| ADDED : ஆக 24, 2025 02:54 AM
சென்னை:துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின், பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக கவர்னர் ரவி, டில்லியில் முகாமிட்டுள்ளார். டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை சந்தித்து பேசினார். இது தொடர்பாக கவர்னர் ரவி வெளியிட்டுள்ள பதிவில், 'மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை சந்தித்து, தமிழக விவசாயிகள், கைவினைஞர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். விவசாயிகள், கைவினைஞர்களின் நலன் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு, நேர்மறை ஆதரவுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தல், வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதி என்பதால், மஹாராஷ்டிரா கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். நாகலாந்து கவர்னராக இருந்த இல.கணேசன், கடந்த 15ம் தேதி காலமானார். சிலர் நீண்ட காலமாக கவர்னர் பதவியில் உள்ளனர். இதனால், துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்தச் சூழலில், கவர்னர் ரவி டில்லி சென்றிருப்பதும், அடுத்த பா.ஜ., தலைவருக்கான பட்டியலில் இருக்கும் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை சந்தித்து பேசியிருப்பதும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப் படுகிறது.