உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமெரிக்காவை போன்று பிரிட்டனிலும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு சிக்கல்

அமெரிக்காவை போன்று பிரிட்டனிலும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு சிக்கல்

லண்டன் : பிரிட்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நடத்தும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பணிபுரிகின்றனரா என, நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.வளர்ந்த நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் அரசு பொறுப்பேற்ற பின் இது போன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வருகிறது. இதே பாணியை பிரிட்டன் அரசு பின்பற்ற துவங்கியுள்ளது. பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜூலையில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார். அவரும் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பதிலும், ஆவணங்கள் ஏதுமில்லாமல் தங்கி இருப்பவர்களை நாடு கடத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். ஜனவரியில் மட்டும் 828 நிறுவனங்களில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அதில் 609 பேர் பிடிபட்டனர். இந்த கைது எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் 73 சதவீதம் அதிகம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவை போல் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து, கைகளில் விலங்கு மாட்டி விமானத்தில் ஏற்றி நாடு கடத்தும் வீடியோவையும் முதன் முறையாக பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. இதை பார்த்து பிரிட்டனுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் அச்சமடைய வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்கும் சோதனையை தற்போது இந்திய நிறுவனங்களுக்கும் நீட்டித்துள்ளனர். நேற்று முன்தினம் பிரிட்டன் முழுதும் உள்ள இந்தியர்களின் உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், அழகு நிலையங்கள், கார் பழுது நீக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு உள்ளனர். இதில், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விபரம் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sundar Pas
மார் 11, 2025 11:00

அந்த நாட்டு சட்டப்படி உள்ளே நுழைந்தவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, திறந்துவிட்டு நாய் போல சட்டத்திற்கு புறம்பா போனவர்களை அடித்துதானே விரட்டவேண்டும்?


S. Neelakanta Pillai
பிப் 15, 2025 11:34

புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆபத்தில்லை சட்டத்துக்கு புறம்பான புலம் பெயர்ந்தவர்களுக்கு தான் ஆபத்து. செய்திகளை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக்காமல் பதிவிடுவது நல்லது. சென்சேஷனல் ஆக்குகிறேன் என்று நினைத்துக் கொண்டு உண்மைக்கு புறம்பான செய்திகளை தலைப்பிடுவது பத்திரிகை தர்மமாகாது. திருத்திக் கொள்ளுங்கள்


ஜான் சிங்
பிப் 12, 2025 20:17

இந்தியாவில் கள்ளத்தனமா குடியேறியிருக்கும் பிரிட்டிஷ் காரங்களைப் புடிச்சு நாடு கடத்தணும்


Rangarajan Y
பிப் 12, 2025 09:48

உலகில் எங்கே போனாலும் இந்தியாவிலிருந்து கக்ளக்குடியேறிகள் இருப்பாய்ங்க.


சமீபத்திய செய்தி