புதுடில்லி: 'பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக 1999ல் நான் தேர்வான செய்தியை சொல்ல, பெர்லினில் இருந்து தொலைபேசியில் அழைத்தபோது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா, ஒரு மணி நேரம் என்னை காக்க வைத்தார்' என, அக்கட்சியில் முக்கிய பதவிகளை வகித்த நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமைச்சர், ராஜ்யசபா துணை தலைவர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் நஜ்மா ஹெப்துல்லா, 84. சோனியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, 2004ல் பா.ஜ.,வில் இணைந்தார்.கடந்த 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்; மணிப்பூர் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.இவர், 'இன் பர்ஸ்யூட் ஆப் டெமாக்ரசி: பியாண்ட் பார்ட்டி லைன்ஸ்' என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகத்தை எழுதி உள்ளார். அதில், சோனியாவுடன் இவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு பற்றிவிரிவாக எழுதியுள்ளார். அதன் விபரம்:கடந்த 1999ல் ஐ.பி.யு., எனப்படும், சர்வதேச நாடுகளின் பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக நான் தேர்வானேன். இது வரலாற்று சிறப்புமிக்க பெரிய கவுரவம். இந்திய பார்லிமென்டில் இருந்து என் பயணம், உலக பார்லிமென்ட் நிலை வரையிலான உச்சத்தை தொட்ட தருணம். இந்த செய்தி வந்தபோது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்தேன். இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.உடனடியாகஎன்னுடன் பேசியவர், செய்தியை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 'நீங்கள் இந்தியா வந்ததும் கொண்டாடுவோம்' என, தெரிவித்தார். அதன் பின், காங்கிரஸ் தலைவர் சோனியாவை தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்தவர் 'மேடம் பிசியாகஇருக்கிறார்' என்றார். 'நான் பெர்லினில் இருந்து அழைக்கிறேன்; உடனடியாக பேசவேண்டும்' எனக் கூறியதும், காத்திருக்கும்படி கூறினார்.ஒரு மணி நேரம் தொலைபேசியில் காத்திருந்தும் சோனியா பேசவில்லை. அது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அந்த அழைப்புக்கு பின், அது குறித்து சோனியாவிடம் நான் எதுவும் கூறவில்லை.பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக நான் தேர்வானதை அடுத்து, என் பதவியை இணையமைச்சர் அந்தஸ்தில் இருந்து கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு வாஜ்பாய் உயர்த்தினார் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது ஐ.பி.யு., எனப்படும் பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியன் என்பது சர்வதேச அமைப்பு. இதில் 193 நாடுகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.