உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மின்வாரியம் தருகிறது ஷாக்; மின்வகையை திடீரென மாற்றி!

மின்வாரியம் தருகிறது ஷாக்; மின்வகையை திடீரென மாற்றி!

கோவை : ஒருவரது பெயரில் ஒரே வளாகத்தில் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அதில் ஒன்றை வீட்டு இணைப்பிலிருந்து வகை மாற்றம் (டேரிப் சேஞ்ச்) செய்து, அதிக மின்கட்டணம் வசூலிப்பதாக, மின்வாரியத்தின் மீது நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.வீட்டு இணைப்புக்கு (1ஏ) மட்டுமே 100 யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும், ஒவ்வொரு யூனிட்டிற்கும் கட்டணம் உண்டு. வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள், வீட்டுப்பயன்பாட்டிற்கே முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

கட்டணம் உண்டு

அதைத்தாண்டி, ஒருங்கிணைந்த குடியிருப்புக்கு தேவையான மோட்டார் பம்ப்செட் இயக்குதல், பொதுப்பயன்பாட்டிற்கான மின்விளக்குகள் மற்றும் லிப்ட் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு, பொதுப்பயன்பாட்டுக்கான கட்டணம் விதிக்கிறது மின்வாரியம்.இந்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்கள், அவரது பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை பயன்படுத்துகின்றனர்.குடியிருப்பு வளாகத்திற்கு தேவையான, பொதுப்பயன்பாடு இருந்தால், மின்சாரத்தை தனியாக பெற்று பயன்படுத்த வேண்டும். அதற்கான விதிமுறைகளை மின்வாரியம் வகுத்துள்ளது. அதன்படி, புதிதாக மின் இணைப்புகளையும், வழங்கி வருகிறது.

பணியாளர்கள் ஆய்வு

ஏற்கனவே வழங்கப்பட்ட, வீட்டு மின்இணைப்புகளை தற்போது மின்வாரியம் ஒழுங்குபடுத்தி வருகிறது. அதற்காக மின்வாரியப்பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அப்படி கள ஆய்வுக்கு வரும் மின்வாரியப்பணியாளர்கள், நுகர்வோர்களிடம் எதையும் தெரிவிக்காமல், வகை மாற்றம் செய்துள்ளனர். இதனால், இந்த மாத மின் கட்டணம், ஒரு இணைப்புக்கு மட்டும் பல மடங்கு கூடியுள்ளது.தற்போது, மின்வாரிய விதிமுறைகளுக்கு புறம்பாக, வீட்டு மின் இணைப்புகளை பொது மின் இணைப்பாக அதாவது, '1ஏ'வை '1இ' என்று மாற்றம் செய்து,அதிக மின்கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக பல நுகர்வோர், மின்வாரியத்தின் மீது புகார் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து, மின்வாரிய கோவை மண்டல மேற்பார்வை பொறியாளர் (கோவை தெற்கு) சுப்ரமணியன் கூறியதாவது:ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்பு வைத்திருப்போர், எவ்விதத்திலும் அச்சப்பட தேவையில்லை. பத்து வீடுகளுக்கும் அதிகமாக, மூன்று மாடிகளுக்கும் அதிகமாக இருந்து, அதில் லிப்ட் பயன்படுத்தப்பட்டால், அதிலுள்ள லிப்ட் மற்றும் பொதுப்பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின் இணைப்பு, 1டி ஆக மாற்றப்படும்.இதற்கு கட்டணமாக, ஒரு கி.வா.,107 ரூபாய், ஒரு யூனிட்டிற்கு 8.55 ரூபாய், நிலைக்கட்டணம் ஒரு கி.வா.,214 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் உத்தரவு

நான்கு வீடுகளுக்கு அதிகமாக, பத்து வீடுகளுக்கும் குறைவாக, மூன்றடுக்குக்கு குறைவாக லிப்ட் இல்லாமல் இருந்தால், அங்குள்ள பொதுப்பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும், ஒரு வீட்டு மின் இணைப்பு, '1இ' ஆக மாற்றப்படும்.இதற்குகட்டணமாக, ஒரு யூனிட்டிற்கு 5.75 ரூபாய், ஒரு கி.வா.,107 ரூபாய், நிலைக்கட்டணமாக ஒரு கி.வா., 214 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது மின்வாரியத்தின் உத்தரவு. இதை மீறி மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விதிமுறைகளுக்கு முரணாகவோ, மீறியோ மின் இணைப்பை மாற்றினால், எனக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம். ஆய்வு மேற்கொண்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், வீட்டு மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும். இவ்வாறு, சுப்ரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Neelakanta Pillai
அக் 11, 2024 03:31

அரசின் தவறான கொள்கையாலும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முறைகேடான ஊக்குவித்தலும் தான் மின்வாரியம் இது போன்ற அத்துமீறல்களை செய்கிறது. நுகர்வோர் விழிப்புடன் இருந்தால் மட்டும்தான் தீர்வு கிடைக்கும். இதுபோல் நாகர்கோவிலில் மூன்றில் ஒரு மின் இணைப்பை டேரிஃ 1டி ஆக மாற்றபோகிறோம் என்று சொன்னதற்கு நுகர்வோர் நோட்டீஸ் கொடுத்ததால் அவர்கள் கொடுத்த கடிதத்தை திரும்ப பெற்றார்கள். களவானித்தனம் செய்யும் ஒட்டுமொத்த அரசு இயந்திரம்.


Saai Sundharamurthy AVK
அக் 09, 2024 11:35

மிகவும் அநியாயம் செய்கிறார்கள். பொது பயன்பாட்டுக்கு இவ்வளவு காலமாக வெறும் 80, 100 என்று வந்து கொண்டிருந்த கட்டணம் இன்று 1200 ரூபாய் வரை வந்திருக்கிறது. வீட்டில் உள்ளவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்ல மறுக்கிறார்கள். அவர்களாகவே வீட்டுக்குள் நுழைகிறார்கள். ரீடிங் எடுக்கிறார்கள். அட்டையில் கூட குறிப்பதில்லை. ஆன்லைனில் கட்டணத்தை பதிவேற்றம் செய்து விடுகிறார்கள். இத்தனைக்கும் ஒவ்வொரு மாத அளவீடு என்பது கிடையாது. இன்று ரீடிங் எடுத்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து போன் செய்து கட்டணம் கட்டி விட்டீர்களா ??? இல்லையெனில் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். இத்தனைக்கும் 20 நாட்கள் அவகாசம் என்று ஆன்லைனில் காட்டுகிறது. அக்கிரமம் செய்து வசூலிக்கிறார்கள். அராஜகம். திமுக அரசு ஒழிக ! டம்மி முதல்வர் ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும்.


சமீபத்திய செய்தி