உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தடகள வீரர் கொலையாளியான கொள்கை பின்னணி என்ன?

தடகள வீரர் கொலையாளியான கொள்கை பின்னணி என்ன?

திருநெல்வேலி: நெல்லை ஐ.டி., ஊழியர் கவின் ஆணவ கொலையில் கைதான சுர்ஜித், சிறந்த தடகள வீரராக இருந்த நிலையில், ஜாதி, அரிவாள் கலாசாரம் போன்ற 'கொள்கை' தற்போது கொலை குற்றவாளியாக்கி உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபர் கவின் செல்வ கணேஷ், 27, நெல்லையில், ஜூலை 27ம் தேதி ஆணவ கொலை செய்யப்பட்டார். அவர் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், 24, இந்த கொலையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுர்ஜித் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் போலீஸ் எஸ்.ஐ.,யாக உள்ளனர். சுர்ஜித் பி.காம்., படித்தவர். பள்ளி காலத்திலிருந்தே சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். தடகள போட்டிகளில் மாநில சாம்பியனாகவும், பல கோப்பைகள், கேடயங்களையும் குவித்துள்ளார். கல்லுாரி படிப்பு முடிந்ததும், ஜிம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அதே சமயம், அரிவாள், ஆயுதங்களுடன் அவர் போஸ் கொடுக்கும் ஏராளமான படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆயுதங்கள், அரிவாள்களுடன் படங்கள் வெளியிடுவோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து எச்சரிக்கின்றனர். ஆனால், பெற்றோர் போலீசாக பணியாற்றுவதால், சுர்ஜித்தின் அரிவாள் போஸ் படங்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. அவரது பெற்றோரும் கவனிக்கவில்லை. தடகளத்தில் மாநில சாம்பியனாக திகழ்ந்த சுர்ஜித் கைகளில், அரிவாள் பிடிக்க வைத்த 'கொள்கை' தான், அவரை கொலைக்கு இட்டுச்சென்றுள்ளது. தாமிரபரணி தாலாட்டும் பசுமை மிக்க நெல்லையை ரத்தபூமியாக மாற்றி வரும் ஜாதி அமைப்புகள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் விஷமாக பரவி வரும் ஜாதி கலாசாரம், ஒரு தடகள வீரரை கொலையாளியாக மாற்றியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலீசாரின் கையில் தான் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Haja Kuthubdeen
ஆக 01, 2025 14:14

எல்லாவற்றிற்கும் போலீசை குற்றம் சுமத்தினால் எப்படி??அவர்கள் எப்படி ஜாதி மத பேதத்தை நிறுத்த முடியும்.ஒவ்வொரு மணிதனும் சுயகட்டுப்பாடு பண்போடு நடந்து கொள்வதால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.


ஆரூர் ரங்
ஆக 01, 2025 11:21

எல்லா தமிழக அரசுத் துறை ஊழியர்கள் இடையேயும் சாதிப் பாகுபாடுகளும் மறைமுக சாதிச்சங்கங்களும் இருக்கின்றன. இவற்றின் பின்புலத்தில் அந்தந்த சாதி அமைச்சர்கள் இல்லையா என்ன? பலவித லஞ்ச ஊழல் வழக்குகளில் தப்பிக்க இந்த முறை உதவுகிறது. எம்பி,எம்எல்ஏ முதல் கவுன்சிலர் வரை சீட் கூட சாதிய அடிப்படையில்தான் தேர்வு. இவங்களே பெரியார் எல்லா சாதியையும் ஒழித்துவிட்டார் எனப் பேசி மகிழ்கின்றனர்.


முருகன்
ஆக 01, 2025 08:44

ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் நினைத்தால் தடுக்க முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்


Ramaraj P
ஆக 01, 2025 08:13

அதுதான் தெரியுதுல பேசாம இருந்திருக்கலாம்


பிரேம்ஜி
ஆக 01, 2025 07:02

போலீஸார் கையில் இல்லை! சுயநலமிக்க ஜாதி இன மத வெறி பிடித்த மக்களாகிய நம் கையிலும் பதவி பணம் பொய் புகழ் மீது ஆசை கொண்ட மக்கள் நலனைப் பற்றி கவலைப் படாத ஆளும் கட்சி எதிர்கட்சி, ஊழல் அதிகாரிகள், விரைந்து தீர்ப்பு வழங்காத நீதிமன்றம் எல்லார் கையிலும் தான் இருக்கிறது!


Padmasridharan
ஆக 01, 2025 06:22

இந்த காலத்துல எந்த பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளை கவனிக்கிறார்கள் சாமி . அவர்கள் இருவரும் பொருளாதாரத்தை முன்னேற்றவே வேலைக்கு புறப்பட்டு போய் விடுகின்றனர். அதற்குத்தானே காவல்துறையை சமூகத்தில் விட்டு வைத்தது. இவர்களும் அதிகாரம், பணம் உள்ளவர்களை மட்டும் தனி மரியாதையுடன் கவனிக்கின்றனர். அவ்வளவு ஏன் இந்த செய்தியிலும் இவர்_அவர் என்று குறிப்பிட்டு உள்ளது. அதே மற்ற குற்றவாளிகளைப் பற்றி குறிப்பிடுகையில் அவன்_இவன் என்று ஒருமையில் குறிப்பிடுவீர். இதென்ன sports quote மரியாதையா. இவர்களுடைய பெண் மகள், அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவரின் காதலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னதாக வெளியிட்டுள்ளார். இப்படித்தானே எல்லா பெற்றோர்களும் இருக்கின்றார்கள். சொந்த பிள்ளைகளின் விருப்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் வேலை மட்டும் செய்துக் .கொண்டிருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை