லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, ஹரியானா அரசியலில் பல அதிரடிகள் அரங்கேறி உள்ளன. பா.ஜ.,வுடனான ஐந்தாண்டு உறவை ஜே.ஜே.பி., எனப்படும், ஜனநாயக ஜனதா கட்சி முறித்துக் கொண்டது. முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த முறை மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக, பா.ஜ.,வின் ஓ.பி.சி., பிரிவின் முகமாக உள்ள நாயப் சிங் சைனி முதல்வரானார். குற்றச்சாட்டு
மனோகர் லால் கட்டாரை கர்னால் லோக்சபா தொகுதி வேட்பாளராக பா.ஜ., தலைமை அறிவித்தது. இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஹரியானாவில் ஏன் இந்த திடீர் மாற்றம்?பா.ஜ., - ஜே.ஜே.பி., பிளவின் பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.ஹரியானாவில், ஜாட் சமூகத்தினர் 20 - 29 சதவீதம் உள்ளனர். விவசாயிகளான இவர்களின் ஓட்டு, தேர்தல் வெற்றியை தீர்மானிக்கிறது. ஜாட் அல்லாத சைனி, பனியா, பிராமணர்கள், யாதவ், பஞ்சாபி ஓட்டுகளை பா.ஜ., கணிசமாக பெற்று 2014ல் ஆட்சி அமைத்தது. ஹரியானா வரலாற்றில் இல்லாத அதிசயமாக, ஜாட் சமூகத்தை சாராத மனோகர் லால் கட்டார் முதல்வராக்கப்பட்டார். கடந்த 2019 தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பா.ஜ.,வுக்கு கிடைக்காததால், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவு பெற்ற துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான, ஜே.ஜே.பி.,யின் 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. அதன் பின் நடந்த விவசாயிகள் போராட்டம், இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டம், பா.ஜ., - எம்.பி., யான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு உள்ளிட்டவை பா.ஜ., - ஜே.ஜே.பி., கூட்டணியில் மெல்ல புகைச்சலை ஏற்படுத்தியது.அந்த நெருக்கடியிலும் கூட்டணி தொடர்ந்தது.லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதால், 'டேமேஜ் கன்ட்ரோல்' உத்தியில் ஜே.ஜே.பி., இறங்கியுள்ளது. பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதால் மட்டுமே, தங்கள் ஓட்டு வங்கியான ஓ.பி.சி., பிரிவினரின் கோபத்தை தணிக்க முடியும். அதற்கான காய் நகர்த்தலாகவே இந்த கூட்டணி முறிவு பார்க்கப்படுகிறது.பா.ஜ.,வை பொறுத்தவரை, சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மாநில முதல்வர்களை மாற்றும் உத்தியை, 2021 முதல் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். இது, தேர்தலில் அவர்களுக்கு நல்ல பலனையே இதுவரை அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகிக்கும் கட்டார் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பது இயல்பு. இதை சரி செய்தது மட்டுமின்றி, ஓ.பி.சி., முகமான நாயப் சைனியை முதல்வராக்கி, அந்த பிரிவினரின் ஆதரவையும் பா.ஜ., பெற்றுஉள்ளது. இந்த கூட்டணி முறிவால் ஏற்பட்டுள்ள மாற்றம் பா.ஜ.,வை வலுப்படுத்தியதுடன், ஜே.ஜே.பி., தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் கட்டுப்பாட்டில் இருந்து கட்சி நழுவி செல்வதையும் உணர்த்தி இருக்கிறது. காங்., முயற்சி
அவரது கட்சியை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள், துஷ்யந்த் கூட்டிய மிக முக்கியமான கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காமல், நாயப் சைனியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றதே அதற்கு சாட்சி. இதற்கிடையே, களத்தில் பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய சவாலாக காங்கிரஸ் கட்சியும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹரியானா எதிர்க்கட்சி தலைவரான பூபிந்தர் சிங் ஹுடா, 'காங்., வெற்றி பெற்றால், வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த நான்கு பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவர்' என, அறிவித்து உள்ளார். ஜாதி அரசியல் பிரதானமாக உள்ள ஹரியானாவில் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜாட் அல்லாத சமூகத்தினரின் ஓட்டு களை கவர, காங்., முயற்சிப்பதை காட்டுகிறது.- நமது சிறப்பு நிருபர் -