சென்னை: பெண்களையும், சைவ, வைண சமயங்களையும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு, அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பதவி பறிப்பு எப்போது என, அனைத்து தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது. கட்சி பதவி பறிப்பு என்பது கண்துடைப்பு என்பதால், அமைச்சர் பதவியில் இருந்து, அவரை நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெண்கள் மற்றும் ஆன்மிகவாதிகளிடம் ஏற்பட்டு உள்ளது. 'பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனில், வரும் தேர்தலில், தி.மு.க., ஓட்டு பறிபோகும்' என, தி.மு.க.,வினரே கொந்தளிக்கின்றனர்.விழுப்புரத்தில் கடந்த 6ம் தேதி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். விலைமாதுவுடன் சைவம், வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி, மிகவும் ஆபாசமாக கொச்சைப்படுத்தி பேசினார். பெண்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், மிகவும் அசிங்கமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது, அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இந்த வீடியோ, நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பரவியதும், பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு, பெண்களும், ஹிந்து சமய ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து, பொன்முடி பேச்சை கண்டித்து, தி.மு.க., - எம்.பி., கனிமொழி அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால், அவர் வகித்து வரும் வனத் துறை அமைச்சர் பதவி பறிக்கப்படவில்லை.அவரது கட்சி பதவி பறிப்பு குறித்து, தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கையில், 'கட்சியின் துணை பொதுச்செயலர் பொன்முடி, அவர் வகித்த பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்' என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பேச்சை கண்டிப்பதாகவோ, அதற்காக வருந்துவதாவோ கூட, எந்த வார்த்தையும் சொல்லப்படவில்லை.ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியின் சாதனை திட்டமாக கருதப்படுகிற, மகளிர் விடியல் பஸ் பயணத் திட்டத்தை பற்றி, கடந்த ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில் பொன்முடி பேசுகையில், 'அரசு பஸ்சில் பெண்கள் ஓசியில் பயணிக்கின்றனர்' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதற்கு அவரை முதல்வர் ஸ்டாலின் கண்டித்தார். தற்போது மீண்டும் பெண்களையும், ஹிந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர்களையும் புண்படுத்தும்படி பொன்முடி பேசியிருப்பதால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும்; அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, மகளிர் அமைப்புகளும், ஹிந்து மத அமைப்புகளும் போர்க்கொடி துாக்கி உள்ளன. 'பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனில், வரும் தேர்தலில், தி.மு.க., ஓட்டு பறிபோகும்' என, தி.மு.க.,வினரே கொந்தளிக்கின்றனர்.'அமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர்'
'விலைமாதர் --- வாடிக்கையாளர் உரையாடலை, சைவ, வைணவ சமயங்களின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு பேசிய வனத் துறை அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.'அமைச்சர் பொன்முடி வாயைத் திறந்தாலே அசிங்கம், அவதுாறு, ஆபாசம், கொச்சைத்தனம் தான்; பொன்முடி, அமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர்' என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தி.மு.க., அரசின் அமைச்சரவையில், இழுக்கின் முதலிடமாக இருப்பவர் பொன்முடி. வாயைத் திறந்தாலே அசிங்கம், அவதுாறு, ஆபாசம், கொச்சைத்தனம்தான். அதன் உச்சமாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பெண்களையும், மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி, அவர் பேசியுள்ள பேச்சு நாறிக்கொண்டு இருக்கிறது. ஆபாசம், வக்கிரப் புத்தி, தி.மு.க.,-வின் மரபணுவில் கலந்ததுதான். மனித நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் இவர்கள் நாகரிகமற்ற, ஆபாச எண்ணம் படைத்த காட்டுமிராண்டிகளாக தான் இருக்கின்றனர் என்பது கடும் கண்டனத்திற்குரியது. பொன்முடியின் இந்த ஆபாச பேச்சை, அமைச்சர் சேகர்பாபு ஏற்கிறாரா? மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவரான ருக்மணியின் மகனான அமைச்சர் தியாகராஜன் ஏற்கிறாரா? வெறும் கண்துடைப்புக்காக பொன்முடியின் கட்சிப் பதவியை மட்டும் பறித்து, ஸ்டாலின் நடத்தும் நாடகத்தை மக்கள் துளிகூட நம்ப மாட்டார்கள். உண்மையான நடவடிக்கை என்பது, அமைச்சர் பதவியை பறிப்பதுதான். ஆபாச பேச்சு பேசிய பொன்முடி, அமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர். உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்!
'சைவ, வைணவத்தை பின்பற்றுவோரை ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசிய அமைச்சர் பொன்முடியை, அமைச்சர் பதவியிலிருந்தும் முதல்வர் நீக்க வேண்டும்' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். வானதி சீனிவாசன் அறிக்கை:விழுப்புரத்தில் நடந்த தி.க., நிகழ்ச்சியில் பேசிய, தி.மு.க., துணை பொது செயலரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி, விலைமாதர் -- வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை, இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசிய பொன்முடி, எந்தப் பதவி வகிக்கவும் தகுதியற்றவர். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். தி.மு.க., பதவியிலிருந்து மட்டும் நீக்கி, மக்களை ஏமாற்ற நினைக்கிறார், முதல்வர். பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் மட்டுமே இத்தகைய அவலம்
ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை :பெ.தி.க., கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருநீறு, திருமண் ஆகியவற்றை குறிப்பிட்டு, மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். பொது வெளியில் பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில், இவ்வாறு அவர் பேசியுள்ளது கண்டனத்துக்குரியது. இதற்காகவே அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும். இதுபோல் அநாகரிகமாக தொடர்ந்து பேசுவது, தி.மு.க.,வினரின் வழக்கமாக உள்ளது.இதுபோல், வேற்று மதம் குறித்து யாராவது பேசியிருந்தால், சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தால், போலீசார் நள்ளிரவில் கைது செய்திருப்பர். ஹிந்துக்களின் புனித அடையாளங்களை தரக்குறைவாக ஒரு அமைச்சரே பேசும் அவலம், தமிழகத்தில் உள்ளது என்பது மிகுந்த வேதனையாக உள்ளது.தி.மு.க., - எம்.பி., ராஜா, 'கட்சியினர் ஹிந்து மத சின்னங்களை அணியக் கூடாது' என்கிறார். இதுபோன்ற பேச்சுகள், அவர்கள் உள்நோக்கத்தை தெரிவிப்பதாக உள்ளன. அக்கட்சி தலைவர்களுக்கு ஹிந்து மத நம்பிக்கை இல்லை என்றால், அது அவர்களது தனிப்பட்ட உரிமை. கட்சியில் இருப்போர் மதச் சின்னங்களை அணியக் கூடாது என்பதும், மத நம்பிக்கையை அமைச்சர் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது.பொன்முடியின் பேச்சைக் கண்டித்து, அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும். இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கொச்சைப்பேச்சு கண்டிக்கத்தக்கது
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: முன்பு உயர் கல்வி அமைச்சராகவும், இப்போது வனத்துறை அமைச்சராகவும் இருக்கும் பொன்முடியின் தரம்தாழ்ந்த பேச்சு கண்டனத்திற்குரியது. ஒட்டுமொத்த தி.மு.க., சூழலும் மோசமானது, அசிங்கமானது, அநாகரிமானது. இவ்வளவு அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தியதற்காக, முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும். ஹிந்து தர்மத்தின் மீது, தி.மு.க., நடத்தும் இடைவிடாத தாக்குதலுக்கு பதிலடி கிடைத்தே தீரும். எங்கள் அமைதியை பலவீனமாக கருத வேண்டாம்.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி: அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட கொச்சையான பேச்சு கண்டிக்கத்தக்கது.த.மா.கா., தலைவர் வாசன்: சைவ, வைணவ மதத்தையும், பெண்களையும் இழிவுப்படுத்தி, அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் முஸ்தபா: பெண்களையும், சைவம், வைண மதத்தையும் அவமதிக்கும் வகையில், அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவரால் தமிழகத்தின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை அமைச்சர் பதவியிலிருந்து, டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.சைவ சித்தாந்தக் கழகம்: சைவ, வைணவ சமயத்தார்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக, பொன்முடி அநாகரிக முறையில் பேசியுள்ளார். தி.மு.க.,வினரால் ஹிந்து மதத்தை குறிப்பாக, சைவ சமயத்தையும் வைணவ சமயத்தையும் மட்டுமே, இழிவாகப் பேச முடியும். இதேபோல் மற்ற மதங்களை, இவர்களால் இழிவுபடுத்தி பேச முடியுமா? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
திருச்சி சிவாவுக்குது பொ.செ., பதவி
தி.மு.க., துணை பொதுச்செயலராக, திருச்சி சிவா எம்.பி.,யை நியமித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க.,வில் கொள்கை பரப்பு செயலராக இருக்கும் திருச்சி சிவா எம்.பி.,யை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, தி.மு.க., துணை பொதுச் செயலராக நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.இதையடுத்து, சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சிவா நன்றி தெரிவித்தார்.