உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயார்: பா.ஜ.,வில் 234 தொகுதி பொறுப்பாளர்கள்

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயார்: பா.ஜ.,வில் 234 தொகுதி பொறுப்பாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ.,வில் சட்டசபை தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக, 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளரை, மாநில தலைவர் நாகேந்திரன் நியமித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஐந்து மாதங்களே உள்ளன. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி கூட்டம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. பொறுப்பாளர்களும், வாரந்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று, தேர்தல் பணிகள் குறித்து கட்சியினரிடம் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மண்டல பொறுப்பாளர்களிடம் அளித்து வருகின்றனர். தமிழக பா.ஜ.,வில், 234 தொகுதிகளுக்கும், தலா ஒரு பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர் என மூன்று பேரை, மாநில தலைவர் நாகேந்திரன் நேற்று முன்தினம் நியமித்துள்ளார். சில தொகுதிகளில், இரு இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணமாக, அந்த தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை வேளச்சேரி தொகுதி பொறுப்பாளராக அமர்பிரசாத் ரெட்டி, அமைப்பாளராக டால்பின் ஸ்ரீதர், இணை அமைப்பாளர்களாக கராத்தே தியாகராஜன், சாய் சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தி.நகர் தொகுதியின் பொறுப்பாளராக வினோஜ் செல்வம், அமைப்பாளராக பிரேம்குமார், இணை அமைப்பாளர்களாக பிரமிளா சம்பத், உமா ஆனந்த்; அண்ணா நகர் பொறுப்பாளராக லதா சண்முகசுந்தரம், அமைப்பாளராக அர்ஜுன மூர்த்தி, இணை அமைப்பாளராக சுமதி வெங்கடேஷ் நியமிக்கப்பட்டு உள்ளனர். அம்பத்துார் தொகுதி பொறுப்பாளராக சக்கரவர்த்தி, அமைப்பாளராக பாஸ்கர், இணை அமைப்பாளராக தினேஷ்ராஜா; கொளத்துார் தொகுதி பொறுப்பாளராக பால் கனகராஜ், அமைப்பாளராக தட்சிணாமூர்த்தி, இணை அமைப்பாளராக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், அனைத்து தொகுதிக்கும் பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் பணிகளை மேற்பார்வையிடுவதுடன், கூட்டணி கட்சியான அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வர். இது தவிர, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதாரணி உட்பட, 212 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும், 87 பேர் சிறப்பு செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை