-- நமது நிருபர் -: தமிழ் சினிமாவின், இத்தனை ஆண்டு கால வரலாற்றில் அதிகமான படங்கள் வெளியான ஆண்டாக 2025 உள்ளது. ஜனவரி முதல் டிசம்பரில் முதல் இரு வாரங்கள் வரை, 270 படங்கள் வெளியாகிவிட்டன. இந்தாண்டு இறுதிக்குள் இது, 280ஐ தாண்டலாம். ஆனால், எதிர்பார்த்த வசூல் இல்லாமல் துறை பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. தென்மாநில மொழிகளுக்கான திரைப்பட தயாரிப்பு, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து தான் ஆரம்பமானது. ஆனால், இன்று சில சாதனைகளில் தமிழ் சினிமாவை விடவும், மற்ற தென்மாநில மொழிகள் முந்தி செல்கிறது. இந்திய அளவில், இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த படங்களில், தமிழ் படமான ரஜினியின், கூலி 600 கோடி ரூபாயை கடந்து, நான்காவது இடத்தில் உள்ளதாக, பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணி நடிகர்கள் கன்னட படமான, காந்தாரா சாப்டர் 1 900 கோடி ரூபாய் வசூலை கடந்து முதலிடத்தில் உள்ளது. ஹிந்தி படங்களான, சாவா, 800 கோடியுடன் இரண்டாமிடத்திலும், சாயாரா 630 கோடி வசூலை நெருங்கி மூன்றாமிடத்திலும் உள்ளன.இந்தாண்டு, விஜய் தவிர்த்து அநேக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. ரஜினிக்கு கூலி, கமலுக்கு தக் லைப், அஜித்திற்கு விடாமுயற்சி, குட் பேட் அக்லி, விக்ரமிற்கு வீர தீர சூரன் 2, சூர்யாவிற்கு ரெட்ரோ, தனுஷிற்கு குபேரா, இட்லி கடை, விஜய் சேதுபதிக்கு ஏஸ், தலைவன் தலைவி, சிவகார்த்திகேயனுக்கு மதராஸி, விஷாலுக்கு மதகஜராஜா, பிரதீப் ரங்கநாதனுக்கு டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில், கூலி, குட் பேட் அக்லி, தலைவன் தலைவி, மத கஜ ராஜா, டிராகன், டியூட், டூரிஸ்ட் பேமிலி, பைசன், மாமன், குடும்பஸ்தன், ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் லாபம் தந்தன. கூலி, குட் பேட் அக்லி தவிர்த்து மற்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, அதிக லாபம் தந்தவை. தக் லைப், விடா முயற்சி, ரெட்ரோ, குபேரா, இட்லி கடை, ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் சில படங்கள், 100 கோடி, 50 கோடி என வசூலை தந்தாலும், நஷ்டத்தையே தழுவின. குபேரா படம் தமிழில் நஷ்டமும், தெலுங்கில் லாபமும் தந்தது. மிளிர்கிறார் ஒரே ஆண்டில், டிராகன், டியூட் ஆகிய படங்களின் மூலம் இரண்டு, 100 கோடி ரூபாய் வசூலை குவித்தவராக பிரதீப் ரங்கநாதன் மிளிர்கிறார். டப்பிங் படமாக வந்த, காந்தாரா சாப்டர் 1, அனிமேஷன் படமாக வந்த மகாஅவதார் நரசிம்மா ஆகிய படங்கள் தமிழகத்தில் வசூலை குவித்து ஆச்சரியப்படுத்தியது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கான பட்ஜெட்டாக, 1,600 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அவற்றின் வசூலும், 1,600 கோடி தான். இந்த, 1,600 கோடி என்பது மொத்த தொகை. அதில் பங்கு தொகை, விளம்பர செலவு, இதர செலவுகள், ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கழிக்க வேண்டும். அப்படி பார்த்தால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு, 60 முதல், 70 சதவீதம் தான் போய் சேரும். கூட்டி கழித்து பார்த்தால், 600 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு படத்திற்குமான வியாபாரம் என்பது, சதவீதம், வினியோக அடிப்படையில் வெவ்வேறாக அமைந்திருக்கும். மீடியம் படங்கள் என, இந்த ஆண்டில் வெளியான படங்களில், குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, பைசன், டியூட், ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்களின் பட்ஜெட், 175 கோடி வரை இருக்கும். இந்த படங்கள் வசூலித்த தொகை, 600 கோடியை கடந்துள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களை காட்டிலும், இந்த படங்களை தான் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி படங்கள் என்று சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் வெளிவந்த, 270 படங்களில், 250 படங்கள் நஷ்டத்தையே தந்துள்ளன. அவற்றில் ஓரிரு படங்கள் இதர உரிமைகள் மூலம் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் வருவாயை கொடுத்திருக்கலாம். மற்றபடி அந்த படங்கள் மூலம், 1,400 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என, பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்சிகள் ரத்து சென்னை போன்ற பெரு மாநகரங்களின் முக்கிய பகுதிகளில், தனி தியேட்டர்கள் வார நாட்களில் பல காட்சிகள் ரத்து செய்யப்பட் டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சில காட்சிகளுக்கு மட்டுமே, 50 சதவீதத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் தமிழகம் முழுதும் உள்ள பல தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் அதிகம்.முன்னணி நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்; ஓ.டி.டி.,யில் படங்களை வெளியிட, 100 நாள் இடைவெளி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் சில நாட்களாக திரையுலகத்தில் எழுந்துள்ளன. ஓ.டி.டி., நிறுவனங்களும் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்குகின்றன. மற்ற சிறிய நடிகர்களையும், படங்களையும், கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. புதிய படங்களை வெளியிடுவதில், தமிழ் சினிமாவில் ஒழுங்குமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. அவரவர் வசதிக்கேற்ப படங்களை வெளியிடுகின்றனர். அறிவிக்கப்பட்டு தள்ளி போகும் படங்கள் என சில வாரங்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. இப்படியான சமயங்களில் சில 'ரீ-ரிலீஸ்' படங்கள் சில தியேட்டர்களை காப்பாற்றி வருகிறது. தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர்கள் சங்கம், நடிகர் சங்கம் என நிறைய சங்கங்கள் தமிழ் சினிமாவில் உள்ளன. ஆனால், புது படங்களின் வெளியீட்டில் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து இதுவரை பேசியதாக தெரியவில்லை. புத்தாண்டிலாவது அதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தினால் மட்டுமே தமிழ் சினிமாவின் வளர்ச்சி பாதை கொஞ்சமாவது சீராகும்.