சென்னை: 'பல்வேறு சமூக பேரவலங்கள், சர்வ சாதாரணமாக நடக்கும் நிலையில், யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது என கூறுவது வெட்கக்கேடானது' என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து, தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, கொடூரன் துாக்கிச் சென்று வன்கொடுமை செய்து உள்ளான். ஒரு வாரமாகியும், இந்த குற்றவாளியை, போலீசார் கைது செய்யவில்லை; இதற்கு அரசு வெட்கித்தலைகுனிய வேண்டும்.திருப்புவனத்தில் கோவில் காவலாளியான அப்பாவி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று கொலை செய்த தி.மு.க., அரசின் காவல் துறை, இந்த குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல், காலதாமதப்படுத்தி வருகிறது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகளை தப்ப விடுவதும், கைது செய்யாமல் அலட்சியப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது.திருத்தங்கலில் போதையில் மாணவர்கள், ஆசிரியரை தாக்கும் அவலம்; திருப்பூரில் பள்ளி மாணவர்களை, கஞ்சா அருந்திய சமூக விரோதிகள், துரத்தும் கொடுமை; அறந்தாங்கியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு வன்கொடுமை; நாமக்கலில் வறுமையை பயன்படுத்தி, உடல் உறுப்புகள் கொள்ளை; இணையவழி சூதாட்டத்தில், 91 பேர் இறந்துள்ளனர்.இத்தனை சமூக பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிலையில், 'யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது' எனக் கூறுவது வெட்கக்கேடானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.