நடிகர் விஜய் கைது செய்யப்படுவாரா?: கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கரூர்: ''கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி, தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின், அவர் அளித்த பேட்டி: மிகுந்த துயரத்தோடு, மிகவும் கனத்த இதயத்தோடு உங்கள் முன் நான் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்த கொடூர விபத்தை விவரிக்க முடியாத அளவுக்கு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. சனிக்கிழமையன்று சென்னையில் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது, கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு, பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்ற தகவல் கிடைத்தது . உடனே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு, மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்றேன். அதன் பிறகு, கலெக்டர் தங்கவேலை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவரும் சில தகவல்களை கூறினார். அடுத்த ஐந்து நிமிடங்களில் மருத்துவமனைக்கு முதலில் நான்கு, ஐந்து பேர் கொண்டு வரப்பட்டனர் என்ற செய்தி வந்தது. நேரம் செல்ல செல்ல அதிக நபர்களை கொண்டு செல்கின்றனர் என்று சொன்னார்கள். அதை தொடர்ந்து, மரண செய்தி வர ஆரம்பித்து விட்டது. உடனடியாக தலைமை செயலகத்துக்கு சென்று உயர் அலுவலர்களுடன் ஆலோசித்து, என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எப்படி மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற விபரங்களை கேட்டேன். இந்த சம்பவத்தில் 40 உயிர்களை இதுவரை நாம் இழந்திருக்கிறோம். இதில், 14 ஆண்கள், 17 பெண்கள், நான்கு ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் இறந்துள்ளனர். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்த துயர சம்பவம் இதுவரை நடக்காதது. மருத்துவமனைகளில் 26 ஆண்கள், 25 பெண்கள் என, 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். கரூர் சம்பவத்திற்கு பொறுப்பாக்கி, த.வெ.க., தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என முதல்வரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் அறிக்கை அளித்த பிறகு முழுமையாக சொல்கிறோம். இதற்கிடையில், அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. அந்த ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும். உண்மை வெளிவரும் போது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.