இபிஎஸ்.,க்கு எதிராக அணி திரளும் அதிருப்தியாளர்கள் தீவிர ஆலோசனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அணுகுமுறையால் அதிருப்தி அடைந்துள்ள மூத்த தலைவர்கள், தனியே ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தன்னிச்சையாக செயல்படத் துவங்கி உள்ளார். அவரது அணுகுமுறை, மூத்த தலைவர்கள் பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., துவங்கப்பட்டது முதல், கட்சியில் இருக்கும் மூத்த தலைவரான செங்கோட்டையன், கடந்த மார்ச்சில் பழனிசாமி மீதான தன் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1okaeo48&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பிரச்னையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சிக்கு எதிராக அவர் எதையும் செய்யவில்லை. அதிருப்தி இருந்தாலும், கட்சிதான் முக்கியம் என செயல்பட்ட செங்கோட்டையனை, நேரிலோ, தொலைபேசியிலோ பழனிசாமி அழைத்து சமாதானப்படுத்துவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமியின் அணுகுமுறை, மீண்டும் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருப்பத்துாரில் பழனிசாமி பேட்டி அளித்தபோது, உடனிருந்த மூத்த தலைவர் தம்பிதுரை குறுக்கிட்டு பேச முயன்றார். அதனால் கடுப்பான பழனிசாமி, அவரின் கையை பிடித்து இழுத்து பேசாமல் தடுத்தார். அதுபோல, மதுரையில் பழனிசாமியின் காரில் ஏற முயன்ற முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவை தடுத்து, வேறு காரில் வருமாறு கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர், இரண்டு முறை லோக்சபா துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு போன்ற மூத்தவர்களிடம், பழனிசாமி நடந்து கொண்ட விதம், அ.தி.மு.க., முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்நிலையில், பழனிசாமி மீது அதிருப்தி கொண்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி., மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் தொண்டைமான் என, அ.தி.மு.க., பிரமுகர்கள் அடுத்தடுத்து தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். இது கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கட்சியில் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர், தம்பிதுரை, செல்லுார் ராஜு ஆகியோரிடம், தொலைபேசியில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். இவர்கள், பழனிசாமிக்கு எதிராக விரைவில் போர்க்கொடி துாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், தன்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல நினைத்து பழனிசாமி செயல்படுகிறார். பிரசார பயணக் கூட்டங்களுக்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, கட்சித் தலைவர்கள் யாரும் இல்லாமலேயே தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என நம்புகிறார். கட்சியில் தன்னை விட சீனியர்களாக இருப்போரின் அதிருப்தியை களைய முற்படாமல், 'நடப்பது நடக்கட்டும்' என நடந்து கொள்கிறார். தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்கள் கூட, தனக்கு ஈடாக பொதுவெளியில் பேசாமல், பொம்மை போல் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதனால்தான், பலர் தி.மு.க.,வுக்கு செல்கின்றனர். பழனிசாமி தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளா விட்டால், அதிருப்தியாளர்களை வைத்து, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.,வை உடைக்கும் வேலையை தி.மு.க., செய்யும். இதை உணர்ந்து பழனிசாமி செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினர். - நமது நிருபர் -