உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் முயற்சி பலிக்குமா? : நகர்ப்புற வாக்காளர்களை ஈர்க்க வியூகம்

ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் முயற்சி பலிக்குமா? : நகர்ப்புற வாக்காளர்களை ஈர்க்க வியூகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தல்களில் நகர்ப்புற வாக்காளர்களின் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, தேர்தல் கமிஷன் புதிய முயற்சியை எடுத்துள்ளது. வார இறுதியில் நடத்தினால், மக்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்வதை தடுக்கும் நோக்கத்துடன், வார நாட்களில் தேர்தல் நடத்த கமிஷன் திட்டமிட்டுள்ளது.உலகளவில், 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடன், அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் முதலிடத்தில் நம் நாடு உள்ளது.அதுபோல, 97 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுடன், உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாகவும் உள்ளது.ஆனால், ஓட்டளிக்க தகுதியுள்ள அனைவரும் தேர்தலில் தங்களுடைய பங்களிப்பை செய்கின்றனரா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இதுதான், தேர்தல் கமிஷனுக்கு உள்ள மிகப்பெரும் பிரச்னையாகவும், சவாலாகவும் உள்ளது.

சாத்தியமில்லை

தேர்தலில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் சட்டம், 1892ல் பெல்ஜியத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.அர்ஜென்டினா - 1914ல், ஆஸ்திரேலியா - - 1924ல் கட்டாயமாக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தலில் ஓட்டளிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நம் நாட்டிலும் ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது தொடர்பான தனிநபர் மசோதா, பார்லிமென்டில் 2019ல் விவாதிக்கப்பட்டது. ஆனால், 2022ல் அதற்கு சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.தேர்தல்களில் மக்கள் ஓட்டளிப்பதை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகளில் தேர்தல் கமிஷன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தாண்டு நடந்த பொதுத் தேர்தலுக்கு முன், குறைந்த ஓட்டு சதவீதம் குறித்த மாநாட்டை, தேர்தல் கமிஷன் ஏப்ரலில் முதல் முறையாக நடத்தியது. இதில், பல்வேறு மாநகராட்சிகளின் கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிராமப் பகுதிகளைவிட, நகர்ப்பகுதிகளில் ஓட்டளிப்பது குறைவாக இருப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.நகர்ப்பகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைவாக இருப்பது தொடர்பாக பல கருத்துகள் அதில் தெரிவிக்கப்பட்டன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்க, நகராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.இதன் ஒரு பகுதியாகத்தான், சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலின்போது, குர்கான், பரிதாபாத், சோனிபட் போன்ற நகர்ப்பகுதிகளில், மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பிரத்யேக ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன; இதற்கு பலனும் கிடைத்தது.நகர்ப்பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவதற்கு முக்கிய காரணம், தேர்தல் விடுமுறை நாளோடு மற்ற விடுமுறைகளை சேர்த்து மக்கள் வெளியூர் செல்வது, சுற்றுலா செல்வது போன்றவையே முக்கிய காரணமாகும்.இது, தேர்தல் கமிஷனின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, புதன் கிழமையான, நவ., 20ம் தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நம்பிக்கை

இதன் வாயிலாக, வார இறுதி நாட்களுடன் சேர்த்து வெளியூர் செல்வது குறையும் என, தேர்தல் கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.'திட்டமிட்டே புதன்கிழமையன்று ஓட்டுப்பதிவு வைத்துள்ளோம். இது, நகர்ப்புற பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறையும் சவாலை எதிர்கொள்ள உதவும் என்று நம்புகிறோம்' என, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.இதையெல்லாம்விட, ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் நடைமுறை மீதும், அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழப்பது ஒரு முக்கியமான பிரச்னையாகும்.ஆனால், அரசியல் கட்சிகள் இதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. பதிவாகும் ஓட்டுகளில் அதிக ஓட்டு பெறுவோரே வெற்றி பெறுவர் என்பதால், ஓட்டுப்பதிவு அதிகரிக்காமல் இருப்பது, அரசியல் கட்சிகளுக்கு ஒரு பிரச்னையே இல்லை.குறைந்த ஓட்டுப்பதிவுதேர்தல் கமிஷனின் புள்ளி விபரங்களின்படி, 2019 லோக்சபா தேர்தலின்போது, குறைந்த ஓட்டுப்பதிவு நடந்த 50 தொகுதிகளில், 17 தொகுதிகள் நகர்ப்பகுதிகளாகும். இதுவே, 2024 தேர்தலில் இன்னும் மோசமாக இருந்தது.நகர்ப்பகுதிகளில், 2019ல் 59.98 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, 2024ல் 53.6 சதவீதமாக இருந்தது. உதாரணத்துக்கு லக்னோவில், 2019ல் 54.78 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, 2024ல் 52.28 சதவீதமாக குறைந்தது. காந்திநகரில் 66.08 சதவீதம், 59.80 சதவீதமாக குறைந்தது.மும்பை வடக்கில், 60.09 சதவீதத்தில் இருந்து, 57.02 சதவீதமாகவும், ஜெய்ப்பூரில் 68.48 சதவீதத்தில் இருந்து 63.38 சதவீதமாகவும் குறைந்தது. திருவனந்தபுரத்தில் 73.74 சதவீதம், 66.47 சதவீதமாக குறைந்தது. குவஹாத்தியில் 80.87 சதவீதம், 78.39 சதவீதமாக குறைந்தது. ஜபல்பூரில் 69.46 சதவீதம், 61 சதவீதமாக குறைந்தது. மதுராவில் 61.08 சதவீத ஓட்டுப்பதிவு, 49.41 சதவீதமாக குறைந்தது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
அக் 20, 2024 05:14

லஞ்சம் வாங்குவது நிறுத்திட்டு, உண்மையா உழைக்கிற அரசு அதிகாரிகள் இருந்தாலே போதும்.. வோட்டுப்பதிவு அதிகரிக்கும் ஆசானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை