கூடுதலான மக்கள் பயன்பெறும் வகையிலும், ரயில்வே வருவாயை அதிகரிக்கும் வகையிலும் கோவை-பெங்களூரு ரயில் சேவைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதோ அந்த பட்டியல்:
* தற்போதுள்ள உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டெக்கர் ரயிலில், ஒரு ஏ.சி.,பெட்டி, கடந்த 18ம் தேதியிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது; இந்த ரயிலில் ஏ.சி.,பெட்டியில் வசதி குறைவாக இருப்பதால், அதில் பயணிக்க மக்கள் விரும்புவதில்லை. அதற்கு மாற்றாக, இந்த ரயிலில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையை 5லிருந்து 8 ஆக உயர்த்தினால், ஏழை மக்கள் அதிகம் பயன் பெறுவர். * எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் கோவையைக் கடந்து, மாலையில் பெங்களூரு செல்கிறது. அதில் சாதா பெட்டிகளுக்குப் பதிலாக, கூடுதலாக 2 ஏ.சி., பெட்டிகளை இணைத்தால் வரவேற்பும் வருவாயும் அதிகரிக்கும்.* பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஆனால் அனைவரும் பெங்களூரு கன்டோன்மென்ட் ஸ்டேஷன் சென்று, வேறு பகுதிகளுக்குச் செல்வதில் பல சிரமங்கள் உள்ளதால், பலரும் அதில் பயணிக்கத் தயங்குகின்றனர். * ஓசூர்-பெங்களூரு இடையிலுள்ள, கார்மேளரம் ஸ்டேஷனில் இரு நிமிடங்கள் நின்றால், மேலும் பலர் பயணிக்க வாய்ப்புள்ளது.* பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில், வந்தே பாரத் ரயில் '1 பி' நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. அங்கு செல்வதற்கு முதியோர், பருமனானவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். அதையும் மாற்ற வேண்டுமென்று, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். இவற்றுடன், கோவை - பெங்களூரு இடையே, இரவு நேர ரயிலை விரைவாக இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும், வலுத்து வருகிறது.-நமது நிருபர்-