உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கணக்கில் வராமல் ரூ.3.5 லட்சம்: தனியார் மருத்துவ கல்லுாரிகள் கறார்

கணக்கில் வராமல் ரூ.3.5 லட்சம்: தனியார் மருத்துவ கல்லுாரிகள் கறார்

தனியார் மருத்துவக் கல்லுாரிகள், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவோரிடம், கணக்கில் வராத வகையில், 3.5 லட்சம் ரூபாய் வசூலிப்பதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தமிழகத்தில், 22 தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், சிறுபான்மையினர் கல்லுாரிகளில், 50 சதவீதமும், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகளில், 65 சதவீத இடங்களும் அரசு ஒதுக்கீட்டுக்கு தரப்படுகின்றன.நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, சிறுபான்மை கல்லுாரிகளில், 35 சதவீதமும், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகளில், 20 சதவீதமும் ஒதுக்கப்படுகின்றன. மற்ற இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டிற்கு செல்கின்றன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 4.5 லட்சம் ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13.5 லட்சம் ரூபாய் வரை, அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையில், 11 லட்சம் வரை கேட்பதால், மாணவர்கள் பலர், அந்த ஒதுக்கீட்டில் சேர முடியாமல் இடங்களை கைவிட்டு வருகின்றனர். அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 19.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதுதொடர்பாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனகரத்தின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களுக்கு புகார் அளித்தால், முறையான பதில் கிடைப்பதில்லை என, பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறியதாவது: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கைக்கு செல்லும்போது, நுழைவாயிலிலேயே, மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். பின், மாணவர் சேர்க்கைக்கு முன், கணக்கில் வராத வகையில், 3.5 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். இதுதவிர, அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் இதர கட்டணம் செலுத்த வேண்டும். இந்த, 3.5 லட்சம் ரூபாய்க்கு எவ்வித ரசீதும் கொடுக்கவில்லை.தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, 'கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களா?' எனக் கேட்டு அனுப்பிய மின்னஞ்சலுக்கு இதுவரை பதிலில்லை. தனியார் கல்லுாரிகள், மருத்துவ பல்கலையில் உள்ள அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே நடப்பதால், கவுன்சிலிங் நடத்தாமல் பணம் கொடுப்பவருக்கு மட்டுமே மருத்துவ படிப்பு என, அறிவித்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தினமும், நுாற்றுக்கணக்கான மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றாக தெரிந்திருந்தும் அரசு மவுனம் ஏன்?

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வால், கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவம் படிக்க முடியாமல் இருப்பதாக, தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், நீட் தேர்வு எழுதி, கவுன்சிலிங்கில் இடம் பெற்றும், தனியார் கல்லுாரிகளில் கூடுதல் கட்டணம் கேட்பதால், கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தனியார் கல்லுாரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து, அரசு நன்றாக அறிந்துள்ள நிலையிலும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என, பாதிக்கப்படும் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

gvr
அக் 09, 2024 18:23

All run by dravidiya politicians, who do not want NEET, to increase their loot.


karthik
அக் 09, 2024 10:43

அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தும் அரசு மவுனமாக இருப்பது ஏன் என்று மாணவர்களுக்கு புரியாமல் தவிக்கிறார்களா? அடேய் நீட் எதிர்ப்பு நாடகமே அதிக வசூல் செய்ய முடியவில்லை என்பதால் தானே... பெரும்பாலான கல்லூரிகளின் பின்புலம் அரசியல்வாதிகளிடம் தான் இருக்கிறது என்பது எல்லாம் புரியாமல்தானே ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.


Sck
அக் 09, 2024 06:32

தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசியல்வியாதிகள் அல்லாது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களால் இந்த நாட்டில் (தமிழ்நாட்டில் மட்டும் அல்ல), நடத்தபடுகிறது. நீட்டை தமிழ்நாட்டில் எதிர்ப்பதற்கு இது ஒன்றே காரணம். பல கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கூட சரியாக இருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை