சென்னை: நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும், 1,289 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இப்பள்ளிகளில், மத்திய அரசுப் பணியில் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரின் குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
புதிய பள்ளிகள்
இதனால், கூடுதலாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. அடுத்த கல்வியாண்டில் புதிய பள்ளிகள் திறக்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாததால், கற்பித்தல் பணிகள் தொய்வடைந்துள்ளன. இதனால், பல்வேறு மாநில கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கை சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது, இடமாறுதல்களுக்கு உடன்படாத ஆசிரியர்கள் ராஜினாமா செய்வது, கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெறுவது உள்ளிட்ட காரணங்களால், படிப்படியாக காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது, 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 56,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனாலும் தற்போது, 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேநேரம், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனாலும், 2 லட்சம் மாணவர்கள் படித்த நிலையில் தற்போது, 1.35 லட்சம் மாணவர்களே படிக்கின்றனர். இதற்கு, ஆசிரியர் பற்றாக்குறையும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர். குழப்பங்கள்
இதுகுறித்து, இப்பள்ளி மாணவர்கள் கூறிய தாவது:
கே.வி., பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வு நெருங்கும்போது விடுப்பு எடுக்கின்றனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் படுகின்றனர். இரண்டு ஆசிரியர்களிடம் ஒரே பாடத்தைப் படிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், இருவருக்கும் இடையில் கற்பித்தலில் வேறுபாடு ஏற்படுகிறது. இதனால், பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.