உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  மேலை சாளுக்கியரை வென்ற ராஜாதிராஜன் கர்நாடகாவில் கட்டிய துாம்பு கல்வெட்டு

 மேலை சாளுக்கியரை வென்ற ராஜாதிராஜன் கர்நாடகாவில் கட்டிய துாம்பு கல்வெட்டு

ராஜாதிராஜன் கட்டிய துாம்பு கல்வெட்டு, மத்திய தொல்லியல் துறையினரால் கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர்கள் பிற்கால சோழர்கள். அதில், ராஜராஜ சோழன் தமிழகம் முழுதையும் ஒருங்கிணைத்ததுடன், கடல் கடந்து சில நாடுகளையும் கைப்பற்றி, தமிழர்கள் அச்சமின்றி வணிகம், கலை, கலாசார தொடர்புகளை மேற்கொள்ள வழி வகுத்தார். அவரது படைத் தளபதியாகவும், பல போர்களை நடத்திய மாவீரராகவும் அவரது மகன் ராஜேந்திர சோழன் இருந்தார். ராஜேந்திர சோழன் மன்னரான போது, அவரது மகன்களில் மூத்தவரான ராஜாதிராஜன் மிகப்பெரும் வீரனாக பல போர்க்களங்களில் வெற்றி பெற்று, தமிழகத்துக்கு புகழ் சேர்த்தார். அந்த வகையில், தற்போதைய கர்நாடக பகுதியை, அப்போது ஆண்ட மேலை சாளுக்கியர்களின் தலைநகராக, தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கல்யாணி இருந்தது. மேலை சாளுக்கிய மன்னரான சோமேஸ்வரன், தமிழகத்துக்கும், வேங்கியை ஆண்ட சோழர்களுக்கும் தொல்லை தரும் வகையில் அடிக்கடி போரிட்டார். அப்போது, ராஜாதிராஜன் பெரும்படையுடன் கிருஷ்ணா நதிக்கரையில் நடத்திய போரில், மேலை சாளுக்கியர்களை வென்று அங்கேயே முடிசூட்டிக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில், அங்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டன. அப்படி கட்டப்பட்ட துாம்பு கல்வெட்டை, தற்போது, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். இது குறித்து, முனிரத்தினம் கூறியதாவது: கர்நாடகாவின் தேவனஹல்லி மாவட்டம், பன்னிமங்கலா கிராமத்தில் உள்ள ஏரியில், முதலாம் ராஜாதிராஜன் எனும் சோழ மன்னரின் துாம்பு கல்வெட்டு உள்ளதை கண்டறிந்தோம். துாணின் மேல்பட்டையின் நான்கு புறங்களிலும், தமிழில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன. முன்பக்கம் அழகான கஜலட்சுமி உருவம், புடைப்பு சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. ராஜாதிராஜனின் பரம்பரை மற்றும் படையெடுப்புகளை குறிக்கும் மெய்கீர்த்தி கல்வெட்டு உள்ளது. ராஜாதிராஜனின், அதிகாரியாக இருந்த காமுண்டன் என்பவரால், இக்கட்டுமான பணி முடிக்கப்பட்டுள்ளதை, முதற்கட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளோம். இவ்வாறு கூறினார். கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாதிராஜ சோழன் காலத்து துாம்பு கல்வெட்டு. துாம்பு என்றால் என்ன? தமிழகத்தில் காடுகளை அழித்து, விவசாய நிலமாக மாற்றும் போது, பல நுாறு ஏக்கர் நிலங்களை ஏரி, கண்மாயாக மாற்றிய மன்னர்கள், அருகில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கால்வாய்களை வெட்டி ஏரியில் சேர்த்தனர். ஏரியில் சேமிக்கும் நீரை, பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில், கரையிலிருந்து 20 அடி தொலைவில், சதுரமான கட்டுமானத்தை உருவாக்கி, அதன் அடியில் குழாய்களை பதித்து, ஏரிக்கரைக்கு வெளியில் கொண்டு வந்தனர். ஏரிக்குள் உள்ள குழாயை, குழவி போன்ற கல்லால் அடைத்தனர். குழவி உள்ள இடத்தை, கரையில் இருந்து அடையாளம் காணும் வகையில், இருபுறமும் கல் துாண்களை அமைத்து, குறுக்கு கல்லையும் அமைத்தனர். குழவி திறப்பை குமிழி என்றனர். இந்த முழு அமைப்புக்கு துாம்பு என்று பெயர். ஏரி நிறைந்த பின்னும், வேளாண்மைக்கு நீர் தேவைப்படும் போதும், உள்நீச்சலில் சென்று, மூச்சடக்கி குமிழியை திறப்பர். இவ்வாறு மடைதிறக்கும் பயிற்சி பெற்றோருக்கு, 'மடையர்' என்ற பெயரும் உண்டு. இவ்வாறாக ஏரியை துார்வாரி, மடையை பராமரித்து, வரத்து, போக்கு கால்வாய்களை பராமரிக்க ஏரி வாரியமும் அமைக்கப்பட்டது. ராஜாதிராஜனும், தான் வென்ற மேலை சாளுக்கிய பகுதியில், அப்படிப்பட்ட ஏரியை வெட்டி, துாம்பு அமைத்ததற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கிடைத்துள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை