பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமலேயே 30 ஆண்டுகளாக முதல்வராக தொடரும் நிதிஷ்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பீஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் வரலாற்றில் மட்டுமல்ல; தேசிய அரசியலிலும் இது மாபெரும் சாதனை. கடந்த, 30 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலையே அவர் சந்திக்கவில்லை என்பது தான் அதைவிட அரும்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. அரசியல் எனும் மாபெரும் சாகரத்தில், வெற்றிக்காக கச்சிதமாக எதிர்நீச்சல் போட தெரிந்தவர் நிதிஷ்குமார். இதனால் தான், அரசியல் வல்லுநர்களின் கணிப்புகளை எல்லாம் பலமுறை அவர் பொய்யாக்கி இருக்கிறார். ஆதரவு அலை கடந்த, 1977ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது ஜனதா கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார் நிதிஷ். இந்திராவின் எமர்ஜென்சி காலத்திற்கு பின் இந்த தேர்தல் நடந்தது. இதனால், நாடெங்கும் இந்திராவுக்கு எதிரான அலை வீசியது. என வே, ஜனதா கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவர் என கணிக்கப்பட்டது. அதற்கேற்றபடி லாலு பிரசாத், ராம் விலாஸ் பஸ்வான் போன்ற ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் வெற்றிவாகை சூடினர். ஆனால், கணிப்புக் கு மாறாக, நிதிஷ் குமார் தோல்வியை தழுவினார். முன்னாள் பிரதமர் இந்திரா சுட்டு படுகொலை செய்யப்பட்டதால், 1984 - 85 பீஹார் சட்டசபை தேர்தலில், காங்., ஆதரவு அலை வீசியது. தேர்தல் கணக்குகள், அரசியல் வியூகங்கள், நிபுணர்களின் கணிப்புகளுக்கு ஏற்ப, ஜனதா கட்சி அந்த தேர்தலில் பெரிதாக சோபிக்கவே இல்லை. ஆனால், அந்த தேர்தலில் சொந்த மாவட்டமான நாலந்தாவின் ஹார்நாட் தொகுதியில் போட்டியிட்ட நிதிஷ் குமார், நெருப்பில் இருந்து உயிர்த் தெழும் பீனிக்ஸ் பறவை போல, வெற்றி பெற்று எழுச்சி நாயகனாக உருவெடுத்தார். அ தன்பின், மாநில அரசியலில் இருந்து மத்திய அரசியல் பக்கம் கவனத்தை திருப்பிய நிதிஷ்குமார், 1989 டிச., நடந்த லோக்சபா தேர்தலில் பீஹாரின், பர்ஹ் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியால், வி.பி.சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணியின் மத்திய அமைச்சரவையில், மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பதவி அவரை தேடி வந்தது. இவரது ஜனதா கட்சி தோழர்களான சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் சீனியர் எம்.பி.,களாக இருந்ததால், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். கடந்த, 1994 காலக்கட்டத்தில் தான் பீஹாரில் மிக முக்கியமான அரசியல் திருப்பம் ஏற்பட்டது. லாலு பிரசாத், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, ஜனதா கட்சியில் இருந்து விலகினார் நிதிஷ். உட னடியாக சமதா கட்சியை து வங்கினார். 2003ல் ஐக்கிய ஜனதா தளத்துடன் அதை இணைத்தது வேறு கதை. மன உளைச்சல் கடந்த, 1995 பீஹார் சட்டசபை தேர்தல் நடந்தபோது, சமதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார். அப்போது பீஹாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்படாததால், 324 சட்டசபை தொகுதிகள் இருந்தன. அந்த தேர்தலில், லாலு மிக எளிதாக பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியை பிடித்தார். நிதிஷின் சமதா கட்சி வெறும், ஏழு தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிதிஷ் குமார், அதன்பின், கடந்த 30 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடவே இல்லை. இடையில் 1996, 1998, 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் லோக்சபா தே ர்தலில் மட்டுமே போட்டியிட்டார். கடந்த, 2000ம் ஆண்டில் முதல் முறையாக பீஹார் முதல்வராக அவர் பதவியேற்ற போது கூட, எம்.பி.,யாக தான் இருந்தார். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவியை ரா ஜினாமா செய்தார் நிதிஷ். கடந்த, 2004 லோக்சபா தேர்தலில் தன் பாரம்பரிய பர்ஹ் தொகுதியிலும், நாலந்தா தொகுதியிலும் போட்டியிட்டார் நிதிஷ். அவர் எதிர்பார்த்தது போல, பர்ஹ் தொகுதி கைகொடுக்கவில்லை. இருந்தாலும் சொந்த தொகுதியான நாலந்தாவில் வெற்றி பெற்றார். தொகுதிக்காக எத்தனை பாடுபட்டாலும், தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் கிடைக்காது என்பதை புரிந்து கொண்டார் நிதிஷ். பீஹாரின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கும் வாய்ப்பு, 2006ல் அவரை தேடி வந்தது. இதனால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்த அவர், அப்போது முதல் எம்.எல்.சி., எனப்படும், மேல்சபை உறுப்பினராகவே தொடர்ந்து வருகிறார். நிதிஷ் குமாரின் மேல்சபை உறுப்பினர் பதவி காலம் வரும், 2030ல் தான் முடிவுக்கு வருகிறது. எனவே, அதுவரை சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. - நமது சிறப்பு நிருபர் -: