உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மேற்கு வங்க அரசு - கவர்னர் மோதல் முற்றுகிறது!: சம்மனை புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு

மேற்கு வங்க அரசு - கவர்னர் மோதல் முற்றுகிறது!: சம்மனை புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக கோல்கட்டா போலீசார் அனுப்பும் சம்மன்களை புறக்கணிக்கும்படி, அங்கு பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் கவர்னர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, மேற்கு வங்க அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் முற்றுகிறது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. 'மம்தா அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவேன்' என, கவர்னர் போஸ் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், கோல்கட்டாவின் ஹரே தெரு போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் புகார் அளித்தார்.அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திரிணமுல் காங்., தலைவர்கள் கவர்னரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறை மற்றும் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் தன் முயற்சியை தடுக்கவே திட்டமிட்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நுழையவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழுவை கோல்கட்டா போலீசார் அமைத்துள்ளனர்.கவர்னர் மாளிகையில் பணியாற்றும் மூன்று ஊழியர்கள் மற்றும் ஒரு போலீசுக்கு விசாரணை குழு சம்மன் அனுப்பியது. போலீஸ்காரரை தவிர மற்ற மூவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.அரசியலமைப்பு சட்டத்தில் கவர்னருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் எவ்வாறு விசாரணையை துவங்க முடியும் என கேட்டபோது, 'குறிப்பாக பெண்ணிடம் இருந்து புகார் அளிக்கப்படும்போது, விசாரணையை துவங்குவது வழக்கமான நடைமுறை தான்' என, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், கவர்னர் மாளிகை பணியாளர்களை வரும் நாட்களில் அழைத்து விசாரிக்கவும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து, கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கவர்னர் ஆனந்த போஸ் தரப்பில் இருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361 - 2 மற்றும் 3ன் கீழ், கவர்னர் மீது மாநில போலீசார் எவ்வித விசாரணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது. ஜனாதிபதி மற்றும் கவர்னர் பதவியில் உள்ள காலத்தில், அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கைகளை தொடர முடியாது.அந்த காலகட்டத்தில் அவர்களை கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ அதிகாரம் இல்லை.கவர்னர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களை விசாரிக்கவும், மாளிகைக்குள் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.கவர்னருக்கு அரசியலமைப்பு சட்டம் விலக்கு அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி, ஆதாரங்களை சேகரிக்க உரிமை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.எனவே, அந்த பெண் அளித்த புகார் தொடர்பாக போலீசார் அளிக்கும் சம்மன்களை, கவர்னர் மாளிகை பணியாளர்கள் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, மேற்கு வங்க அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை