உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேட்டு பெற்ற வரமே வினையானது: பணவீக்கத்தால் திணறுகிறது ஜப்பான்

கேட்டு பெற்ற வரமே வினையானது: பணவீக்கத்தால் திணறுகிறது ஜப்பான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக நாடுகள் எல்லாம் பணவீக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று போராடிக் கொண்டிருந்த நிலையில், ஜப்பான் மட்டும், பணவீக்கத்தை ஒரு வரமாக கருதி வரவேற்றது. பத்தாண்டுகளாக பதிவாகி வந்த குறைவான வளர்ச்சி மற்றும் பணவாட்ட அழுத்தங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக, ஒரு வரமாக, பணவீக்கத்தை ஜப்பான் கருதியது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதங்களை உயர்த்தியபோது, ஜப்பானின் மத்திய வங்கி மட்டும், வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் அல்லது மைனஸ் சதவீதத்திலேயே பராமரித்து வந்தது. மைனஸ் வட்டி விகிதமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். வழக்கமாக கடன் பெறுபவர்களே வங்கிகளுக்கு வட்டி செலுத்துவர். ஆனால் மைனஸ் வட்டி விகித கொள்கையின் படி, கடன் பெறுபவர்களுக்கு வங்கிகள் வட்டி வழங்கும். சோர்வுற்று கிடக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

எதிர்பார்த்தது என்ன?

மந்தமாக உள்ள பொருளாதார வளர்ச்சியை வேகமெடுக்க வைக்க, பணவீக்கத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ஜப்பான் மத்திய வங்கியின் எண்ணமாக இருந்தது. இதற்காகவே வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தது. பணவீக்கத்தை காரணம் காட்டி, நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்தும். இதனால் நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும். இதன் விளைவாக ஊழியர்களின் சம்பளம் உயரும். சம்பளம் அதிகரிப்பதால், மக்கள் அதிகளவில் செலவு செய்வர். இதன் வாயிலாக, நேர்மறையான பொருளாதார சுழற்சியை ஏற்படுத்திவிடலாம் என்பதே அதன் திட்டமாக இருந்தது. துவக்கத்தில் அதன் எண்ணம் நிறைவேறுவது போலவே சில நிகழ்வுகளும் நடைபெற்றன. 'டொயோட்டா' உள்ளிட்ட ஜப்பானின் மிகப்பெரிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின. ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊதிய உயர்வையும் அறிவித்தன. இதையடுத்து, எதிர்பார்த்த முன்னேற்றங்களை எட்டிவிட்டதாக முடிவு செய்த ஜப்பானின் மத்திய வங்கி, கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக, வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்தது.

காலை வாரிய 'யென்'

சமீபகாலமாக அந்நாட்டு பொருளாதாரம் சந்தித்து வரும் சில சிக்கல்கள், மத்திய வங்கி திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்ற தோற்றத்தையே வெளிப்படுத்துகின்றன. வட்டி விகிதத்தை குறைவாகவே வைத்திருக்க வங்கி எடுத்த முடிவு, பணவீக்கத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், அமெரிக்க டாலருக்கு நிகரான 'யென்'னின் மதிப்பையும் சரித்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலை கடும் உயர்வைக் கண்டுள்ளன. இதையடுத்து, அந்நாட்டு மக்கள் தங்களது செலவினங்களை குறைக்கத் துவங்கி விட்டனர். இதனால் தேவை மந்தமானது. இதன் காரணமாக ஜப்பானின் சிறு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளின் விலையை அதிகரிக்கவும், சம்பளத்தை உயர்த்தவும் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. மக்களுக்கு சம்பளம் உயரும், அவர்கள் செலவு செய்வது அதிகரிக்கும், பொருளாதாரம் மேம்படும் என மத்திய வங்கி நினைத்தற்கு தலைகீழாக நிலைமை மாறத் துவங்கியது. ஜப்பானில், பணவீக்கத்தை கருத்தில் கொண்ட பின் கிடைக்கும் சம்பளத்தின் அளவு, தொடர்ந்து 26வது மாதமாக, கடந்த மே மாதமும் சரிந்துள்ளது. அதேபோல, பணவீக்கத்தை கருத்தில்கொண்ட பின் கணக்கிடப்படும் நுகர்வோரின் செலவினமும் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக சரிந்து வருகிறது. இதனால், ஜப்பான் பொருளாதாரம் சுருங்கி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதரம் என்ற அடையாளத்தை ஜெர்மனியிடம் இழந்துஉள்ளது. நுகர்வோர் செலவினம் குறைந்ததை அடுத்து, கடந்த மாதம் ஜப்பான் அரசு, நடப்பு நிதியாண்டுக்கான அதன் வளர்ச்சி கணிப்பை 1.30 சதவீதத்திலிருந்து 0.90 சதவீதமாக குறைத்து அறிவித்து உள்ளது. இந்நிலையில் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறையக் கூடும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, சமீப காலமாக ஜப்பானில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதனால், யென், கடந்த சில வாரங்களில் அதன் இழந்த மதிப்பை சற்றே மீட்டெடுத்துள்ளது. இது மத்திய வங்கிக்கு ஒரு சிறு ஆறுதல்.

ஒரே வழி ஊதிய உயர்வு

ஜப்பான் நிறுவனங்கள் ஏற்கனவே சம்மதித்தபடி, ஊதிய உயர்வை அறிவிக்கும்பட்சத்தில், அந்நாட்டு மத்திய வங்கி நினைத்தது போன்ற பொருளாதார சுழற்சி ஏற்பட தற்போதும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.ஜப்பானின் மிகப்பெரிய தொழிற்சங்களின் கூட்டமைப்பு, கடந்த மார்ச் மாதம் அந்நாட்டின் பெரிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியது. இதன் முடிவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஊழியர்களுக்கு பெரிய அளவில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால், அந்நாட்டு தொழிலாளர்களில் 16 சதவீதம் பேர் பயனடைவர். இதனைத் தொடர்ந்தே, வட்டி விகிதம் மைனஸ் 0.10 சதவீதத்திலிருந்து 0.10 சதவீதமாக அப்போது உயர்த்தப்பட்டது. ஆனாலும் இது எவ்வளவு துாரம் கைகொடுக்கும் என்பதிலும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஊதிய உயர்வால் பொருளாதாரம் மீண்டும் வேகமாக சுழலும் என ஒரு தரப்பு எதிர்ப்பார்க்க, இன்னொரு தரப்பினர், கடந்தாண்டும் சில பெரிய நிறுவனங்கள் ஊதிய உயர்வை அறிவித்த நிலையில், அது பொருளாதாரத்தில் எந்தவித தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது நிறுவனங்கள் அறிவித்துள்ள ஊதிய உயர்வு எவ்வளவு துாரம் கைகொடுக்கும் என்று தெரியவில்லை என்கின்றனர்.ஆனாலும் மத்திய வங்கி அதன் நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை. கடந்த வாரம், வட்டி விகிதத்தை 0.10 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக உயர்த்துவதாக, அறிவித்துள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற தவிப்பில், மக்களும் நிறுவனங்களும் உள்ளன.பணவீக்க பூதத்தை திறந்துவிட்டு விட்டு, இப்போது அதை பானைக்குள் அடைக்க முடியாமல் திணறுகிறது ஜப்பான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அசோகன்
ஆக 05, 2024 18:06

சிதம்பரத்தை consultant ஆக வைத்திருப்பார்கள் ????. நிர்மலா இந்தியாவை உலகின் 3 வது இடத்துக்கு கொண்டு செல்கிறார்


Yasararafath
ஆக 05, 2024 16:48

வெளிநாடு தினறினால் தான்.தமிழ்நாடு வளரச்சி பெறும்.


SARAVANAN A
ஆக 05, 2024 12:19

பணவீக்கம் என்றாலே பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக தானே அர்த்தம் பணப்புழக்கம் அதிகமாகும் போது விலைவாசி உயரும். பொருட்களின் விலை உயரும் போது மக்கள் அதை வாங்க தயங்குவார்கள்.தேக்கம் காரணமாக பொருளாதார மந்தநிலை உருவாகும். உடனே அந்நாட்டின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களையே முதலில் உயர்த்தும். அரசாங்கங்கள் பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களை முன்னெடுக்காது ஆனால் ஜப்பானியல் வித்தியாசமாக யோசிக்கிறோம் என்று நினைத்து தவறான அணுகுமுறையை பின்பற்றியதால் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் திசைமாறி போய் கொண்டிருக்கிறது.


Raghavan
ஆக 05, 2024 11:32

இப்பொழுது தெரிகிறதா இந்தியாவில் பொருளாதார எப்படி சீராக உள்ளது என்று முக்கிய காரணம் நிர்மலா சீதாராமன் அவர்களின் திறமையான நிர்வாகம்


Kalyanaraman
ஆக 05, 2024 08:15

தமிழக அரசு போல் ரகுராம் ராஜன் போன்ற புத்திசாலிகளை கலந்து ஆலோசித்து இருக்கலாமே.


Raghavan
ஆக 05, 2024 11:34

தமிழகம் கடலில் தத்தளிக்கிறது விவரம் அவர்களின் புத்திசாலித்தனம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை