உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனியார் பஸ் சேவை முடக்கம்: 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

தனியார் பஸ் சேவை முடக்கம்: 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

திருச்சி: தி.மு.க., ஆட்சியில், டவுன் பஸ்களில், மகளிருக்கு 'விடியல் பயணம்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து வகையான பஸ்களிலும், மகளிர் இலவசமாக பயணிக்க, 'வெற்றி பயணம்' என்ற திட்டத்தை அமல்படுத்தியது.இதனால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, நஷ்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனியார் பஸ்களுக்கு, 50 சதவீதம் வருவாய் குறைந்துள்ளதோடு, பஸ் உரிமையாளர்கள், தினமும் 2,000 ரூபாய் கையில் இருந்து செலவு செய்கின்றனர்.தனியார் பஸ் நிறுவனங்களை சார்ந்து, டிரைவர், கண்டக்டர், கிளீனர் என, நேரடியாக 50 ஆயிரம் தொழிலாளர்கள், மெக்கானிக், பஸ் பாடி தொழிலாளர்கள், பெட்ரோல் பம்ப் தொழிலாளர்கள், பெயின்டர்கள் என, மறைமுகமாக, 2.5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.வெற்றி பயண திட்டதால், தனியார் பஸ் வருவாய் குறைந்துள்ளதால், 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.தமிழக அரசின் திட்டத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்க்கவில்லை. அந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளால், அதே துறையை சார்ந்த மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும். அரசு முதலில், வெற்றிப்பயணம் திட்டத்தின் பயனாளிகளை தகுதி அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும்.ஒரு வழித்தடத்தில் 30 சதவீதம் வரை மட்டுமே இலவச பஸ்களை இயக்க வேண்டும். பயணத்துக்கான தொலைவை, அதிகபட்சம், 40 கி.மீ.,யாக நிர்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தனியார் பஸ் இயக்கத்தை காப்பாற்ற முடியும்.

ஆட்டோக்களுக்கும் 'ஆப்பு'

சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிற்சங்க திருச்சி மாவட்ட செயலர் மணிகண்டன் கூறியதாவது: விஜய் ஆட்சி அமைத்த பிறகு, ஜூலை 9ல், ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் கட்டணம் உயர்த்தி அறிவிப்போம் என தெரிவித்தும், இன்னும் உயர்த்தவில்லை. அதே சமயம், மெட்ரோ ரயில், மினி பஸ், தனி யார் பைக் டாக்சி, மகளிர் வெற்றி பயணம் என மறுபுறம், ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் அபகரிக்கப்பட்டுள்ளது. அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் மகளிர் கூட இலவசமாக பயணிக்கின்றனர்.இதன் காரணமாக சரி பாதி சவாரி குறைந்து, பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் புது ஆட்டோ, உதிரி பாகம் வாங்கும் போது 2 சதவீத தொகை நலவாரியத்துக்கு செல்கிறது. அந்த தொகை 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறது புள்ளி விபரம். அ.தி.மு.க., ஆட்சியில், அதில் இருந்து ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடை வழங்கப்பட்டது. புதிய அரசு அந்த தொகையை ஆட்டோ ஓட்டுநருக்கு பண்டிகை கால போனஸாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mahendran Puru
அக் 30, 2026 09:22

டெல்லியில், மகாராஷ்டிராவில், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள மகளிர் இலவச சலுகை தமிழ் நாட்டில் மாத்திரம் ஏன் எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கிறது? மகாராஷ்டிராவில் மூத்த குடிமக்களில் ஆண்களுக்கும் அரை கட்டண சலுகை உண்டு.


சசிக்குமார் திருப்பூர்
அக் 28, 2026 19:19

கம்யூனிஸ்டுகள் போக்குவரத்து தொழிலாளர்கள் பகுதியில் ஒரு கருத்து. ஆட்டோ பக்கம் ஒரு கருத்து. தனியார் பஸ் சங்கம் பக்கம் ஒரு கருத்து. எப்படியோ உண்டியல் காசு வந்தால் சரி


Ragupathy
அக் 28, 2026 08:56

தீபாவளி முடிந்தபின் இலவச பேருந்துகளை நிறுத்த வேண்டும். லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


சாமானியன்
அக் 28, 2026 08:04

ஓட்டு வங்கி அரசியல். விஜய் புலிவாலை பிடித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் ஒட்டு விழலாம். அரசியல் லாபம் ஒரு பக்கம். விலைவாசி ஏற்றம் மறுபக்கம். விஜய் குஜராத் மோடி ஆட்சியை ஆராய்ந்து பாடம் கற்க வேண்டும். நானும் ஜோதிடர்தான். சமநிலை தவறாது ஆள விவேகம் தேவை. அரசு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாள் தோறும் போராட்டம் வரும்.


ராஜ்
அக் 28, 2026 05:55

சில நல்லவர்கள் பாதிப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் பெரும்பாலான ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பாயிண்ட் 2 பாயிண்ட் பஸ் போல நடந்து கொண்டனர். பயணிகளை மதிப்பதே இல்லை. கோவில்பட்டி மில் பஸ் ஏறினால் திருநெல்வேலி போறவர்கள் மற்றும் பஸ்ஸில் ஏறவும். மற்றவர்கள் இடம் இருந்தால் போகும் போது ஏறவும் என்பர். அதன் கர்மா இப்போது அனுபவிக்கட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை