சென்னை: ''சட்டசபை தேர்தலில், த.வெ.க., - தி.மு.க., இடையில் தான் போட்டி. இதில், 100 சதவீதம் த.வெ.க., வெற்றி பெறும்,'' என அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சிறப்பு பொதுக்குழு கூட்டம், தனியார் விடுதியில் நேற்று நடந்தது. இதில், அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது: கரூர் சம்பவத்தால், சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும், வலியிலும் இவ்வளவு நாள் இருந்ததால், மவுனம் காத்தோம். அப்படி அமைதியாக இருந்த நேரத்தில், த.வெ.க., குறித்து அவதுாறுகள் பரப்பப்பட்டன; வன்ம அரசியல் வலைகள் பின்னப்பட்டன. இவை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணையோடு துடைத்து எறியப் போகிறோம். தமிழக சட்டசபையில், த.வெ.க.,விற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு, நாகரிக பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. கரூர் சம்பவத்தில் அரசியல் செய்ய விருப்பமில்லை என அடிக்கடி சொன்ன முதல்வர், த.வெ.க.,வை குறிப்பிட்டு, பல்வேறு அவதுாறுகளை சட்டசபையில் பதிவு செய்ததன் வாயிலாக, வன்மத்தை கக்கி இருக்கிறார். நாட்டிலேயே எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடு, எனக்கு விதிக்கப்பட்டது. பிரசார பேருந்தில் மேலே ஏறி நிற்கக்கூடாது; மக்களை பார்த்து கை அசைக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், குறுகிய மனதுடன் முதல்வர் சட்டசபையில் என்னை குற்றஞ் சாட்டினார். பொய் மூட்டைகளையும், அவதுாறுகளையும் அவிழ்த்துவிட்டு, கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட வக்கீல்களுக்கும், கபட நாடக தி.மு.க.,விற்கும் எதிராக உச்ச நீதிமன்றம் நின்றதை, மக்கள் அறியாமல் இல்லை. கரூர் சம்பவத்திற்கு பின், அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்து, அதை அவமதிப்பது போல், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இது எதற்காக நடத்தப்பட்டது என மக்களும், நீதிமன்றமும் கேள்வி எழுப்பியும், அதை முதல்வர் மறந்துவிட்டாரா? அரசு அதிகாரிகள் பேட்டி அளித்ததால், பொதுமக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் தலையில் உச்ச நீதிமன்றம் ஓங்கி கொட்டியது. சட்டசபையில் மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு எதுவுமே இல்லாமல் பேசி, அரசியல் ஆட்டத்தை முதல்வர் துவக்கி விட்டார். மக்களுக்கு, தமிழக அரசு மீது இருக்கிற நம்பிக்கை முழுதுமாக மண்ணில் புதைந்து விட்டது. இது புரியவில்லை என்றால், வரும் சட்டசபை தேர்தல் வாயிலாக மக்கள் புரிய வைப்பர். தி.மு.க., இப்போதே தோல்விக்கான அறிக்கையை தயார் செய்து கொள்ள வேண்டும். த.வெ.க.,விற்கு வந்துள்ள இடையூறுகள் தற்காலிகமானவை. சட்டசபை தேர்தலில், இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. அதில் ஒன்று த.வெ.க., மற்றொன்று தி.மு.க., இந்த போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. அதில், 100 சதவீதம் த.வெ.க., வெற்றி பெறும். இவ்வாறு விஜய் பேசினார்.