான அலுவலர்கள் குழுவை வைத்து விசாரணை நடத்தி, தவறு செய்தோர் மீது, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதுகுறித்து கருத்து கேட்க, மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனரை தொடர்பு கொண்டபோது, அவரிடம் பதில் பெறவே முடியவில்லை.-நமது நிருபர்-