சென்னை: வாரிசு சான்றிதழ் கோரி, ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை, எவ்வித விசாரணையும் இன்றி, காரணம் எதுவும் தெரிவிக்காமல், 30 நாட்கள் முடிந்ததும், அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒருவர் இறந்தால், அவரது பெயரில் உள்ள சொத்துக்கள், பணப்பயன்களை, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் பெறலாம். இதற்கு, சம்பந்தப்பட்ட வாரிசுகள் யார் என்பதற்கு, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் பெற வேண்டும். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, www.tnesevai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பயனராக பதிவு செய்து, பொதுமக்கள் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, வாரிசு சான்றிதழுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதுதவிர, 'இ - சேவை' மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். உண்மை தன்மை
இந்த விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட வருவாய் ஆய்வாளருக்கு, ஆன்லைன் முறையில் அனுப்பப்படும். அவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அதில் சந்தேகம் எழுந்தால் அல்லது கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டால், விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொள்ளலாம். விண்ணப்பம் தற்போது யாரிடம் உள்ளது என்பதும், மனுதாரருக்கு ஆன்லைன் வாயிலாக தெரியவரும். இந்த அடிப்படை விசாரணை பணிகளை, மனு தாக்கலானதில் இருந்து, 30 நாட்களுக்குள் வருவாய் ஆய்வாளர்கள் முடிக்க வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல இடங்களில் மனுதாரர்களிடம் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல், வருவாய் ஆய்வாளர்கள் விண்ணப்பங்களை அடாவடியாக தள்ளுபடி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பொதுமக்கள் எவ்வித தாமதமும் இல்லாமல், வாரிசு சான்றிதழ்கள் பெற வேண்டும் என்பதற்காக, ஆன்லைன் திட்டம் துவக்கப்பட்டது. இதில், ஒவ்வொரு நிலை அலுவலரும், விண்ணப்பங்களை முடிக்க, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வாரிசு சான்று கோரும் விண்ணப்பங்கள் தொடர்பாக எவ்வித விசாரணையும் நடத்தாமல், அப்படியே வைக்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட, 30 நாட்கள் முடியும் போது, விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறிப்பை பதிவேற்றம் செய்கின்றனர். குழப்பம்
ஆனாலும், மனுக்கள் எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விபரத்தை தெரிவிப்பதில்லை. அதனால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் பலருக்கு ஏற்படுகிறது. எதற்காக தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற விபரத்தை தெரிவித்தால், அதை சரி செய்து, மீண்டும் விண்ணப்பிக்க உதவியாக இருக்கும்.பெரும்பாலான இடங்களில், இறந்த நபரின் பணி தொடர்பான பணப்பயன்களை நம்பியுள்ள குடும்பத்தினர், உரிய சமயத்தில் வாரிசு சான்றிதழ் பெற முடியாததால், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சொத்து பரிமாற்றம் தொடர்பாகவும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்படும் மனுக்கள் விஷயத்தில், உயர் அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.