உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 6 இடங்களில் புதிய புறநகர் திட்டங்கள் எப்போது?

6 இடங்களில் புதிய புறநகர் திட்டங்கள் எப்போது?

சென்னை: 'சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு நகரங்களில், கட்டமைப்பு வசதிகளுடன் புதிய புறநகர்கள் ஏற்படுத்தப்படும் என்று தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதி தொடர்பாக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என, நகரமைப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில், சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பகுதிகள், புறநகர்களாக வளர்ந்துள்ளன. முறையான திட்டமிடல் இல்லாததால், இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை போன்று, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் நெருக்கடி காரணமாக புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் அங்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற பிரதான நகரங்களுக்கு வெளியில், அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் துணை நகரங்கள் அல்லது புறநகர் பகுதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில், அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் புதிய புறநகர்கள் ஏற்படுத்தப்படும்' என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வாக்குறுதியை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சென்னைக்கு மட்டும் இடம் தேர்வு பணி நடந்து வருகிறது. இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்க தலைவர் கே.எம். சதானந்த் கூறியதாவது: வளர்ந்து வரும் ஒவ்வொரு நகரிலும், நெரிசல் அதிகமாகும் போது, அதை ஒட்டிய பகுதிகள், புறநகர்களாக வளர்வதை தடுக்க முடியாது. ஆனால், புறநகராக ஒரு பகுதி வளர்வதற்கான அறிகுறி தெரிந்ததும், அதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான நகர்களுக்கு வெளியில் நில இருப்பு, அங்கு தற்போதுள்ள சூழல், இயற்கை வளம் ஆகியவற்றை கருத்தில் வைத்து, சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். தனியார் கட்டுமான நிறுவனங்கள், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி, அதை உரிமையாளர்களுக்கு முறையாக ஒப்படைத்தால் போதும். இதில் அறிவியல் பூர்வ அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும். சென்னை பெருநகர் விரிவாக்கம், முழுமை திட்டம் தயாரிப்பு, புதிய துணை நகரங்கள் ஏற்படுத்தும் பணிகள் பாதியில் முடங்கியுள்ளன. இதனால், பிற நகரங்களில், புதிய புறநகர்கள் ஏற்படுத்துவது கேள்விக்குறி தான். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவது குறித்து, அரசு கொள்கை முடிவு எடுத்தால் தான் திட்டங்கள் தயாரிக்க முடியும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிட்டுக்குருவி
அக் 30, 2025 21:47

நல்லது .தமிழகம் பெரும் ஊழலில் இருந்து தப்பித்தது .இருக்கும் நகரங்களுக்கு பாதாள சாக்கடை ,தரமான greenways சாலைபோன்ற சாலைவசதிகளை ஏற்படுத்தும் வரை எந்த ஒருபுதிய நகர் திட்டங்களும் தேவை இல்லை .புதிய நகரங்கள் தோற்றுவிக்கும் போது கட்டாயமாக பாதாள சாக்கடை ,கழிவுநீர் சுத்திகரிக்கும் அமைப்புகளுடன் வெளியேற்றும் அமைப்புகளும் திட்டமிடல் வேண்டும் .குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் ,தெருக்களில் தொட்டிகளில் சேமிக்காமல் வெளியேற்றும் அமைப்புகளும்வேண்டும் .சுத்தம் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் .


karthik
அக் 30, 2025 11:15

நமது அரசியல்வாதிகளுக்கு அதிகார பசி இருக்கிறதே தவிர வேற எந்த திறனும் இல்லை


சமீபத்திய செய்தி