வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திராவிட மாடல் தலை முதல் கால் வரை தினம் தினம் ரீல்ஸ் போட்டு கொண்டு உள்ளது. இதையெல்லாம் பார்க்க முடியுமா இதற்கெல்லாம் நேரம் இல்லை
சென்னை: பள்ளி வகுப்பறைகளில் மட்டுமின்றி, தேர்வறைகளிலும் மாணவ - மாணவியர் 'ரீல்ஸ்' எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க, நடவடிக்கை எடுக்காமல், பள்ளிக் கல்வித்துறை பாராமுகமாக இருப்பது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி வகுப்பறை, ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை கற்கும் ஓர் இடம். கடந்த காலத்தில், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்களைக் கண்டாலே நடுங்குவர். 'நாம் ஏதாவது தவறு செய்தால், ஆசிரியர் நம்மை தொலைத்து விடுவார்' என்ற பயம், அனைத்து மாணவ - மாணவியரிடமும் இருந்தது. ஆனால், '2கே கிட்' என்று அழைக்கப்படும், இன்றைய கால பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்களை கண்டால் அச்சப்படுவதில்லை. இதற்கு மாணவ - மாணவியர் தவறு செய்தாலும், அவர்களை அடிக்கக் கூடாது என்ற உத்தரவு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான மரியாதையும், எல்லைகளும் குறைந்து வருகின்றன. இதற்கு , மாறி வரும் சமூக சூழலும் முக்கிய காரணமாக உள்ளது. இளைஞர் மீது தாக்கு
கடந்த 90களில் மொபைல், இன்டர்நெட், போன்ற பொழுதுபோக்கு இல்லாத காலம். ஆனால், இன்று பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், வித விதமான மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் உலகில், சினிமா பாடல்களுக்கும், வசனங்களுக்கும், 'ரீல்ஸ்' வெளியிடுவது, இப்போது 'டிரெண்டிங்' ஆகி வருகிறது. இந்த மோகத்தில், கல்லுாரி மாணவ - மாணவியரை விட, பள்ளி மாணவ - மாணவியர் அதிகம் சிக்கி உள்ளனர். குறிப்பாக, அரசு பள்ளி மாணவ - மாணவியர், பள்ளி வகுப்பறையிலேயே, 'ரீல்ஸ்' எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, வேலுார் மாவட்டத்தில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர், சக மாணவிக்கு வகுப்பறையிலேயே, வளைகாப்பு நடத்துவதுபோல் 'ரீல்ஸ்' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது, விமர்சனங்களை எழுப்ப, பள்ளி வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, திருத்தணி அருகே 17 வயது சிறார்கள், 'ரீல்ஸ்' மோகத்தில், வடமாநில இளைஞரை பட்டாக்கத்தியால் தாக்கிய சம்பவம், நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், இளம் சிறார்கள், பள்ளி மாணவர்கள், வன்முறை வரிகள், ஆபாச வரிகள் கொண்ட கானா பாடல்களுடன், 'ரீல்ஸ்' வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள், வகுப்பறையில், ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்து, 'ரீல்ஸ்' வெளியிட்டுள்ளனர். ஆசிரியர் மீது கோபம்
இதற்கெல்லாம் மேலாக, தேர்வு அறையில் அமர்ந்தபடி, ஆசிரியர் கண்முன்னே மாணவர் ஒருவர் 'ரீல்ஸ்' எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆகி வருகின்றன. தேர்வறையில் ரீல்ஸ் எடுத்த மாணவன், 'நான் தேர்வறையில் உள்ளேன். 10 பேர் உள்ளோம். சார் உள்ளார். என்ன செய்வது எனத் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ஸில் சொல்லுங்கள். அதை நான் எழுதுகிறேன்' எனக் கூறியுள்ளான். இதை தடுக்க வேண்டிய பள்ளிக்கல்வித் துறையும் பாராமுகமாக உள்ளது. இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், மொபைல் போன் எடுத்து வர தடை விதித்தால், பெற்றோரே சண்டைக்கு வருகின்றனர். மாணவர்கள் ரீல்ஸ் எடுப்பதை தடுத்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கோபம் கொள்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இது போன்ற செயல் இன்னும் அதிகரிப்பதற்கு முன்பாக, பள்ளிக்கல்வித் துறை விழித்துக்கொள்ள வேண்டும். உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
திராவிட மாடல் தலை முதல் கால் வரை தினம் தினம் ரீல்ஸ் போட்டு கொண்டு உள்ளது. இதையெல்லாம் பார்க்க முடியுமா இதற்கெல்லாம் நேரம் இல்லை