கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?
சென்னை : 'உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணையை துவங்காதது ஏன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை:
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில், ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளதாக, தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் உள்ள ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'புரோக்கர்கள் வாயிலாக நடந்த கிட்னி முறைகேடு கொடூரமான செயல்' என கண்டித்துள்ளது. மேலும், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டது. ஆனால், ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை துவங்கவில்லை. அதே நேரத்தில், கரூர் துயரம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசு கைக்கு வரும் முன்பே, சில மணி நேரங்களில், ஐ.ஜி., தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு விட்டது. இரண்டு வழக்குகளிலும், உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருக்கின்றன. ஆனால், தங்களை சேர்ந்தவர்களின் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்தி, கிடப்பில் போடுவதுடன், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால், துரித வேகத்திலும் தி.மு.க., அரசு செயல்படுகிறது. தி.மு.க.,வின் இந்த இரட்டை வேடம், தமிழக மக்களிடம் அம்பலமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.