உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரி பேட்டையாக்குகிறது மாநகராட்சி

ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரி பேட்டையாக்குகிறது மாநகராட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை,:கோவை மாநகராட்சி சார்பில், வெள்ளலுாரில், 61.62 ஏக்கரில், 168 கோடியில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. இதில், 50 சதவீத தொகையான, 84 கோடியை தமிழக அரசு வழங்கும்; மீதமுள்ள, 84 கோடியை மாநகராட்சி பொதுநிதியில் இருந்தோ அல்லது வங்கியில் கடன் பெற்றோ, செலவழித்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டது.பிரதான கட்டடம் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கான பே மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது; 37 சதவீத பணி முடிந்திருக்கிறது; மாநகராட்சி பங்களிப்பில் 52.46 கோடி செலவிடப்பட்டது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை, 84 கோடி விடுவிக்கப்படவில்லை. 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதிர்ச்சியடைந்த மக்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி பார்க்காமல், மீதமுள்ள நிதியை ஒதுக்கி, பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தும், ஒன்றும் நடக்கவில்லை.

வளர்ச்சி அடையும்

நவ., 5ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தபோது, அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல, நம் நாளிதழில் படத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டது. அதிகாரிகளிடம் முதல்வர் விசாரித்த போது, மாநகராட்சி அதிகாரிகள் முதல்வருக்கு சரியாக விளக்கி கூறவில்லை. தற்போது காய்கறி மற்றும் பழ மார்க்கெட், லாரி பேட்டையாக பஸ் ஸ்டாண்டை மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட், எல் அண்டு டி பைபாஸில் இருந்து, 1.95 கி.மீ., துாரத்திலும், நகர மையத்தில் இருந்து, 8.25 கி.மீ., துாரத்திலும் அமைந்திருக்கிறது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைந்தால், தெற்குப்பகுதி வளர்ச்சி அடையும். நீலாம்பூரில் அமையும் 'மெட்ரோ ரயில் டெப்போ'வுக்கு பயணியர் எளிதாக செல்ல முடியும்.பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் முன் சாத்தியக்கூறுகளை, அ.தி.மு.க., ஆட்சியில் பணிபுரிந்த மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், நிதித்துறை செயலர் மற்றும் 'டுபிட்சல்', 'டுபிட்கோ' உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கள ஆய்வு செய்து, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்ட அனுமதி அளித்தனர்.

முரண்பாடு

அதன் பிறகே பணி துவங்கியது. அ.தி.மு.க., ஆட்சியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் உயர் பொறுப்பில் உள்ளனர். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் செயல்பட தகுதியான இடமில்லை எனகூறுவது முரண்பாடாக இருக்கிறது. இதற்குமுன் பணிபுரிந்த அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் கட்ட அனுமதி அளித்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.இச்சூழலில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்தை மார்க்கெட் மற்றும் லாரிபேட்டை உபயோகத்துக்கு மாற்றும் தீர்மானம், வரும், 30ம் தேதி மாநகராட்சியில் நடைபெற உள்ள கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற உள்ளது.பஸ் ஸ்டாண்டை ஏன் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என்பதற்கான காரணத்தை, மாநகராட்சி நிர்வாகம் சொல்லவில்லை. இதிலிருந்தே திட்டமிட்டு, தெற்குப்பகுதியை தி.மு.க., அரசு புறக்கணிக்கிறதா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

செய்யப்போகிறார்?

கடந்த, 2014ல் கோவை மேயர் பதவி இடைத்தேர்தலில், தற்போதைய தி.மு.க., - எம்.பி.,யான ராஜ்குமார், அ.தி.மு.க., வேட்பாளராக இருந்தார். ராஜ்குமாரை ஆதரித்து, அப்போதைய முதல்வர் ஜெ., பிரசாரம் செய்தபோது, 'கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெள்ளலுாரில், 61.62 ஏக்கரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும்' என, அறிவித்திருந்தார்.தற்போது தி.மு.க.,வில் இணைந்து, கோவை எம்.பி.,யாகி உள்ள ராஜ்குமார், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் துடிப்பதை தடுப்பாரா, அமைதி காப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

G Vaman
டிச 30, 2024 16:54

ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையம், நெரிசல் இல்லாத நகரத்தை உறுதிசெய்யும் ஒரு யோசனையாகும், அதே நேரத்தில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கை எதிர்காலத்தில் பூங்காவாக மாற்றுவதன் மூலம் பச்சைப் போர்வையை வளர்த்து வெள்ளலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஒவ்வொரு மண்டலத்துக்கும் வெளியே 5 இடங்களில் குப்பைக் கிடங்கு இடம் கிடைத்ததும். இனியாவது அரசு பரிசீலித்தால் அந்தத் தேர்வு சிறப்பாக இருக்கும்.


Ram pollachi
டிச 29, 2024 21:16

இன்னும் எத்தனை பேருந்து நிலையங்களை அமைப்பதாக உத்தேசம்... சாய்பாபா கோவில் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் நிறுத்த மாட்டோம் எங்களுக்கு காந்திபுரம் தான் வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவு வாங்கி விட்டதால் ஊட்டி , மற்றும் பெங்களூர், மைசூர் வண்டிகள் மட்டும் பயன்படுத்துகிறார்கள். வெள்ளலூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது பஸ் நிலையம் வருவதாக தகவல் வந்த உடன் பழைய மர சாமான், பழைய இரும்பு வியாபாரிகள் இடங்களை வாங்கி குவித்து விட்டார்கள்... போதா குறையாக லாரி பேட்டை, காய்கறி , கனி, மீன் இறைச்சி மார்கெட் அமைத்தால் உக்கடம் ஆத்து பாலம், என்.பி இட்டேரி, குறிச்சியின் துணை ஏரியாவாக மாறி மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். அந்த இடத்தை அப்படியே விட்டுவிடுங்கள்....


Ramesh Ramesha
டிச 29, 2024 17:18

அதிமுக வின் நிர்வாக அலட்சியம் அனைவரும் அறிந்ததேஇனி கொங்கு மண்டல தலைநகர் கோவையை திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம்திராவிட மாடல் அரசின் மூலம் இன்னும் பல நலதிட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு பெற்று தருவோம்?️???


அப்பாவி
டிச 29, 2024 07:46

இதுக்கெல்லாம் பணம் முழுதும் ஒதுக்கபட்ட பின் தான் கட்டுமானமே ஆரம்பிச்சிருக்கணும். அம்மா என்னமோ பொருளாதாரப்.புலி மாதிரி நியுஸ்.எல்லா ஆட்சியும் திருட்டு திராவிட ஆட்சிதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை