உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு; திடீரென நிலைமாறிய பழனிசாமி

டில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு; திடீரென நிலைமாறிய பழனிசாமி

'நான் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாக, பத்திரிகைகளில் எழுதுகின்றனர்' என, நேற்று முன்தினம் இரவு ஆவேசமாக பேசிய, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டு, நேற்றிரவு அமித் ஷாவை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது . துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள, தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக, பழனிசாமி டில்லி செல்ல உள்ளதாக, கடந்த 14ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிவித்தது. உட்கட்சி பிரச்னை புதிதாக கட்டப்பட்ட அ.தி.மு.க., அலுவலகத்தை காண, கடந்த மார்ச் 25ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, திடீரென அமித் ஷாவை சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது. அதேபோல், தற்போது டில்லி செல்லும் பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணிகளை, 10 நாட்களில் துவக்க வேண்டும் என, பழனிசாமிக்கு கெடு விதித்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த வாரம் டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். இதனால், டில்லி செல்லும் பழனிசாமி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வலிமைப்படுத்துவது, பா.ஜ., கூட்டணியில் இருந்து, தினகரன், பன்னீர்செல்வம் வெளியேறியது, செங்கோட்டையன் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசுவார் என, பரபரப்பாக செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த அண்ணாதுரை பிறந்த தின பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'டில்லி சென்று அமித் ஷாவை சந்திக்கிறார். உட்கட்சி பிரச்னை பற்றி பேச்சு நடத்துகிறார் என, என்னைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுகின்றனர்.

கைக்கூலி '

அ.தி.மு.க.,வை எவராலும் எதுவும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தை விட, தன்மானமே முக்கியம். அதில் இம்மியளவும் விட்டு கொடுக்க மாட்டேன். 'சில பேரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு விரைவில் முடிவுகட்டப்படும்' என, ஆவேசமாக பேசினார். அதற்கு மாறாக, 24 மணி நேரத்தில், தனது நிலையை மாற்றிக் கொண்ட பழனிசாமி, நேற்று டில்லியில் அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து, 30 நிமிடங்கள் பேசினார். அப்போது, கட்சியையும் கூட்டணியையும் பலப்படுத்த பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும் என பழனிசாமியிடம் அமித் ஷா வலியுறுத்தியதாக கூறப் படுகிறது. ஒரே நாளில் பழனிசாமியின் நிலை மாறியிருப்பது, அ.தி.மு.க.,வில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் பேசு பொருளாகி இருக்கிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை