உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவில் காவலாளி மரண வழக்கில் நடந்தது என்ன? தி.மு.க., கூட்டணி கட்சியினரும் போலீசுக்கு எதிர்ப்பு குரல்

கோவில் காவலாளி மரண வழக்கில் நடந்தது என்ன? தி.மு.க., கூட்டணி கட்சியினரும் போலீசுக்கு எதிர்ப்பு குரல்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி, போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க., கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த சிவகாமி, 76, அவரது மகள் டாக்டர் நிகிதா, 42, ஆகியோர் மடப்புரம் கோவிலில் தரிசனத்திற்கு வந்த போது, அவர்கள் காரை, கோவில் காவலாளி அஜித்குமார், 29, என்பவரிடம் பார்க்கிங் செய்ய கொடுத்துள்ளனர்.

முற்றுகை

சிவகாமிக்கு உடல் நலம் சரியில்லாததால் ஸ்கேன் எடுக்க சென்ற வழியில், கோவிலுக்கு வந்துள்ளார். ஸ்கேன் எடுக்க வசதியாக, தன் நகைகளை கழற்றி பையில் வைத்து, அதை கார் பின் இருக்கையில் வைத்துள்ளனர்.தரிசனம் முடிந்து நிகிதாவும், சிவகாமியும் காரில் புறப்பட்ட நிலையில், வழியில் காரை நிறுத்தி நகைகளை பார்த்த போது, மாயமானது தெரியவந்தது. உடனே கோவிலுக்கு வந்து அஜித்குமாரிடம் விசாரித்த போது, அவர் சரியாக பதில் சொல்லாததால், கோவில் அலுவலகத்தில் புகார் செய்தனர். அங்கிருந்தவர்கள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க சொன்னதால், அன்று மதியம், 2:00 மணிக்கு புகார் செய்தனர். போலீசார் அஜித்குமாரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். ஆனால், அன்று விசாரிக்கவில்லை.ஜூன் 28 காலை மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார், அஜித்குமார், அவரது சகோதரர் நவீன், அருண் ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள், 'நகையை எடுக்கவில்லை' என, கூறினர். நவீன், அருணை போலீசார் விடுவித்தனர். பின்னர், அஜித்குமாரை கார் பார்க்கிங் செய்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.மாலை, 5:00 மணிக்கு கோவில் அலுவலகம் பின்புறம் உள்ள கோசாலையில் வைத்து விசாரணை நடத்திய போது, அஜித்குமார் மயங்கி விழுந்தார்.திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின், மதுரைக்கு பரிந்துரை செய்தனர். செல்லும் வழியிலேயே அஜித்குமார் உயிரிழந்தார்.தகவலறிந்து அஜித்குமாரின் உறவினர்கள், திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மதுரையில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் விசாரணைக்கு பின், அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மடப்புரம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு சம்பவம் நடந்த இடங்களை மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேரில் பார்வையிட்டு, கோவில் செயல் அலுவலர் கணபதி முருகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.நீதிபதி காரில் புறப்பட்ட போது, அஜித்தின் உறவினர் ரேகா, நீதிபதியிடம் தங்கள் தரப்பை தெரிவிக்க வேண்டும் எனக்கோரி காரை மறித்தார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிய பின் நீதிபதி புறப்பட்டு சென்றார்.

உடலில் 18 காயங்கள்

மதுரை அரசு மருத்துவமனையில் இரண்டு தடய அறிவியல் துறை டாக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அஜித்குமாரின் உடல் பிரேத பரிசோதனையை நடந்தது. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கணேஷ்குமார் பிரேத பரிசோதனை வீடியோ, போட்டோ எடுக்கும் போது உடனிருந்தார். அவர் கூறியதாவது:அஜித்குமார் உடலின் முன், பின் பக்கங்களை போட்டோ, வீடியோ எடுத்த போது உடல் முழுதும் 18 காயங்கள் காணப்பட்டன. ஏற்கனவே இருந்த பழைய காயங்களை கணக்கில் எடுக்கவில்லை. புதிய காயங்கள் சிராய்ப்பாகவும், ரத்தம் கன்றியும் காணப்பட்டது. இரண்டு காதுகளிலும் ரத்தம் வழிந்திருந்தது. இடதுபக்க விலா எலும்பு ரத்தம் கன்றியிருந்தது. இடது, வலது கை மணிக்கட்டு, மூட்டு, தோள்பட்டை, இடது முதுகு, இடது இடுப்பு பகுதியில் காயம் இருந்தது.முகத்தில் 'ஷேவ்' செய்து பார்த்த பின்பே கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. மொத்தத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பதை காயங்களின் தன்மையை வைத்து புரிந்து கொள்ள முடிந்தது. உள்ளுறுப்புகளில் 40 இடங்களில் காயம் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது டாக்டர்களின் அறிக்கைக்கு பின்பே தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.'பிரேத பரிசோதனை முடிந்த 24 மணி நேரத்திற்குள் அதற்கான அறிக்கை ஒப்படைக்கப்படும். அதற்கு முன்பாக சொல்வது மரபில்லை' என தடய அறிவியல் துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஐகோர்ட்டில் முறையீ டு

இதற்கிடையே, இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக, சிவகங்கை ஏ.டி.எஸ்.பி., சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன் வழக்கறிஞர் மாரீஸ்குமார் நேற்று ஆஜராகி முறையிட்டதாவது:மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண் பக்தரின் காரிலிருந்த நகை திருடுபோனது. காவலாளி அஜித்குமாரிடம் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். 2021 முதல் தற்போது வரை, 25 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர்.அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். எய்ம்ஸ் டாக்டர்கள் குழு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., அல்லது சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்ற உத்தரவிடும் வகையில் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள், '25 பேர் போலீஸ் விசாரணையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதில் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? அஜித்குமாரை தாக்கியது ஏன்?' என, கேள்வி எழுப்பினர்.அரசு தரப்பு வழக்கறிஞர், 'முறையீடு செய்பவர் எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. பொத்தாம் பொதுவாக கூறுகிறார். 'மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் தெளிவுபடுத்தப்படும்' என்றார். நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரிக்கப்படும்' என்றனர். இதற்கிடையில், இப்பிரச்னையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆறு போலீஸ்காரர்களில் ஐவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

@

@ தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: 'லாக் அப்' மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது. போலீஸ் துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல. வரும் காலங்களில் இதுபோன்ற துர்சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். மார்க் கம்யூ., மாநில செயலர் சண்முகம்: அஜித்குமார் மரணத்திற்கு காரணமாக இருந்த போலீசாரை, பணி நீக்கம் செய்ய வேண்டும். கொலை வழக்காக பதிவு செய்து, போலீசாரை கைது செய்து, விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும். அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: போலீசார் சித்ரவதை செய்ததில், அஜித்குமார் இறந்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும். போலீசில் அடித்தே கொல்லும் நிலை இனி இருக்கக்கூடாது. போலீஸ் ஸ்டேஷனில் இனி சித்ரவதை, வன்முறை கூடாது.

முதல்வர் எச்சரிக்கை

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால், அதில் ஈடுபட்டவர்கள், ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும், அதற்கான தண்டனையை விரைவில் பெற்று தந்து, நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான், தி.மு.க., அரசு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக் - அப் மரணங்கள் போன்றவற்றில், யார் கடமை தவறினாலும், அரசின் நடவடிக்கை மிக மிகக் கடுமையாக இருக்கும். இதை சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தினேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMESH
ஜூலை 01, 2025 17:14

ஆளுங் கட்சி இந்த விசயத்தில் அவியல் செய்கிறது...திமுக சாத்தான்குளம் நிகழ்வில் நாடகம் சூப்பர்....


Ramesh Sargam
ஜூலை 01, 2025 12:31

மனித உரிமை ஆணையம் முன்வந்து ஒழுங்குமுறையாக விசாரணை நடத்தி காவலாளியை கொடூர சித்திரவதை செய்து கொன்ற காவல்துறையினரை கடுமையாக தண்டிக்கவேண்டும். மற்றும் ஆளும் திமுக அரசை கடுமையாக எச்சரித்து கண்டிக்கவேண்டும்.


chinnamanibalan
ஜூலை 01, 2025 12:30

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் போலீஸ் லாக்கப்பில் வைத்து அடித்து துன்புறுத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். அப்போது 2021 சட்ட மன்ற தேர்தலுக்கு முந்தைய நேரம் என்பதால், எதிர்க்கட்சியான திமுக, இதில் முழுமூச்சாக இறங்கி, அன்றைய அதிமுக அரசுக்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தியது. அன்று ஆட்சி மாறியது என்பது உண்மை. ஆனால் காட்சிகள் மாறவில்லை என்பது அதை விடப் பெரிய உண்மை.


ManiK
ஜூலை 01, 2025 03:38

எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறது என்று சொல்லிவிட்டு, திமுகவும், ஸ்டாலினும் சேர்ந்து அவியல் செய்து பழியை படுகொலை செய்யப்பட்டவர் மீதே போடுவார்கள். அதுவே ஸ்பெஷல் திராவிடமாடல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை