உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ப்ரீ குளோசிங் சார்ஜ் ரத்து செய்ய சிறு தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தல்

ப்ரீ குளோசிங் சார்ஜ் ரத்து செய்ய சிறு தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தல்

சென்னை:சிறு நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை, தவணை காலத்திற்கு முன்கூட்டியே முழுதுமாக செலுத்தும் போது கட்டணம் வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பை, ரிசர்வ் வங்கி அமல்படுத்தாமல் இருப்பது, தொழில் முனைவோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நடைமுறை மூலதன செலவுகள் மற்றும் விரிவாக்க நடவடிக்கை போன்றவற்றுக்கு, வங்கிகளில் இருந்து கடன் வாங்குகின்றன. சில நிறுவனங்கள், கடனுக்கான தவணை செலுத்தும் காலத்திற்கு முன்னதாகவே, கடனை முழுதுமாக செலுத்தி விடுகின்றன. இதனால், வங்கிகளுக்கு வட்டி வருவாய் பாதிக்கப்படுகிறது. அவை முன்கூட்டியே கடனை அடைக்கும்போது, 'ப்ரீ குளோசிங் சார்ஜ்' கட்டணம் வசூலிக்கின்றன.இதுகுறித்து, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச் செயலர் வாசுதேவன் கூறியதாவது:பெரும்பாலான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கி தான் தொழிலை மேற்கொள்கின்றன. சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தவணை காலத்திற்கு முன்பே கடனை அடைக்கும் போது, 'ப்ரீ குளோசிங் சார்ஜ்' கட்டணமாக, நிலுவை கடன் தொகையில், 2 - 5 சதவீதம் வரை வசூலிக்கின்றன. இது, நிறுவனங்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, கடனை முன்கூட்டியே அடைக்கவும் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, தொழில்முனைவோரின் கோரிக்கையை ஏற்று, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 'ப்ரீ குளோசிங் சார்ஜ்' கட்டணம் வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பை, 2024 அக்டோபரில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இது, இதுவரை அமலுக்கு வராததால், தொழில்முனைவோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ப்ரீ குளோசிங் சார்ஜ் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை