உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இபிஎஸ்.,க்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு: பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்

இபிஎஸ்.,க்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு: பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்

“அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, பொதுச்செயலர் பழனிசாமி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்,” என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த, 1972ல் அ.தி.மு.க., துவங்கப்பட்ட போதே, என் கிராமத்தில் கட்சியை துவக்கினேன். 1975ல் கோவையில் அ.தி.மு.க., பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடு குழுவின் தலைவராக அரங்கநாயகம், செயலராக திருப்பூர் மணிமாறன், பொருளாளராக என்னையும் எம்.ஜி,ஆர்., நியமித்தார். பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக, சத்யா ஸ்டூடியோவுக்கு அழைத்து, எம்.ஜி.ஆர்., பாராட்டினார். பின், 1977ல் சத்தியமங்கலத்தில் போட்டியிடுமாறு, எம்.ஜி.ஆர்., சொன்னார். 'அது புதிய தொகுதி' என நான் கூறியதும், 'என் பெயரைச் சொல்; வெற்றி கிடைக்கும்' என்றார்; அதுபோல வெற்றியும் கிடைத்தது. அப்படி மக்கள் செல்வாக்குமிக்க தலைவரான எம்.ஜி.ஆரே... கட்சியில் இருந்து எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் வெளியேறியபோது, அவர்கள் வீடுகளுக்கேச் சென்று அழைத்தார். என் நீண்டகால அரசியல் பயணத்தில், பல்வேறு பொறுப்புகளும், பல சோதனைகளும் வந்தன. கட்சிக்காக சோதனைகளை எதிர்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறேன். 'அ.தி.மு.க.,வுக்கு சோதனைகள் வந்தபோது, தடுமாற்றம் இல்லாமல் செயல்பட்டவர்' என, ஜெயலலிதா என்னை பாராட்டியிருக்கிறார். ஜெயலலிதா மறைந்ததும், பல்வேறு சோதனைகளை அ.தி.மு.க., சந்தித்தது. கட்சி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலாவை பொதுச்செயலர் ஆக்கினோம். அடுத்த முதல்வர் யார் என்ற நிலை வந்தபோது, பழனிசாமியை சசிகலா முன்மொழிந்தார். கட்சி நலனுக்காக, எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தேன். இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக, என் பணிகளை மேற்கொண்டேன். அ.தி.மு.க.,வை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். கட்சி துண்டு துண்டாகி விடக்கூடாது; மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன். 'அ.தி.மு.க.,வில், மூத்த தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை' என, சட்டசபையில் தி.மு.க., குற்றஞ்சாட்டியது. அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, 'இப்போது சட்டசபையில் என் அருகில் அமர்ந்திருப்பவர்கள், என்னை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். ஆனாலும், அனைவரையும் அரவணைத்து பாசத்தோடு, பண்போடு செயல்படுகிறேன். அரசியல் அனுபவம் உள்ளவர்களைக் கொண்டுதான் ஆட்சி நடத்துகிறேன்' என்றார். கடந்த, 2016க்குப் பின் தொடர்ந்து தேர்தலை சந்திக்கிறோம். 2019, 2024 லோக்சபா, 2021 சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி கிடைக்கவில்லை. 2024ல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்தால், 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். இதை, அ.தி.மு.க., பொதுச்செயலரிடம் கூறினோம்; அவர் ஏற்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பின், முன்னாள் அமைச்சர் வேலுமணியும், இதே கருத்தை வெளிப்படுத்தினார். கடந்த லேக்சபா தேர்தல் முடிந்ததும், நான், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகிய ஆறு பேரும் பழனிசாமியை சந்தித்தோம். அப்போது, 'தேர்தல் களத்தில் என்ன வியூகம் வகுத்தாலும் வெற்றி கிடைக்கவில்லை. எனவே, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்' என வலியுறுத்தினோம். இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பழனிசாமி இல்லை. அதன்பின், என்னை அழைத்து அவர் பேசவில்லை. 'மறப்போம்; மன்னிப்போம்' என்ற அடிப்படையில், வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். நம் தலைவர்கள் கற்றுத்தந்த பாடம் இது. 2009-, 2010ல் நடந்த இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது. அப்போது கோவை, திருச்சி, மதுரையில் ஜெயலலிதா பங்கேற்ற ஒவ்வொரு கூட்டத்திலும், 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்படிப்பட்ட சூழலிலும், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.., போன்ற கட்சிகளுடன் ராஜதந்திரத்தோடு கூட்டணி அமைத்தார்; அதனால்தான் வெற்றி கிடைத்தது. 2016 சட்டசபை தேர்தலிலும், இதே ராஜதந்திரத்தைதான் ஜெயலலிதா கையாண்டார். கட்சியிலிருந்து வெளியே சென்றவர்கள், 'எந்த நிபந்தனையும் வைக்கவில்லை; எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேநேரம், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இந்தச் சூழலில், வெளியே சென்றவர்களை இணைத்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்கை அடைய முடியும். எனவே, வெளியே சென்றவர்களை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை, 10 நாட்களில் பொதுச்செயலர் மேற்கொள்ள வேண்டும் என்பதே, என் வேண்டுகோள். இல்லையெனில், இந்த மனநிலையில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வோம். இதற்கு முடிவு தெரிந்தால்தான், பொதுச்செயலரின் பிரசார பயணத்தில் கலந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். தன் நீண்ட பேட்டியில், பழனிசாமியின் பெயரை செங்கோட்டையன் பல இடங்களில் குறிப்பிட வேண்டி இருந்தது. ஆனால், கவனமாக அதை தவிர்த்தார். பழனிசாமி பெயருக்கு பதிலாக, கட்சியின் பொதுச்செயலர் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் குறிப்பிட்டார். பழனிசாமிக்கு வரும் கூட்டம் வேறு பழனிசாமிக்கு கூடும் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன், “பொதுச்செயலரின் பிரசார பயணத்திற்கு வரும் கூட்டம் வேறு; அ.தி.மு.க., தொண்டர்களின் மனநிலை வேறு. பிரிந்து சென்றவர்கள், யார் யாரை இணைக்க வேண்டும் என்பதை, பொதுச்செயலர் முடிவு செய்யலாம். கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் வெளியே இருக்கின்றனர்; அவர்கள் இணைக்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களில் கட்சியின் நிலைமை அனைவருக்கும் தெரியும்,” என கூறினார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் பழனிசாமி பழனிசாமியை, ஜெயலலிதா நீக்கியதாக கூறிய செங்கோட்டையன், “ஜெயலலிதாவால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட என்னை, பொதுச்செயலர் தான் மீண்டும் அமைச்சராக்கியதாக கூறுகிறீர்கள். ஆனால், கடந்த 2009ல் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தற்போதைய பொதுச்செயலர். என்னைப் போன்ற மனநிலையில் இருக்கும் நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்,” என தெரிவித்தார். அமித் ஷாவை சந்தித்தது ஏன்? அமித் ஷாவை டில்லி சென்று சந்தித்தது பற்றி விளக்கம் அளித்த செங்கோட்டையன், “அ.தி.மு.க.,வில் பலர், பிரதமர் மோடி, அமித் ஷாவை தனியாக சந்தித்துள்ளனர். அதனால், என்னிடம் மட்டும், 'ஏன் சந்தித்தீர்கள்' என, கேட்கக்கூடாது. பா.ஜ., மேலிடத் தலைவர்கள் அழைப்பிலேயே, அவர்களை சந்தித்தேன். அதன்பின், சுமுக உறவு ஏற்பட்டு, இப்போது இணைந்து பணியாற்றுகின்றனர். அ.தி.மு.க.,வுக்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறேன். கட்சி உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, என் பணிகளை இன்று துவங்கியிருக்கிறேன்,” என்றார். இதனை தொடர்ந்து இன்று செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியதாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார்.-நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Haja Kuthubdeen
செப் 06, 2025 18:12

புரட்சிதலைவியால் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்தான்.சீனியர் என்பதற்காக ஓவரா போகக்கூடாது.இவரை விட சீனியர் தொண்டர்கள் கட்சியில் உண்டு.அடையாளம் கொடுத்த கட்சி அஇஅதிமுக.கெடு கொடுப்பதற்கெல்லாம் தலைமை பயந்தால் நாளை ஒவ்வொருத்தனா கிளம்புவானுங்க...இவரை இயக்குவது சசி கும்பல்தான்.கட்டுசோற்றில் பெருச்சாலிய விட்ட கதையாகி விடும் வெளியேற்ற பட்டவர்களை மீண்டும் சேர்த்தால்..உள்ளே இருந்து கொண்டு உள்ளடி வேலை பார்ப்பார்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 06, 2025 14:25

அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் செங்கோட்டையன் ஒரு ஸ்லீப்பர் செல் என்பது தான் ஆச்சிரியமாக உள்ளது. இருப்பினும் பத்து நாட்களுக்கு பின்னர் இவரும் ஒரு தர்மயுத்தம் என்று இவரது ஆதரவாளர்கள் மற்றும் ஓபிஎஸ் சசிகலா ஆதரவுடன் நடத்துவார். போட்டி பொதுக்குழு கூட்டம் நடத்துவார் திமுக ஆதரவோடு. தேர்தல் கமிஷன் இடம் மனு கொடுத்து இரட்டை இலை சின்னம் முடக்க ஏற்பாடு செய்வார். பின்னர் தேர்தலுக்கு இரண்டு மூன்று மாதங்கள் முன்பு இரட்டை இலை சின்னம் நிறுத்தி வைக்க கோர்ட்டில் வழக்கு கொடுப்பார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பழனிச்சாமி தேர்தலில் தோற்க வேண்டும். இந்த எம்ஜிஆர் ஜெயலலிதா கதையெல்லாம் அப்போது மறந்து அதிமுக தோல்வியில் சந்தோஷப்படுவார். இவரது சந்தோஷம் பலமாக இவரை ஸ்லீப்பர் செல் ஆக நியமித்தவர்கள் கோடிகளில் பணம் கொடுப்பார்கள். அந்த பணம் மற்றும் அவர்களின் வக்கீல்கள் உதவியோடு மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பது போல இவ்வளவு நாள் ஓபிஎஸ் கோர்ட்டில் வழக்கு போட்டு பழனிச்சாமிக்கு இடைஞ்சல் கொடுத்தது போல் இவரும் மறுபடியும் ஆரம்பிப்பார். சசிகலா சந்தோஷமாக நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் ரசிப்பார். ஸ்டாலின் இரண்டாம் முறை தொடர் வெற்றி முதன்முறையாக திமுக பெற்றுள்ளது அதுவும் கருணாநிதி இல்லாமல் ஆகவே நான் தான் உலகில் சிறந்த தலைவன் எனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று ட்ரம்ப் பாணியில் விளம்பரம் தேடுவார். ரஜினி கமல் விஜய் போன்ற திரையுலக பிரபலங்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைப்பார்கள். தமிழகமே சந்தோஷ கடலில் மிதக்கும்.


மொட்டை தாசன்...
செப் 06, 2025 10:52

தலைமை மாறும்போது இப்படி சீனியர் உறுப்பினர்களின் அதிருப்தி ஏற்படுவது சகஜம்தான். இப்படி கெடுவெல்லாம் கொடுத்து மிரட்டி இவர் ஒன்றும் சாதிக்கப்போவதில்லை. சில வாரங்களில் இவர் ஸ்டாலின் முன்னிலையில் திமூகவில் ஐக்கியமாவது உறுதி .


Sun
செப் 06, 2025 10:06

என்ன சொல்ல வருகிறார் செங்கோட்டையன் ? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் வேறு. இன்றைய காலம் வேறு. எம்.ஜி.ஆர் காலத்தில் எஸ்.டி.எஸ் தனிக்கட்சி ஆரம்பித்தார். தான் தான் அ.தி.மு.க எனக் கூறவில்லை. அவர் படுதோல்வி அடைந்த பின்னர் எம்.ஜி. ஆரிடம் மன்னிப்பு கோரி மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மனதார ஜானகி, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அவரிடம் இருந்த ஆர்.எம்.வீரப்பனையும் சேர்த்துக் கொண்டார். ஆனால் ஆர்.எம்.வி. என்ன செய்தார்? கருணாநிதியுடன் தொடர்பில் இருந்து பாட்ஷா பட விழாவில் ரஜினியை ஜெயலலிதாவை எதிர்த்து பேச வைத்து. 1996 தேர்தலில் ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைத்து அ.தி.மு.கவை தோற்கடித்தார். உண்மையாக மனம் திருந்தி வந்தவர்களை ஜெயலலிதா ஏற்று கொண்டார். இன்று எடப்பாடியும் எத்தனையோ பேர் திரும்ப வரும் போது ஏற்றுக் கொண்டுதான் உள்ளார். துரோகிகள் மீது ஜெயலலிதாவும் சாட்டையை சுழற்றினார். நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.ஆர், இவர்களை கட்சியில் இருந்து நீக்கி உதிர்ந்த ரோமங்கள் என்றார். சரி இன்றைய காலத்திற்கு வருவோம். ஓ.பி.எஸ் என்ன செய்தார்? தருமரை ராஜ்ய சபா எம்பி ஆக்க எடப்பாடிக்கு எவ்வளவு குடைச்சல் கொடுத்தார்? எடப்பாடி ஒற்றைத் தலைமை ஆனவுடன் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட எத்தனை பேர் ஓ.பிஎஸ்சிடம் சமாதானம் பேசினார்கள்? பொருளாளராக தொடருங்கள் மிகவும் கெளரவமாக அ.தி.மு.க விலேயே தொடருங்கள் என வற்புறுத்தினார்கள். கேட்டாரா? இன்று நிபந்தனை இன்றி அ.தி.முகவில் இணைகிறேன் என்பவர் என்ன செய்தார்? எல்லா நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்து எடப்பாடியை தொடர்ந்து அலைய விட்டுக் கொண்டிருக்கிறார்? பொதுக் குழு நடந்து கொண்டிருக்கும் போது அ.தி.மு.க அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி ஆவணங்கள் எடுத்து செல்லப் பட்டன யார் காரணம்?. எடப்பாடிக்கு பத்து நாள் கெடு விதிக்கும் செங்கோட்டையன் அந்த பத்து நாள் கெடுவுக்குள் ஓ.பி.எஸ் ஐ வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க கெடு விதிப்பாரா? இவ்வளவு யோக்கியமாக பேசுகிறாரே செங்கோட்டையன் ? ஜெயலலிதா காலமாக இருந்திருந்தால் ஜெயலலிதாவை எதிர்த்து பி.ஜே.பி தலைவர்களை டெல்லி சென்று சந்தித்து இருப்பாரா? இன்று வரை எடப்பாடி பொறுமையாகத்தானே இருக்கிறார்? தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எடப்பாடியை தற்க்குரி என்றாரே? செங்கோட்டையன் காட்டிய ரியாக்சன் என்ன? பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி சேராமல் தடுக்க அண்ணாமலை முனைப்பு காட்டினார். அதை ஏன் செங்கோட்டையன் கூற மறுக்கிறார்? தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து நடத்திக் கொண்டுள்ளார் ? அவர் என்றைக்காவது தனது கட்சியை அ.திமுகவுடன் இணைக்கிறேன் எனக் கூறியுள்ளாரா? எடப்பாடி உறுதிமிக்க தலைவராக இருப்பதால்தான் எதிரிகளையும், துரோகிகளையும் ஒரு சேர சமாளித்து கட்சியை உயிர்ப்புடன் வைத்துள்ளார். செங்கோட்டையனின் குட்டையை குழப்பும் செயல் என்றும் வெற்றி பெறப் போவதில்லை.


Kadaparai Mani
செப் 06, 2025 10:34

Very good


Kadaparai Mani
செப் 06, 2025 13:00

எடப்பாடி உறுதிமிக்க தலைவராக இருப்பதால்தான் எதிரிகளையும், துரோகிகளையும் ஒரு சேர சமாளித்து கட்சியை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.மிகசிறந்த கருத்து


Indian
செப் 06, 2025 09:04

. பி டீம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 08:51

இல்லைன்னா?


Mahendran Puru
செப் 06, 2025 07:37

கோட்டையை பிடிக்க செங்கோட்டையன் மனம் திறந்துள்ளார். இன்று தெலுங்கானாவில் கேசிஆர் வீட்டிற்குள்ளே பிரிவினையை உண்டாக்கி விட்டது


raja
செப் 06, 2025 07:19

அதிமுக தொண்டர்களால் சின்னாத்தா போல் ஓரம் கட்ட படுவார்....


N Annamalai
செப் 06, 2025 06:32

இவர் நல்லவரா இல்லை கெட்டவரா ?.


கு.ரா.பிரேம் குமார்
செப் 06, 2025 05:14

எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் மனம் திறந்து கூறிய அனைத்துமே வரவேற்க தக்கது. இது வெறும் அ.தி.மு.க.வில் உள்ள உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ள எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா விசுவாசிகளின் கருத்து மட்டுமல்ல, தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்ற எணணத்தில் செயல்பட்டு வரும் தமிழகத்தில் உள்ள கட்சிகளோடு தமிழகத்தின் பெரும்பான்மை மக்களும் கூட இதே கருத்தை தான் கொண்டுள்ளனர். அரசியல் களத்தில் புதிதாக இறங்கி இருக்கும் விஜய் தி.மு. க. எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க இருக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி எடப்பாடி யார் முதல்வராக வருவதற்கு நயினார் தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜ.க. ஆதரவு மட்டுமே போதாது என்று யதார்த்த உண்மையை எடப்பாடியார் நன்கு உணர வேண்டும். எனவே கட்சியிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்ற ப்பட்டவர்களை எடப்பாடியார் மீண்டும் அரவணைத்து பழைய எம்.ஜி.ஆர் காலத்திய அ.தி.மு.க.வை மீண்டும் தமிழகத்தில் செயலாற்றகூடிய வழியை உருவாக்க முன்வர வேண்டும். இதை செய்ய தவறினால் விஜய் ஆரவார அரசியல் பிரவேசத்தால் கூட தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு துணை நின்ற எடப்பாடியாரை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை