சர்வர் பிரச்னை தீர்ந்தது; ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக பத்திரம் பதியலாம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிய, பொதுமக்கள் நேரடியாக வந்தால், கூடுதல் செலவு தவிர்க்கப்படும்' என, சார் - பதிவாளர்கள் தெரிவித்தனர்.சொத்து பத்திரங்களை தயாரிக்க, ஆவண எழுத்தர்களை தான், பொதுமக்கள் நாடுகின்றனர். அவர்கள் வழியாக வரும் பத்திரங்களே பதிவுக்கு ஏற்கப்படுவதால், நேரடியாக யாரும் சார் - பதிவாளர்களை அணுகுவதில்லை. அப்படியே அணுகினாலும், சார் - பதிவாளர்கள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இப்பிரச்னையில் பதிவுத் துறை சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள மாதிரி பத்திரங்கள் அடிப்படையில், ஆவணங்களை மக்கள் தயாரித்துக்கொண்டு வந்தால், அதை பதிவு செய்ய வேண்டும். அவர்களை வேண்டுமென்றே ஆவண எழுத்தர்களிடம் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேரடியாக வருவோருக்கு பத்திரங்களை பதிய, சார் - பதிவாளர்கள் முன்வந்துள்ளனர். இது குறித்து, சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் கூறியதாவது: எனது சொத்தை வங்கியில் அடமானம் வைப்பதற்கான பத்திரத்தை பதிவு செய்ய, ஆவண எழுத்தர்களை அணுகினேன். முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் தவிர்த்து, 4,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை கேட்டனர். ஆனால், அடமான பத்திரம் பதிய, 100 ரூபாய் பதிவு கட்டணம், சொத்து மதிப்புக்கு ஏற்ப முத்திரை தீர்வை சேர்த்தால், அதிகபட்சம், 1,000 ரூபாய் தான் செலவாகும்.பதிவுத் துறை இணையதளத்தில் உள்ள மாதிரி ஆவண அடிப்படையில், அடமான பத்திரம் தயாரித்து பதிவுக்கு தாக்கல் செய்தேன். நேரடியாக தாக்கல் செய்ததால், கூடுதல் செலவு இன்றி பத்திரம் பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆவண எழுத்தர் வாயிலாக சென்றால் தான், பத்திரப்பதிவு நடக்கும் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. மக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, பத்திரப் பதிவு செய்யலாம். நேரடியாக செல்வதன் வாயிலாக, தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'சர்வர்' பிரச்னை தீர்ந்தது
பதிவுத்துறை தகவல்களை சேகரித்து வைக்கும் 'சர்வர்' வன்பொருள் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த கோளாறை சரி செய்யும் பணிகள் நடந்து வந்தன. நேற்று இக்கோளாறு சரி செய்யப்பட்டு, பத்திரப்பதிவு பணிகள் பிரச்னை இன்றி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.